முருகபூபதி: கங்காரு தேசத்தின் கற்பகதரு
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிட்னிக்கு வந்திருந்த கிழக்கிலங்கை எழுத்தாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனைச் சந்திப்பதற்காக எழுத்தாளர் முருகபூபதியும் நானும் மெல்பேர்னிலிருந்து ரயிலில் புறப்பட்டோம். நான் மெல்பேர்னிலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ரயிலில் சென்றது அதுவே முதல் தடவை. ஆஸ்திரேலிய ரயில் சேவைகளிலிருந்த மிச்ச சொச்ச மதிப்பினையும் கீழிறக்கிக்கொண்ட பயணம் அது. அந்தக் கண்டன உரை இந்தப் பதிவுக்குத் தேவையற்றது என்பதால், விஷயத்துக்கு வருவோம். சிட்னிக்குச் சென்று நல்லதொரு மழை நாளில் செங்கதிரோனை சந்தித்தோம். சிட்னி எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்குபற்றிய நிறைவான ஒரு சந்திப்பாக அது அமைந்தது.
நிகழ்வினை முடித்துக்கொண்டு ஓரிரு நாட்கள் சிட்னியில் தங்கிவிட்டு மெல்பேர்ன் புறப்படுவதற்கு சிட்னி ரயில் நிலையத்திற்கு நானும் முருகபூபதி அவர்களும் வந்தோம். ஆனால், சிட்னி ரயில் நிலையத்திலிருந்து மெல்பேர்னுக்குப் புறப்படும் ரயிலில் ஏதோ சிக்கல். ஆனால், பயணிகள் அனைவரையும் கோல்பேர்ன்வரை சிறப்புப் பேரூந்தில் கொண்டுபோய் விடுவதாகவும், அங்கிருந்து மெல்பேர்னுக்குரிய ரயில் எங்களை ஏற்றிச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதுவும்கூட புதிய அனுபவம்தானே. சிட்னி ரயில் நிலையத்திற்கு வெளியே எமக்கான சிறப்புப் பேரூந்துக்காகக் காத்திருந்தோம். கோல்பேர்ன் பெருநகர் சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு வரும் வழியிலுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர பயண நேரம். ஆஸ்திரேலியாவின் அதி உச்ச பாதுகாப்புக்கொண்ட சிறைச்சாலை அங்குதானுள்ளது.
பேரூந்தில் ஏறியவுடன் வலப்பக்கமாக முன்வரிசையில் எனக்கு இருக்கை தரப்பட்டது. ஒன்றாகவே நாங்கள் ரயில் பயணத்துக்குப் பதிவு செய்திருந்தாலும் முருகபூபதி அவர்களுக்கு எனக்கு பின் வரிசையிலேயே ஆசனம் வழங்கப்பட்டது.
“தம்பி, நீங்கள் ஓகேதானே….”
எழுந்து வந்து என்னை விசாரித்து, எனது இருப்பினை உறுதிசெய்துகொண்ட பின்னர், முருகபூபதி அவர்கள் தனது ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.
மெல்லிய மழை பேரூந்துக் கண்ணாடியில் தாளமிட்டபடியிருந்தது. நான் கண்ணயர்ந்துவிட்டேன்.
“தம்பி, இறங்கவேணும். எழும்புங்கோ”
முருகபூபதி அவர்களின் குரலோடு எழுந்த எனக்கு முன்னால், கோல்பேர்ன் ரயில் நிலையத்தின் பெயர்பலகை முழுசிக்கொண்டு தெரிந்தது.
சகல பேரூந்துப் பயணிகளும் மெல்பேர்ன் செல்லும் ரயிலுக்கு மாற்றப்பட்டார்கள். விடிகாலை மெல்பேர்னுக்கு ரயில் வந்து சேர்ந்தது. முருகபூபதி அவர்களிடம் விடைபெற்றுவிட்டு, நான் இன்னொரு ரயில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர் அப்போது தங்கியிருந்த விக்டோரியாவின் புறநகர் கிராமமான மோர்வலுக்கு ரயிலில் புறப்பட்டுவிட்டார்.
அடுத்தநாள் நான் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, அநாமதேய இலக்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
“நியூ சவுத்வேல்ஸ் பொலீஸிலிருந்து பேசுகிறோம். நீங்கள் நேற்றைய தினம் சிட்னியிலிருந்து மெல்பேர்ன் வந்தவர் இல்லையா”
காரைத் தெருவோரமாக நிறுத்தினேன்.
“ஆம்….”
அந்தப் பதிலைக் கூறும்போது எனக்கு எந்தவிதமான பயமோ பதற்றமோ இல்லை என்று ஒரு மாபெரும் பொய்யைக்கூறிவிடவேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால், இன்று அந்தச் சம்பவத்தை நினைத்தாலும் ஒரு கணம் உடல் அதிர்கிறது. அந்த அழைப்பு வந்த நேரம், நான் காரை நிறுத்திய தெருவோரம், தொலைபேசியில் கேட்ட பெண்ணின் குரல் என்று அனைத்தும் நினைவில் நிரந்தரமாய் ஒட்டிக்கிடக்கின்றன.
அவள் தொடர்ந்தாள்.
“நீங்கள் வந்த பேரூந்தில் உங்களுக்கு அருகிலிருந்து வந்தவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” ஞாபகம் உள்ளதா”
முருகபூபதி அவர்கள் பின் வரிசையிலிருந்தவர் என்று தெரியும். ஆனால், எனக்கருகிலிருந்தவர் யார்? நான்தான் பேரூந்துக்குள் ஏறியதுமுதல் வெளியே மழையப் பார்த்து ரசித்துவிட்டு, அப்படியே அயர்ந்துவிட்டேனே. இருளிலிருந்து எனது நினைவின் சரடொன்றையாவது ஞாபகத்துக்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்தேன். கேட்பது பொலீஸ் ஆயிற்றே. இருந்தாலும் முடியவில்லை.
“இல்லையே…நான் தூங்கிவிட்டேன். ஏன் கேட்கிறீர்கள்”
“ஒரு பச்சைக் கலர் பொதியோடு……”
“இல்லை, நினைவில்லை, ஏன் கேட்கிறீர்கள் என்று நீங்கள் கூறவில்லையே….”
தொடர்ச்சியாகப் பதிலளித்ததில் பயம் கரைந்து, எதிர்க்கேள்வி கேட்குமளவுக்கு துணிவு வந்துவிட்டது.
“சிட்னியில் ஒரு மூதாட்டியைக் கொலைசெய்துவிட்டு, இளைஞன் ஒருவர் நீங்கள் வந்த பேரூந்தில்தான் நேற்றிரவு கோல்பேர்ன்வரைக்கும் வந்து, அங்கிருந்து மெல்பேர்னுக்கு வந்திருக்கிறான். அவன் மெல்பேர்னில் எங்கே பயணமானான் அல்லது அவன் குறித்த மேலதிக விவரங்கள் யாருக்காவது தெரியுமா என்று அந்தப் பேரூந்தில் பயணம் செய்தவர்களை விசாரித்துவருகிறோம்”
சற்றுமுன்னர் எனக்குள் சுரந்த அரை அவுன்ஸ் துணிச்சலும் அடிவயிற்றில் எடையற்று விழுந்தது. உடல் முழுவதும் குளிரால் ஒரு கணம் விறைத்துப் பின் உதறியது. ஒரு நொடி, அந்த அழைப்பு யாராவது விளையாட்டுக் காட்டும் ஏமாற்று நாடகமாக இருக்குமோ என்றெழுந்த சந்தேகமும் சமாதியாகிவிட்டது. இப்படி அச்சொட்டான தகவலுடன் வந்து யாராவது சில்மிஷம் பண்ணப்போகிறார்களா என்ன?
இதற்குள் இன்னொரு சுவாரஸ்யம், இந்தச் சம்பவம் நடைபெவறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான், நான் ஒரு பலியாடாக - பிறிதொரு சம்பவத்தில் - சிறை சென்று வந்திருந்தேன். அந்தக் கெடு நினைவுகளிலிருந்து நான் மீண்டுகொண்டிருந்த காலமது. அப்போதெனப் பார்த்து, இப்படியொரு அழைப்பு வந்தவுடன், நான் விதியின் விருப்பத்துக்குரிய விளையாட்டுப் பொருளாகவிட்டேனோ என்றொரு கணம் காலம் என் முன்னால் சொக்கப்பானைபோல வெடித்துப் பறந்தது.
“இல்லை, எனக்கு நினைவில்லை. நான் பயணத்தில் தூங்கிவிட்டேன். நீங்கள் கூறுவதைப்போல யாரும் எனக்கருகில் இருந்ததாகவும் ஞாபகமில்லை”
ஒரே பதிலை பல உருண்டைகளாக சொற்களில் நான் உருட்டியதிலிருந்து, என்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்பதை உணர்ந்த அழைப்பாளினி நன்றியுடன் உரையாடலை முடித்துக்கொண்டார்.
அவர் அழைப்பை வைத்த அடுத்த நொடி, முருகபூபதி அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.
“தம்பி, உங்களுக்கு பொலிஸிடமிருந்து ஒரு அழைப்பு வந்ததா”
ஓரளவுக்கு நம்பிக்கையான கேள்வியாக உணர்ந்தேன்.
“யாரோ கொலைசெய்துவிட்டு, நாங்கள் வந்த பஸ்ஸில…….
“ஒம்…ஓம்…எனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கோல் பண்ணிக்கேட்டவங்கள். நீங்கள் ஒண்டும் பதற்றப்படவேண்டாம். இனி ஏதாவது அது தொடர்பாக கோல் வந்தால், என்ர நம்பரக் குடுங்கோ. நான் கதைக்கிறன். எக்காரணம் கொண்டும் நீங்கள் கதைக்கவேண்டாம். நான்தான் உங்கள சிட்னிக்குக் கூட்டிக்கொண்டு போனனான். நீங்கள் என்னோடதான் வந்தனீங்கள் எண்டு நான் சொல்லுவன். திரும்பவும் கோல் வந்தால் எனக்குச் சொல்லுங்கோ”
ஆஸ்திரேலியாவில் முருகபூபதி அவர்கள் ஒரு தந்தையாக உணர்ந்த தருணம் அது. அதுவே அவர் தொடர்பாக எனக்குள் இன்றளவும் வியாபித்திருக்கும் விம்பம்.
(சிட்னியில் குறிப்பிட்ட கொலையை மேற்கொண்ட பத்தொன்பது வயது இளைஞன், உண்மையிலேயே அன்றிரவு நாங்கள் வந்த பேரூந்தில்தான் வந்திருக்கிறான். மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு, அவரது சுபரு காரை பென்ரித் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, மெல்பேர்னுக்குத் தப்பி வந்தவனை அடுத்தடுத்த வாரங்களில் மெல்பேர்னின் மேற்குக் கிராமமான என்ஹில் பகுதியில் வைத்துப் பொலீஸார் கைது செய்தனர் என்ற செய்தியைப் பின்னர் அறிந்துகொண்டேன்)

எனது மாமி எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி வழியாக மெல்பேர்னில் அறிமுகமான முருகபூபதி அவர்களை கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் அறிவேன். அன்றிலிருந்து என்னில் உரிமையோடு அக்கறை செலுத்துபவர் என்றாலும், பத்து வருடங்களுக்கு முன்னர், என் வாழ்வில் ஏற்பட்ட பெருந்துயரின்போது, எனக்குள் எனக்காக ஒரு நம்பிக்கை விருட்சமாக என்னைப் பற்றியிருந்தவர் முருகபூபதி அவர்கள்.
நான் எழுத்தைப் பற்றியிருக்கவேண்டும் என்று அன்று முதல் இன்றுவரை உறுதியோடு விரும்புகிறவர். எனது அனைத்துப் புத்தகங்களையும் படித்து, அதற்கு சிறுகுறிப்பையாவது எழுதித் தனது தொடர்பிலுள்ள அனைவருக்கும் அனுப்பிப் பெருமை கொள்பவர். மெல்பேர்னில் என்னை ஒரு எழுத்தாளராகப் பலரிடம் கொண்டுபோய் சேர்த்தவர் முருகபூபதி அவர்கள்தான். ஆஸ்திரேலியாவில் எனது எழுத்துக்களைவிட, எனது எழுத்துக்களுக்கு அவரே முகவரி.
இந்தப் பண்பும் பழக்கமும் அவருக்கு குறிப்பிட்ட சிலரில் மாத்திரம் ஏற்படுவதல்ல. எல்லோருக்காகவும் எப்போதும் சிலுவை சுமப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் உள்ளம் அவருடையது. அந்தத் துணிவை அவரது அனுபவம் கொடுத்ததா அல்லது வாழ்வில் கடந்து வந்த காயங்கள்தான் பயிற்றுவித்தனவா என்று சில வேளைகளில் நான் எண்ணுவதுண்டு.
அந்தக் கனிவின் தொடர்நிலையை அவர் தனக்குள் என்றைக்குமே தொய்வடைய அனுமதித்ததில்லை.
முருகபூபதி அவர்கள் குறித்து நான் நண்பர்களோடு பேசும்போது, பகிர்ந்துகொள்ளும் விடயம் ஒன்றுதான். அதாவது, மிகுந்த நினைவாற்றல் கொண்ட ஊடகவியலாளர், சமூக ஆர்வலர், இலக்கிய வாசகர் என்ற பல்வேறு வகிபாகங்களை அவர் தொடர்ந்து ஆற்றிவந்தாலும், அவருக்குள்ளிருக்கும் குழந்தை மனம்தான் அவருடைய பெரும்பலம். அதேபோல, அந்தக் குழந்தமைதான் அவருடைய பலவீனமும்கூட.

அமைப்பு ரீதியான நிர்வாக வழிமுறைகளில் அவரது எதிர்பார்ப்புகளோடு நான் தொடர்ச்சியாக முரண்படுபவன். எப்போதும் எதிர்நிலையிலேயே நிற்பவன். அவர் என்றைக்கும் நம்பிக்கைகொண்ட சம்பிரதாயமான ஒழுங்குமுறைகளை நான் கடந்து செல்பவன். எனது நிராகரிப்புக்களை அவர் நன்று அறிவார். ஆனால், என்றைக்குமே அவரது எண்ணங்களில் நான் நிராகரிக்கப்பட்டது கிடையாது. அவரது அன்பில் சேதாரம் ஏற்பட்டது கிடையாது.
2017 ஆம் ஆண்டு நானும் ஜெயபிரசாந்தும் இணைந்து நடத்திய ‘எதிரொலி’ மாதப்பத்திரிகையில் - நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க - முருகபூபதி அவர்கள் எழுதிய “கங்காரு நாட்டுக் காகிதம்” என்ற தொடர், ஆஸ்திரேலியத் தமிழர்கள் குறித்து வெளியான தகவல்பூர்வமான பத்தி. எண்பதுகளில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்ததுமுதல், அவர் சந்தித்த அரசியல் தரப்பினர், தமிழ் பிரமுகர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினை மெல்பேர்னில் ஏற்படுத்திய தாக்கங்களும் அவை எதிரொலித்த சம்பவங்களும் என்ற சுவாரஸ்யம் மிக்க தொடர் அது. மெல்பேர்னில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பழைய சம்பவங்களை அறிய விரும்புகிறவர்களுக்கு, இந்தத் தொடர் ஒரு தகவல் கருவூலம்.
அதன் பிறகு - 2019 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் - ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுகதையைப் பெற்றுப் பிரசுரித்தவேளை, முருகபூபதி அவர்கள் எழுதிய “அம்மம்மாவின் காதல்” என்ற சிறுகதை எனக்கு இன்றைக்கும் நினைவிலிருக்கிறது.
அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அபுனைவின் பக்கமே நின்றுகொள்பவை. அவருள் செறிந்திருந்த ஊடகமொழி அபுனைவிற்கு வசதிப்பட்டது. இலக்கியத்தில்கூட சம்பவங்களை நேரடியாகக் கதைகளாக்குவது முருகபூபதி அவர்களது பாணி. தனது புனைவுக்காக ஒரு தனி மொழியை உருவாக்குவதில் அவர் மினக்கெடவில்லை. வாசகனோடு தான் உரையாடும் மொழியில் கதைகளைச் சொல்லிவிடுவது அவரது எழுத்துப்பாணி.
இலக்கியத்தில் முருகபூபதி அவர்களது பெரும்பங்களிப்பாக நான் கருதுவது, அவர் தன் முன்னோர்களையும் சமகாலத்தவர்களையும் அடுத்த தலைமுறைக்கு எழுத்துக்கள் மூலமாகக் கொண்டுசென்றதுதான்.
இன்று நாம் காணும் செயற்கை நுண்ணறிவு சாகசங்களின் முன்னால், பழைய சம்பவங்களை அறிந்துகொள்வதும் ஆளுமைகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதென்பதும், ஒரு வேலையே இல்லையென்றாகிவிட்டது. ஆனால், இந்த வசதிகள் கிடைப்பதற்கு முன்னால், முருகபூபதி அவர்கள் தனது அனுபவங்களினால் - தனது தொடர்புகளால் - தான் பேணிவந்த நல் உறவுகளால் - பல மனிதர்களைத் தெரிந்துவைத்திருந்தார். அவரது நினைவாற்றலில் இருந்து, தினமும் யாரையாவது பற்றி எழுதிக்கொண்டேயிருப்பார்.
அன்று அவர்தான் chatGPT அவர்தான் Gemini. அரசியல், சினிமா, இலக்கியம், வரலாறு என்று அனைத்துத் தகவல் பரப்புக்களிலும் தனது இயற்கை நுண்ணறிவினால் மிரட்டினார். ஏன் இன்றும்கூட அனுர முதல் அருச்சுனாவரை வரலாறுகளைக் கேட்டால் அச்சொட்டாக அசத்துவார்.
அதன் வீச்சு எப்படியிருக்கிறது என்றால், யாராவது தமிழ் ஆளுமைகள் காலமாகிவிட்டால், கொழும்புப் பத்திரிகைகள் மெல்பேர்னில் உள்ள முருகபூபதி அவர்களை - சிலவேளைகளில் நடுச்சாமத்தில் தொலைபேசி வழியாகத் தட்டியெழுப்பி - நினைவுக் கட்டுரை கேட்டு இறைஞ்சி நிற்குமளவுக்கு நீண்டிருந்தது.

முருகபூபதி அவர்கள் மனிதர்களுக்கான மனிதராக தன்னை முன்னிறுத்துபவர். பொதுவாழ்வில் தன் தீராக கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தன்னையே கரைத்தவர்.
அவருக்கான பவள விழா கௌரவம் என்பது இவ்வளவு காலமும் அவர் சமூகத்துக்காக வருந்தி உழைத்த பொழுதுகளுக்கும் உவந்தளித்த உழைப்பிற்கும் தமிழுலகம் அவரது இரு கரங்களையும் பற்றிப் பிடித்து நன்றி கூறுகின்ற அரிய தருணம்.
முருகபூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்




Comments