top of page

ஆசிரியர் பற்றி 

_DSC2333 (1).JPG

எனது பெயர் தெய்வீகன். இயற்பெயரே அதுதான்.

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் எனது பிறப்பிடம். வரலாற்றில் பெறுமதி மிக்க அரிய தியாகங்களை நல்கிய பெருநகர் மானிப்பாய். பதினெட்டாம் நூற்றாண்டில் தெற்காசியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது பெரிய போதானா வைத்தியசாலை அமைந்த பெருநகர் என்பது உட்பட நீண்ட வரலாற்றையும் வரலாற்று நாயகர்களையும் சுமந்த பெருமிதம் மானிப்பாயிற்கு உண்டு. சுற்றிலும் கொலுவிருக்கும் ஆலயங்களில் பஞ்சபுராணங்களைப் பண்ணிசைத்து சைவக் குழந்தையாக வளர்ந்தவன் நான். ஆரம்பக் கல்வியை மானிப்பாயில் முடித்துக்கொண்டு, மேற்படிப்புக்காக யாழ் இந்துக்கல்லூரி சென்றேன். அதனை அங்கு நிறைவுசெய்தபின்னர், பத்திரிகைத்துறைக்குள் நுழையும்போது எனக்கு வயது 18. அன்றிலிருந்து எழுத்து என்னைத் தீராக் களி நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டேயிருக்கிறது.

சுயாதீனமாக எங்கள் எழுத்துக்களை நாங்களே வெளியிடும் வசதியை உருவாக்கிய வலைப்பூ காலத்தில் எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். பத்திரிகைத்துறை எழுத்து விதிகளுக்கு வெளியே, எனக்கான எழுத்தை - புனைவை நோக்கிய எத்தனத்தை - வலைப்பூ என்னைப்போன்றவர்களுக்கு உவந்தளித்தது.

நான் வாழ்ந்த அரசியல் சூழலும் - தலைமேல் கூடுகட்டி நின்ற போரும் - இயல்பாகவே தமிழ்த் தேசியத்தின் பெறுமதியை என் எழுத்துக்குள் சுடராய் ஏற்றியது. ஈழ அரசியலின் உறுதியான இருப்புக்கு விறகாய் எரிந்த பல லட்சமானவர்களில், எனது எழுத்துக்களும் சேர்ந்து நின்றது. அதுவே என்னை சொந்த நிலத்திலிருந்து துரத்தத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்தேன். அங்கும் சில தேசிய பத்திரிகைகளில் பணிபுரிந்தேன். 2004 இல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தேன். புலம்பெயர்ந்த பிறகும் அரசியல் கட்டுரைகளையே அதிகம் எழுதினேன். 2019 இல் கொழும்பு 'தமிழ் மிரர்" பத்திரிகையில் வெளியான எனது அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு 'காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" என்ற பெயரில் கிளிநொச்சி மகிழ் பதிப்பகத்தினால் வெளியானது. அதுவே அச்சியில் வெளியான எனது முதலாவது நூல்.

ஒருகட்டத்தில், ஈழத்தின் அரசியலும் அங்கு நிகழ்ந்த சமூக மாற்றங்களும் புலம்பெயர் தமிழ்த்தேசிய அரசியலும் நான் கொண்டிருந்த உறுதியான பல நம்பிக்கைகளைச் சிதைத்தது. கூடவே, புலம்பெயர் வாழ்வில் நான் சந்தித்த பெரும் சுழல்களும் இணைந்து, வாழ்வின் கருணையற்ற பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யத்தொடங்கியது. மரித்தெழுந்து சிரித்தபடி மனிதர்களை எதிர்கொள்ளவேண்டிய இரண்டாம் வாழ்வை விதி எனக்கு அருளியது. புனைவொரு நெடுங்கொழுந்தாய் பற்றிக்கொண்ட தருணம் இதுதான். எல்லாப் புலம்பெயரிகளையும் போல் அல்லாது எனக்குள் முடிவிலா ஆயுளோடு தேங்கத் தொடங்கிய பல கதைகளின் பாரத்தை நான் உணர்ந்தேன். புனைவினால் கருவுற்றேன்.

பத்திரிகைத்துறையில் ஆதர்ஷங்களாகக் கூடவே பணிபுரிந்த வித்தியாதரன், தராக்கி, இரட்ணசிங்கம் போன்றவர்களின் எழுத்தின் விதிகளிலிருந்து விலகி, புனைவுக்கான ஒரு மொழியை உருவாக்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டேன். புனைவின் மீதான தீவிர வாசிப்பினை எனக்குள் யாகமாய் வளர்த்தேன். பேராளுமைகளான ஜெயமோகன், முத்துலிங்கம், உமா மகேஸ்வரி போன்றவர்களின் எழுத்துக்களும் டால்ஸ்டாயும் அன்டன் செக்கோவும் முழுநேர தாதிகளாக, என்னையும் என் எழுத்துக்களையும் மீளுருவாக்கம் செய்யத் தொடங்கின. (இன்று மலையாள எழுத்தாளர் மீராவைப் படிக்கும்போது, அவரது எழுத்துப்பயணத்தை எனக்கு நெருக்கமாக உணர்கிறேன். அவரும் ஒரு பத்திரிகையாளராக எழுத்துலகில் பிரவேசித்து, பின்னர் புனைவுக்குள் சந்தி பிரிந்தவர். இன்று எனது பேரபிமானத்துக்குரிய எழுத்தாளர்)

ஆனந்த விகடனின் வெளியான 'அடுத்த கட்டப் போராட்டம்" - என்ற முதலாவது சிறுகதை என்னைக் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் எழுத்துலகில் அடையாளம் காட்டியது. அதன் பின்னர், அம்ருதா, வல்லினம் போன்ற இணை இதழ்களில் எனது கதைகள் பிரசுரமாகத் தொடங்கின.

நல்லோர் உறவும் நல் வாய்ப்புக்களும் ஒரு எரி நட்சத்திரமாய் எம் முன் விழுவது காலத்தில் அரிதாய் நிகழும் நல்லூழ். 'தமிழினி" பதிப்பக உரிமையாளர் அண்ணாச்சி வசந்தகுமாரின் அறிமுகம் வாய்த்தது. முகநூலில் எனது எழுத்துக்களை தொடர்ச்சியாக தான் ரசிப்பதையும் ஈழ எழுத்துக்களில் புதிதாய் முகிழும் அங்கதத்தை என் பதிவுகளில் கண்டு மகிழ்ந்ததையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். எனது முதலாவது புனைவு 'அமிலா" சிறுகதை நூல் தமிழினி பதிப்பகம் வழியாக வெளியானது. அத்துடன் அண்ணாச்சிக்கு மிகவும் பிடித்த எனது அங்கதப் பதிவுகளின் தொகுப்பான 'தாமரைக்குள ஞாபகங்கள்" நூலும் வெளியாகி, தமிழ் இலக்கியத்திலும் தமிழகச் சூழலிலும், தெய்வீகன் என்ற எழுத்தாளனின் வரவினை முரசறைந்து கட்டியம் சொன்னது.

முதல் தொகுப்பின் வெளியீட்டினை தலைமை தாங்கிய பேராசியர் அ.ராமசாமி எனது எழுத்துக்களை அன்று முதல் தமிழகச் சூழலில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருபவர். புலம்பெயரிகளின் பண்பாட்டு சிக்கல்களைச் சரியாகக் கதையாக்கும் தெய்வீகனது புனைவு தமிழுக்கு ஒரு புதுவரவு என்றார். பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் அநேகமாக எனது எல்லாக் கதை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் 'யாவரும்" இணையத்தில் எழுத்தாளர் அகரமுதல்வன் தொகுத்த 'அந்தகம்" இதழில் வெளியான 'அவனை எனக்குத் தெரியாது" - என்ற எனது சிறுகதை தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஈழத்திலும் என்னைச் செறிவாகக் கொண்டுபோய் சேர்த்தது. அந்தக் கதையே எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'உன் கடவுளிடம் போ" நூலுக்கு அறிமுகமுமானது. இலக்கிய அறிமுகவாளர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் இந்தக் கதை குறித்து எழுதும்போது 'தமிழ் இலக்கியத்தில் கடந்த பத்துவருடங்களில் வெளியான சிறந்த சிறுதைகளின் வரிசையில் 'அவனை எனக்குத் தெரியாது" சிறுகதைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு" என்று குறிப்பிட்டார்.

எனது முதன்மையான ஆதர்ஷமும் புனைவின் பிதாமகனுமான ஜெயமோகன் அவர்களது தீராத ஊக்கம் எனது எழுத்துக்களில் பெருமளவுண்டு. எனது சிறுகதைகளை அவர் தனது இணையத்தளத்தில் கவனப்படுத்தும்போதும் - அவற்றுக்கான அறிமுகங்களை வழங்கும்போதும் - எனது எழுத்துக்கள் இரட்டை ஆயுளை அடைந்துவிடுவதாகவே உணர்வேன். எனது அடுத்த புனைவுக்கான சொல்லை என் கைகளில் அருளியதைப் போல் உணர்வேன். விகடனில் வெளியான எனது 'நாடற்றவர்களின் கடவுச்சீட்டு" நூல் வெளியீட்டினைத் தலைமைதாங்கி ஜெயமோகன் பேசிய உரை என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மிக முக்கியமான முகவரி.

எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்கு சிறுப்புப் பேச்சாளராக வருகை தந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இன்றுவரை எனது எழுத்துக்களை வாசகர்களிடம் கவனப்படுத்திவருபவர். எழுத்தாளர்கள் அகரமுதல்வன், தமிழ்பிரபா, லக்ஷ்மி சரவணகுமார், யுகபாரதி, லதா அருணாச்சலம் ஆகியோரது தொடர்ச்சியான ஊக்கமும் எனது எழுத்துக்களை நம்பிக்கையோடு பெருங்களங்களில் இவர்கள் பரிந்துரைக்கும் தீராப் பற்றும் என் சொற்கள் எரியும் தீபத்தை அணையாத காத்துக்கொள்கின்றன.

ஒரு நவீன புலம்பெயரியாக, அந்நிய நிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய அபூர்வமான நிகழ்வுகள், புலம்பெயர்தலில் இருக்கக்கூடிய அரூபமான சிக்கல்கள் போன்றவை எடுத்தவுடன் எழுதுவதற்குத் தூண்டக்கூடியவைதான். ஆனால், சொந்த நிலத்தில் பறிக்கப்பட்ட எனது வாழ்வினை, புதிய தேசத்தின் பூர்வீகர்களின் மனசாட்சியோடு சமாந்தரமாக வைத்து நோக்க விளைபவை எனது கதைகள். அவர்களின் வலிகளோடு அருகிலிருந்து பேசக் கோருபவை. இவற்றை வெறும் சம்பவங்களாகப் பதிவு செய்து வரலாற்றில் கரைத்துவிடுவதிலும் பார்க்க - அரிய காலமொன்றின் மனசாட்சியை - மனப்போராட்டத்தை - மன வடுக்களை - நுட்பமாகப் பதிவு செய்வதற்கு புதிய புலம்பெயர் இலக்கியப் பார்வையொன்று தேவையாகிறது. இந்தப் புனைவுவிற்கான உந்துதலை எனக்குள் விதைத்தவர் ஈழத்தின் கவிஞர் கருணாகரன். நான் புனைவின் வழி உள்வாங்கப்படுவதற்கு ஆதாரமானவர். எனது எழுத்தையும் வாசிப்பையும் வழிப்படுத்தியவர்.

இந்தவகையான புதிய புலம்பெயர் இலக்கியம் வகைமை குறித்து, 2023 இல் சென்னையில் அண்ணா நூற்றாண்டு ஞாபகார்த்த நூலகத்தில் இடம்பெற்ற 'தமிழ் இலக்கியத் திருவிழா" நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறேன். அட்லஸ் அமைப்புடன் இணைந்து செயலாற்றுகிறேன். தமிழகத்திலோ ஈழத்திலோ புலம்பெயர் நாடுகளிலோ வெளியாகும் நல்ல புத்தகங்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து ஆர்வமுடைய வாசகர்களுக்கு பெற்றுக்கொக்கிறேன். ஆஸ்திரேலியாவில் உருவாகிவருகின்ற புதிய வாசகர்களுடன் - புதிய இலக்கிய ஆர்வலர்களுடன் - கலந்துரையாடல்களை மேற்கொள்கிறேன். அவர்களில் எழுதக்கூடியவர்களை தமிழகச் சூழலில் அறிமுகம் செய்கிறேன்.

  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page