சமரச மரணம்
நாம் இறந்த பிறகும் நம்முடைய உடல் எங்கோ ஒரு இருளான அறையில் விழித்தெழுவதற்காகக் காத்திருக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆஸ்திரேலியாவில் அப்படிக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.

மரணம் வந்தவுடன் உடல் மண்ணுக்கோ, நெருப்புக்கோ ஒப்படைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அறிவியலின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. உடலைப் பதப்படுத்தி, உறையவைத்து, எதிர்காலத்தின் ஏதோ ஒரு நாளுக்காகப் பாதுகாக்கிறார்கள் இவர்கள்.
அந்த நாளில், மரணத்தைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டால்? ஒரு காலத்தில் நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்ய முடியுமானால்? இன்று இறந்தவன், நாளை மீண்டும் தனது கண்களைத் திறக்க முடியுமானால்?
அந்த ‘நாளை’ நம்பி, சிலர் இரண்டு லட்சம் ஆஸ்திரேலிய டொலருக்கும் அதிகமான பணத்தைச் செலுத்திவிட்டு, தங்களது உடல்களை எதிர்காலத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இது ஒரு அறிவியல் புனைகதையைப் போல ஒலிக்கலாம். ஆனால், இந்தக் கதை ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய நகரத்தில் உண்மையிலேயே உறைந்து கிடக்கிறது.
கடந்த வருடம், மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு வேலைக்குப் போனபோது, அலுவலகத்தில் தலைமை அதிகாரி Sally என்னிடம் வந்து -
“Driving எப்படி?”
நான் வழக்கம்போல நீண்ட பயணத்தைப் பற்றி அபிநயங்களோடு பேச ஆரம்பித்தேன்.
“Holbrook பகுதியில் காரை charge செய்ய நிறுத்தினாயா?”
“ஆம்…”
“அங்கே ஒரு வித்தியாசமான இடம் இருக்கிறது தெரியுமா?”
அவள் சொன்ன அடுத்த வாக்கியம் எனக்குள் உறைபனியாய் விழுந்தது.
“அங்கு ஒரு பதப்படுத்தும் மருத்துவ ஆலையில் இறந்தவர்களின் உடல்களை உறைய வைத்து பாதுகாக்கிறார்கள் எதிர்காலத்தில் அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில்.”
மரணத்துக்கும் எதிர்காலத்துக்கும் நடுவே மனித உடலை ஒரு இடைநிலையாக வைத்திருக்க முடியுமா?
அந்த உரையாடலுக்குப் பிறகு Holbrook எனும் பெயர் எனக்குள் வேறு ஒரு அர்த்தத்தைப் பெற்றது. தேடத் தொடங்கினேன். அப்போதுதான் அந்த நகரம் இன்னொரு கதவையும் திறந்தது.
ஒருகாலத்தில் Germanton என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறிய நகரம் பின்னர் Holbrook என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்தப் பெயர் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தளபதியின் நினைவோடு இணைந்தது.
அதிலும் வியப்பானது, கடலிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த நகரத்துக்குள், ஒரு உண்மையான நீர்மூழ்கிக் கப்பல் வந்து நிற்கிறது. கடலில் பயணிக்க வேண்டிய ஒன்று, நிலத்தின் நடுவே ஒரு நினைவுச் சின்னமாக நிற்கிறது. கடலின் இருளிலிருந்து நிலத்தின் நினைவுக்குள் வந்து நிற்கிறது.
அதற்குப் பிறகு அதே நகரத்தைப் பற்றி நான் இன்னொரு செய்தியை அறிந்தேன்.
அங்கே, Southern Cryonics என்ற நிறுவனம், 2023 ஆம் ஆண்டு cryonics facility ஒன்றைத் தொடங்கியிருந்தது. மரணித்தவர்களின் உடல்கள் சுமார் -196°C வெப்பநிலையில் - திரவ நைதரசனுக்குள் - பாதுகாக்கப்படுகின்றன. இப்போது அங்கே ஏழு மனிதர்கள் மறுபிறப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் இறந்தவர்கள். ஆனால் இவர்களுடைய உடல்கள் இன்னும் எதிர்காலத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் இருக்கின்றன.
மரணத்துக்குப் பின்னர் vitrification என்ற முறையில் உடலைப் பாதுகாத்து, ஒருநாள் அறிவியல் மரணத்தைத் திருத்தக்கூடிய அளவுக்கு வளர்ந்தால் மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்ற நம்பிக்கை. அதற்காக செலுத்தப்படும் தொகை A$200,000 க்கும் அதிகம்.
ஆனால், இறந்த மனித உடலை எதிர்காலத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும் இவர்கள் காத்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர், தாங்கள் இறந்தவுடன் இவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று - மறுபிறவியின் மீதான அதீத நம்பிக்கையுடன் விண்ணப்பித்து - காசையும் கட்டிவிட்டு - நைதரசன் தொட்டிக்குள் உறங்கக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒரு கணவன் - மனைவி சோடி, மருத்துவப் புரட்சியால் தாங்கள் மீண்டும் உயிர்பெற்றால், அடுத்த பிறப்பிலும் கணவன் - மனைவியாகவே வாழவேண்டும் என்று உறுதிபூண்டிருக்கிறார்கள். இன்னுமொரு வகையில் சொல்லப்போனால் double risk எடுத்திருக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவு அல்ல. அது ஒரு இடைநிறுத்தம். ஒரு நீண்ட காத்திருப்பு. ஒரு நாள் எதிர்காலம் வந்து கதவைத் திறக்கும் என்ற நம்பிக்கையில், பனிக்குள் வைக்கப்பட்ட ஒரு இடைவேளை.
இதைப் படித்தபோது Holbrook எனக்கு ஒரு விசித்திரமான நகரமாகத் தோன்றியது.
அந்த அனுபவத்திலிருந்துதான் “மாயச்சூது” சிறுகதைத் தொகுப்புக்காக ஒரு சிறுகதை பிறந்தது. சில கதைகளை நாம் எழுதுவதில்லை. அவை ஏற்கெனவே நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.
போனவாரம் Holbrook தாண்டிவரும்போது, நீர்மூழ்கிக் கப்பலை மீண்டும் கண்டு வந்தேன். அந்த நகரின் காற்று எதிர்காலத்தை நிறுத்திவைத்திருப்பதுபோல ஒரு மர்மமான மௌனத்தோடு வருடியோடியது.




Comments