top of page

அசௌகரியத்தின் சாட்சியே இலக்கியம்: கருணாகரன்

Sep 7
14 min read

ஈழத்து இலக்கியப் பரப்பில் தவிப்பும் கொந்தளிப்பும் நிறைந்த கவிதை மொழியாலும் சமரசமற்ற அரசியல் மற்றும் இலக்கியச் செயல்பாடுகளாலும் அறியப்பட்ட ஆளுமை கருணாகரன். ஈழப்போர்க்காலத்தின் நெருக்கடிகளையும் அதன் பிந்தைய துயரங்களையும் தனது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் பதிப்புரிமைப் பணிகள் வழியாகத் தொடர்ச்சியாகப் மேற்கொண்டு வருபவர். யுத்தத்தின் வடுக்களையும் நிலத்தின் சாட்சிகளையும் தன் அகத்தில் ஏந்தி, மைய நீரோட்ட அரசியலுக்கும் அப்பால் நின்று, சாமானியனின் குரலாகவும் மானுடப் பரிவின் முகமாகவும் இவரது படைப்புலகம் இயங்குகிறது. இலக்கியம், தனிமனித சுதந்திரம், ஜனநாயகப் பார்வை மற்றும் நவீன கவிதையின் சவால்கள் குறித்து ஆழமான விவாதங்களை முன்னெடுக்கும் கருணாகரனுடன் நடத்தப்பட்ட இந்த நேர்காணல் அவரது கவியுலகின் அகவெளிகளையும் வரலாற்றின் ரணங்களையும் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான ஒரு திறவுகோலாகும். 



கருணாகரனுக்கு 2026 ஆம் ஆண்டு கவிதைக்காக கனடா இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 செப்ரெம்பர் ஐந்தாம் திகதி உருவாக்கப்பட்ட அவரது புதிய இணையத்தளத்திற்காக, (skarunakaran.com) அவரிடம் நான் பெற்றுக்கொண்ட பிரத்தியே செவ்வி இது -


வணக்கம் கருணாகரன்,


கனடா இலக்கியத் தோட்டம் வழங்கியுள்ள இந்த ஆண்டின் கவிதைக்கான விருதைப் பெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள். இந்த மகிழ்வான தருணத்தில், உங்களது கவிதை வெளி அடங்கலான இலக்கிய வெளி, அது உங்களில் தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் அவற்றுக்காக உங்களை ஒப்புக்கொடுக்கும் அக வழிப் பயணங்கள் பற்றி சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் இலக்கியப் பரப்பில், விருதுகள் – அங்கீகாரங்கள் – கௌரவங்கள் என்பவை தகுதியானவர்களை வந்தடைவதில் காணப்படும் தாமதத்திற்கும் அதன்பொருட்டு நிலவும் கள்ள மௌனத்திற்கும் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் இலக்கியப் பரப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது எதை என்று தெரியவில்லை. தமிழகச் சூழலில் முன்னரை விட இப்பொழுது படைப்பாளிகளையும் படைப்புகளையும் இனங்கண்டு, அங்கீகரித்து, முன்னிலைப்படுத்தும் போக்கு உயர்வடைந்துள்ளது என்றே தோன்றுகிறது. புதுமைப்பித்தன், பாரதி காலத்தைப்போல எழுத்தாளர்கள் கைவிடப்படும் நிலை இல்லை. இந்திய மத்திய அரசின் யுவபுரஸ்கார் விருது தொடக்கம் தமிழக அரசின் விருது, த.மு.எ.க.ச விருது, எழுச்சித்தமிழர் விருது, கலைஞர் விருது, படைப்பு விருது, தன்னறம் விருது, விஷ்ணுபுரம் விருது,  குமரகுருபரன் விருது வரையில் இளைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் பல இடங்களிலும் கவனிக்கப்பட்டு விருதளிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய படைப்புகள் உரையாடல்களின் வழியே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஏனைய எழுத்தாளர்களுக்கான அங்கீகாரமும் மதிப்பும் கவனப்படுத்தல்களும் கூட முன்னேற்றமானவையாகவே உள்ளது. பல அமைப்புகளும் தனியாரும் இதழ்களும் இதைச் செய்கின்றன.


ஈழச் சூழல் இதற்கு மாறானது. முன்பு யாழ் இலக்கிய வட்டம், இலங்கை இலக்கியப் பேரவை, தெல்லிப்பளை கலை இலக்கியக் களம் எனப்பல அமைப்புகள் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் வேலைகளைச் செய்ததன. ஈழநாடு, ஈழமுரசு எனப் பத்திரிகைகளே போட்டிகளை வைத்துப் பரிசளித்தன. ‘தகவம்’ அந்தந்த மாதத்தின் கதைகளைப் படித்து சிறந்த கதைகளுக்குப் பரிசளித்தது. ‘தகவம் பரிசுக் கதைகள்’ என தொடர்ச்சியாக அவற்றைத் தொகுத்து நூலாகவும் கொண்டு வந்தது. அதற்கு முன்பு ஈழகேசரி தொடக்கம்  சிரித்திரன், கலைச்செல்வி வரையில் இவ்வாறான வேலைகளைச் செய்தன. இதெல்லாம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் சமூகத்தின் கவனப்பரப்பில் கொண்டு சென்று சேர்க்கின்ற பணிகள். விடுதலைப்புலிகள் இயக்கம் கூட தன்னுடைய காலத்தில் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் வேலையைச் செய்தது.


இப்போது இந்த நிலை மாறி விட்டது. கனடா இலக்கியத்தோட்டம், ஆஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம், பிரான்ஸிலிருந்து ‘வளர்’ சஞ்சிகை, மட்டக்களப்பிலிருந்து ‘மகுடம்’ இதழ் என ஒன்றிரண்டு இடங்களில் மட்டுந்தான் இது நடக்கிறது. இதில் விருது என்றால், கனடா இலக்கியத் தோட்டத்தினால் மட்டுமே வழங்கப்படுகிறது என எண்ணுகிறேன். ஏனையவை போட்டியில் வெற்றியீட்டுவோருக்கான பரிசில்களையே வழங்குகின்றன. மற்றும்படி அரச விருதுகள் மாகாணசபை மூலமும் மத்திய அரசு மூலமும் வழங்கப்படுகிறது.


இன ஒடுக்குமுறையைச் செய்யும் அரசின் விருதை ஏற்பதற்குப் பலருக்கும் உடன்பாடில்லை. மெய்யான எழுத்தாளர் ஒருவருக்கு, அந்த விருதை வாங்கும்போது, காணாமலாக்கப்பட்டோருடைய முகங்களும் அவர்களைத் தேடியலைவோரின் கண்களும்தான் மனதில் தோன்றும். நில ஆக்கிரமிப்பைச் செய்து கொண்டிருக்கும் அரசிடடம் விருதை வாங்குவதென்பது, அதனுடைய அதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் ஏற்பதாகி விடும். கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியை, பொறுப்புக் கூறலை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை. யாரும் அரசுடன் இணைந்திருக்கலாம். எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அப்படி இருக்க முடியாது. அவர்கள் அதிகார அமைப்புகளுக்கு எதிரானவர்கள், வெளியே இருப்பவர்கள். அரசுடன் இருந்தால், அரசு மேற்கொள்கின்ற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் இவர்களும் பொறுப்பாளிகள். என்னுடைய நிலைப்பாடு இதுவே.


அரசுக்கு அப்பால் குறிப்பிடத்தக்க விருதுகள் என்று எதுவுமில்லை. இப்படி வரண்டுபோயுள்ள நிலையில் யாருக்காவது விருது கிடைத்தால் அது சர்ச்சையை – புகைச்சலை – உண்டாக்கி விடுகிறது. இலக்கியத்துக்கு, இலக்கியப் படைப்பாளிக்கு விருது என்றாலே இலக்கிய வட்டாரத்தில் சர்ச்சை வந்து விடுகிறது. தம்முடைய எழுத்திலும் இலக்கியப் பங்களிப்பிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இதில் அக்கறை இருக்காது. பதட்டம் வராது. அவர்களுக்கு விருது கிடைத்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான். எல்லாவற்றையும் விட உங்களுடைய எழுத்துகள், படைப்புகள்தான் வலிமை உடையவை. அவற்றுக்கே கால மதிப்புண்டு.


இதேவேளை, விருதுகளில் தேர்வும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும். என்னுடைய பார்வையில் இதையெல்லாம் சர்ச்சையாக்கி விவாதிப்பதை விடவும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களுடைய எழுத்து இயக்கம்பற்றியும் எழுதுவதே சிறப்பு. அதுவே அவசியம். கூடவே பல வகையான விருதுகளை ஈழத்தமிழ்ச்சமூகம் உருவாக்கி அளிக்க வேண்டும். அது சமூகத்தின் கடமை. எழுத்தாளர்கள், கலைஞர்களை அங்கீகரிப்பதும் அவர்களை மதிப்பதும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அளிக்கின்ற பங்களிப்பாகும்.


எழுத்தாளர்களும் கலைஞர்களும் பண்பாட்டின் கண்ணிகள். அவர்களுக்கான விருதுகளை அளிக்கும் நிறுவனங்களும் அமைப்புகளும் பெருகும்போது உரிய காலத்தில் ஒவ்வொரு கலைஞரும் எழுத்தாளரும் அதற்கான மதிப்பையும் கவனத்தையும் பெறக் கூடியதாக இருக்கும். அண்மையில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து தமிழின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான சுகுமாரனுக்குக் ‘காயல் விருது’ அளிக்கப்பட்டது. அந்த மதிப்பளிப்பு நிகழ்வில் ஈழக்கவிஞர்கள், எழுத்தாளர்களில் பத்துக்குக்கும் குறைவானவர்களையே கண்டேன். இது எவ்வளவு பெரிய துயரம்? எப்படியானதொரு சூழல்?


இதேவேளை, விருது அளிப்பதன் மூலம் அமைப்புகளும் விருதைப் பெறுவதன் மூலமாகத்தான் எழுத்தாளர்களும் கவனத்தைப் பெற முடியும் என்று சொல்ல முடியாது. விருதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு அப்பால், எழுத்தைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் பேச வேண்டும்; எழுத வேண்டும். சமூகத்திடம் அதற்கான கவனத்தை உருவாக்க வேண்டும். அதுவே அவசியமானது. ஆனால், துரதிருஸ்டவசமாக யாரும் அதைச் செய்வதுமில்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதுமில்லை. வம்புகளைப் பேசுவதிலும் வசைகளைப் பாடுவதிலுமே தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறார்கள். இப்படியிருந்தால் இலக்கியம் வளருமா? பண்பாடு செழிக்குமா? மொழியும் சமூகமும் வளர்ச்சியடையுமா? சரியானவற்றைச் சரியாகச் செய்தால்தான் சரிகளுக்கான நியாயத்தைக் கோர முடியும்.


ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் எழுதியவர்களில் பலரும் அரசியல் வெளிப்பாடு கொண்டதாகத் தங்கள் கவிதைப் பொருள்களை முன் வைக்கிறார்கள். அவற்றுக்கு இன்னமும் கொதி வளர் பெறுமதி உண்டெனக் கருதுகிறார்கள். ஆனால், உங்கள் கவிதைகள் அரசியல் வெளிப்பாடுகள் கொண்டவையாக இருப்பினும் அதற்கு அப்பால், பரந்த நிலப்பரப்புகளில் பயணப்பட்டு மனிதர்களின் வாழ்வோடும் மானுடக் கனிவோடும் பிணைந்திருக்கக் காரணம் என்ன?

ஈழக்கவிதைகளில் மட்டுமல்ல, ஈழச் சிறுகதைகள், நாவல்களில் கூட அரசியற் செறிவுண்டு, காரணம், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் இன ஒடுக்குமுறையும் அதன் விளைவான போருமாகும். ஈழத்தை விட்டுப் பெயர்ந்து நெடுந்தொலைவுக்குச் சென்றாலும் இதனுடைய தாக்கம் எளிதில் நீங்கி விடுவதில்லை. இனவாத அரசியல் விளைவுகளால் பாடுகளைக் கண்ட வாழ்க்கையின் சூடு அப்படியானது.  பலஸ்தீனக் கவிதைகள், ஆபிரிக்கச் சிறுகதைகள்  போன்றவற்றிலும் நீங்கள் இந்தத் தன்மையைக் காண முடியும்.


அகதியாகவே அலையும் வாழ்வைக் கொண்டிருக்கும் பலஸ்தீனக் கவிஞர் ஒருவரிடம் “நீங்கள் அரசியல் கவிதைகளை ஏன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?“ என்று கேட்டால் என்ன சொல்வார்? அப்படியானதொரு கடினமான வாழ்க்கையில், இரத்தம் சிந்தச் சிந்த உங்களுடைய குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டு, அடுத்து  எங்கே செல்வது என்று தெரியாமல் போர்ப் பரப்பில் குடும்பத்தோடு தடுமாறும்போது உங்களில் மனதில் தோன்றும் கவிதையும் அதனுடைய அழகியல் உணர்வும் எவ்வாறிருக்கும்?


இதேநிலைதான் ஈழ இலக்கியத்திற்கும் நேர்ந்தது. இது ஒரு காலத்தின் கட்டாயச் சுமை என்றே எண்ணுகிறேன். ஆனால், என்னதானிருந்தாலும்  இலக்கியம் எந்த நிர்ப்பந்தத்திற்குள்ளும் எந்த அடையாளத்துக்குள்ளும் மட்டும் தேங்கி நின்று விடுவதில்லை. அதனுடைய விரிபரப்பும் நிறங்களும் பல விதமானவை. அந்தப் பலவிதமே இலக்கிய அடிப்படையும் ருசியுமாகும்.


நம்முடைய வாழ்க்கை எப்படி ஏதொன்றுக்குள்ளும் தேங்கி நிற்பதில்லையோ, எந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு, மீறி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமோ அப்படித்தான் இலக்கியமும். போர்ச் சூழலிலும் காதல் நிகழ்வதில்லையா? கடுங்கோடையிலும் அழகிய மலர்கள் பூக்கின்றனவே! அரசியலுக்கும் யுத்தத்துக்கு அப்பாலும் வாழ்க்கை உண்டென்று நம்புகிறேன். எனவே என்னுடைய கவிதைகள் ஒரே வடிவத்தையோ ஒற்றைப் பொருளையோ கொண்டமையாமல் பல விதமாகி விட்டன. திட்டமிட்டு ‘இவை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று எழுதுவோரும் உண்டு. அதுவும் ஒரு படைப்பாக்க முறைமையே. இலக்கியப் பிரதிகள்கூட ஒரு உற்பத்திதான் என்ற அடிப்படையில் நோக்கினால் அதற்கான முறைமையும் இருக்குமல்லவா!


என்னுடைய கவிதைகள் மனிதர்களின் வாழ்வோடும் மானுடக் கனிவோடும் இருப்பதற்கு இவைதான் காரணம். எல்லாவற்றிலும் முதன்மையானது வாழ்க்கையே. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூமியிலுள்ள அத்தனை உயிரிகளுக்குமான பொது இயல்பு; பொதுக்குணம். நத்தைக்கும் தனியானதொரு வாழ்க்கை உண்டு. இந்தப் புரிதலோடு நம்முடைய மனம் எப்போதும் கனிவாகவும் மலரைப்போல மென்மையில் விரிவதாகவும் இருப்பது அழகு. எப்போதும் காலத்தோடும் சூழலோடும் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சூழலில் உள்ள மரம், செடி, புழு, பூச்சி, நத்தை, காடு, பாதை, கடல், ஆறு, மலை, வானம், மழை, வெய்யில், நாய், பூனை, பல்லி எல்லாமும் நம்முடைய உறவில் உள்ளன. எல்லாவற்றுக்கும் இந்தப் பூமியில், இந்தப் பிரபஞ்சத்தில் சம இடமுண்டு. அந்தச் சம இடமில்லையென்றால் எல்லாவற்றினதும் சமனிலை குழம்பி விடும். என்பதால் கவிதையிலோ இலக்கியத்திலோ அவையும் தமக்குரிய இடத்தில் அமைந்து விடுகின்றன.

‘யாருடைய வீடு’ என்ற என்னுடைய கவிதையில் “இந்த வீடு உன்னுடையது மட்டுமல்ல, பூச்சிகள், பல்லி, நாய், பூனை, பூமரங்கள் என எல்லாவற்றினுடையதும்தான் என்று எழுதியிருப்பேன். இதை மறுப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. அப்படி மறுக்கும்போது அந்தப் பிரதிகள் சில தேர்வுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவே மாறும். அது நியாயமில்லை. நியாயமற்றவைக்கு அழகும் இல்லை.


நீங்கள் கவிதைகளை எழுதும் அதேவேளையில் – உங்கள் கவிதைகளுக்குப் பொருள் தரும் அதே மண்ணிலிருந்து – அரசியல் – சமூக பிறழ்வுகளையும் காண்கிறீர்கள். அவற்றைக் கட்டுரைகளாக எழுதுகிறீர்கள். உங்கள் எதிர்ப்பினையும் சமூகக் கரிசனையையும் முன்வைக்கிறீர்கள். இப்படியான, கசப்புகளுக்கும் வெறுப்புகளுக்கும் மத்தியில் ஒரு கவிஞனால் எப்படித் தொடர்ந்தும் அறத்தின் குரலாகவும் பரிவின் முகமாகவும் இருக்க முடிகிறது?

இது சற்றுச் சவாலானதுதான். ஆனால், இலக்கியம், எழுத்து என்பதெல்லாம் ஒரு வகையில் அறச்சீற்றத்தின் விளைவுகள்; வெளிப்பாடுகள் என்று சொல்லலாம். அதற்குள் கனிவைக் கொண்டிருப்பதும்கூட. கலையின் குணம் இது. எந்தச் சமூகமும் புனிதங்களையும் அற விழுமியங்களையும் மட்டும் தன் மடியிலும் தலையிலும் கொண்டு புனிதமாக இருப்பதில்லை. சில சந்தர்ப்பத்தில் மிகத் தாழ்நிலையில் அதனுடைய விழுமியங்கள் சரிவு காணும். சிலபோது இது உயர்வடையும். அந்தந்தக் காலத்தில் உள்ள ஆளுமைகள், அரசியல், பண்பாட்டுச் சூழல்கள், அப்போது நிகழும் இடையூடாட்டங்கள் போன்றவை இதில் தாக்கம் (செல்வாக்கு) செலுத்துவதுண்டு.


நான் இலக்கியத் துறையில் இயங்குகின்றவன் என்பதால் எப்படியோ இவை பற்றி எழுதவும் பேசவும் வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கவே முடியாது. உங்களின் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கீழ்மைகளையும் சிதைத்தல்களையும் கண்டுகொண்டு, அவற்றைப் பற்றிப் பேசாமல் உங்களால் விலகிச் செல்ல முடியுமா? அந்தச் சூழலை விட்டு நீங்கள் நீங்கினாலும் அகத்தில் அது இடையீடு செய்வதைத் தவிர்ப்பீர்களா? எனவே இவற்றில் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன. சிலது பிற வடிவங்களில்.


இவையெல்லாம் சமூக வெளியில் முன்வைக்கப்படும்போது அதற்கான எதிர்வினைகள் கடுமையாகின்றன. இவை ஏற்புடையவை, நியாயமானவை என்று எண்ணுவோர் இதைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. அவர்கள் அவற்றைப்படித்து, உணர்ந்து தங்களுக்குள் உள்ளெடுத்துக் கொள்கிறார்கள். மறுப்போரும் உடன்படாதோரும்  தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கீழ்மைகளுக்கு ஒரு பாதுகாப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களுடைய மறுப்பும் விமர்சனமும் நேரடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவற்றை மிக எளிதாக எதிர்கொண்டு விட முடியும். ஆனால், அப்படிச் செய்ய மாட்டார்கள். அதற்கான துணிவு அவர்களிடம் இல்லை. எழுப்பப்படும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு பதில் அளித்து, விவாதிப்பதற்குப் பதிலாக, அவற்றைத் திசை திருப்புகின்ற விதமாக வேறு புரட்டுகளையும் அவதூறுகளையும் இட்டுக்கட்டுகிறார்கள். இது கீழ்மையிலும் கீழ்மையாகும்.


நவீன கவிஞர்கள் தமக்கெனத் தனிப்பட்ட அந்தரங்கப் படிமங்களை உருவாக்கும்போது அன்றாட வாழ்வின் அலுப்புத் தன்மையை அதில் காட்டிவிடாமல் கவித்துவமான ஆழத்திற்கு மாற்றுவது பெரிய சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உங்கள் கவிதைகளில் வெளிப்படும் நிலம் மற்றும் மரணம் சார்ந்த குறியீடுகள் இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

கவிதைகள் பல விதம் என்பதைப் போலவே கவிஞர்களும் அவர்களுடைய வெளிப்பாடுகளும் வெளிப்பாட்டு முறைமைகளும் பல விதமானவை. மட்டுமல்ல, நோக்கங்களும் தேர்வுகளும் பல விதமானவை. என்னுடைய நோக்கு, தெரிவு, நிலைப்பாடு, ஈடுபாடு போன்றவையெல்லாம் வாழும் காலத்தையும் களத்தையும் உள்ளார்ந்ததாகக் கொண்டது. அவற்றிலிருந்து பெறுகின்ற உணர்வு, அனுபவம், சிந்தனை, விமர்சனம் போன்றவையே என்னுடைய கவிதைகளின் அடிப்படை. நான் வாழும் களம் மரணம் விளையாடிய முற்றம். நான் வாழும் காலம், கீழ்மைகளின்  நீதியின்மைகளின் ஒடுக்குமுறைகளின் தீயில் எரிவது. என்பதால் அதற்கான மொழியையும் வடிவத்தையும் எடுத்துக் கொள்கின்றன. அன்றாட வாழ்வின் அலுப்புத் தன்மையைக் காட்டி விடாமல் இருப்பதற்கான தந்திரங்களைப் பற்றி நான் ஒரு போதுமே யோசித்ததில்லை. அது அவசியமா?


மரபுசார்ந்த படிமங்களை பயன்படுத்தாமல் நவீன கவிதைக்கேற்ற புதிய கோணத்தில் மறுபிறப்பு எடுக்கச் செய்யும் முறையை உங்கள் கவிதைகளில் எவ்வாறு கையாண்டுள்ளீர்கள்?

ஒவ்வொரு கவிஞரும் புதியதாகத் தம்முடைய கவிதைகளை எழுதுவதற்கே முயற்சிக்கிறார்கள். அப்படியிருந்தால்தான் அவற்றுக்குரிய இடம் கிட்டும். ஆனாலும் பலருடைய கவிதைகள் கடந்த காலத்தின் நிழலை (மொழி, படிமம், உத்தி, வடிவம், வெளிப்பாட்டுமுறை போலப் பலவும்) எப்படியோ தமக்குள் கொண்டு விடுகின்றன. எந்தக் கவிஞரும் சுயம்பு இல்லை. அவருக்கு முன்னோடிகள் உள்ளனர். முன்னவர்கள் பயன்படுத்திய மொழி உள்ளது. தமிழில் இன்று ஒரு கவிதையை எவர் எழுதினாலும் அதில் பல நூறாண்டு மொழியின், பண்பாட்டின், முன்னோடிகளின் வேர் மணத்தே தீரும். மட்டுமல்ல, உலகளாவிய கவிதை மொழியின் நிழலையும் அதில் காணலாம். ஆனால், இதையெல்லாம் மீறி அல்லது இவற்றிலிருந்து கிளைத்து அல்லது இன்னொரு புதிய முளையாகத் தன்னுடைய கவிதையை ஆக்கியளிக்க வேண்டும். அதுவே சவாலும் பணியுமாகும்.


ஏற்கனவே உள்ள ஒன்றை மீளவும் ஆக்கியளிப்பதற்கான தேவை என்ன? அப்படி ஆக்கும் எந்த எழுத்துக்கும் வலிமையோ புதுமையோ கிடையாது. படைப்பு (creativiry) என்பதே புதிது; புதிதாக்குதல்; புதிதளித்தல் என்றிருப்பது. அந்தப் புதிதை நாம் அளிக்கவில்லை என்றால், எதற்காக எழுத வேண்டும்? நாம் ஒவ்வொன்றையும் பார்க்கும் முறையும் அதை உணரும் விதமும் வேறாக இருந்தால், அதை வெளிப்படுத்தும் தன்மையும் நுட்பமும் வேறாகி விடும்.

நம்முடைய சமகாலத்தில் ஒருவரைச் சொல்லலாம். மனுஷ்ய புத்திரன் எதையும் கவிதைக் கண் கொண்டு பார்க்கும் இயல்புள்ளவர். அதனால் அவர் எதையும் எந்தக் கணத்தையும் கவிதையாக்குகிறார். அப்படிக் கவிதையாக்கும்போது அவருடைய கவிதைகளில் சமகாலத்தன்மை, சமகால வாழ்க்கை துலக்கமாகிறது. அவை செம்மையாக்கப்பட்டவையா இல்லையா என்பது அடுத்த கட்ட விவாதத்திற்குரியது. அதைக் கடந்து இங்கே அவருடைய பார்வையும் உணர்கையும் முக்கியமாகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எல்லோரும் பார்ப்பதை, எல்லோரும் கடந்து செல்வதை ஒரு கவிஞரோ எழுத்தாளரோ வேறு ஒன்றாகப் பார்க்கிறார்கள். அந்த வேறு ஒன்றுதான் புதியது. அதுவே படைப்பாகிறது.


சம்பத் மரணத்தை உணரவும் பார்க்கவும் முற்பட்ட விதம் ஒன்று. மீரா பாரதி அதை உணரவும் பார்க்கவும் முற்படும் விதம் இன்னொன்று. இப்படி ஆளாளுக்கு வேறுபாடுகளும் புதியன காண்தலும் நிகழ்கின்றன. என்னுடைய கவிதைகள் அவை கொள்கின்ற, கொள்ள முற்படுகின்ற கொந்தளிப்பிற்கேற்ப வெளிப்படுத்துகின்றன. அவை புதிய கோணத்தைக் கொண்டவையா, மறுபிறப்பெடுத்தவையா? எதிலிருந்து மறுபிறப்பாகின என்பதை விமர்சகர்களும் வாசகர்களுமே உய்த்துணர்ந்து சொல்ல வேண்டும்.


பரபரப்பான நவீன வாழ்விலும் சமூக ஊடகங்களின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மனிதர்களின் ஆழத்தில் இருக்கும் தனிமையைப் போக்க கவிதைகள் ஒரு பாலமாகச் செயற்படுவதாக உணர்கிறீர்களா? ஈழச் சூழலின் துயரங்களையும் தனிப்பட்ட இழப்புகளையும் கடந்துவந்த உங்கள் கவிதைகள், வாசகனுக்கு “நான் தனியாக இல்லை” என்ற ஆறுதலை எவ்வாறு வழங்குகின்றன? அல்லது, அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன கவித்துவத் தருணங்கள் எத்தகைய ஆசுவாசத்தையும் மீட்சியையும் தருகின்றன?

ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம். கவிதை தோன்றிய காலத்திலிருந்தே இந்த மாதிரி எத்தனையோ காலச் சவால்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் நெருக்கடிப் புயல்களையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஒருபோது அது அந்தரங்கத் தன்மையாகவும் இன்னொருபோது வெளிப்படையாகவும் என எப்போதும் ஒருவிதமான மாயத்தன்மையைக் கொண்டிருப்பதால் அதனுடைய கவர்ச்சியும் ஈர்ப்பும்  குறைந்து விடாமல் உள்ளது.


மொழியின் சிறப்பாகவும் மொழிச் சிறப்பை மேம்படுத்துவதாகவும் மொழியின் ஊடாக உச்ச அர்த்தப் பொழிவைத் தருவதாகவும்  கவிதை இருப்பது இன்னொரு கூடுதல் பெறுமதியாகும்.

நீங்கள் ஒரு கதையில் அல்லது ஒரு கட்டுரையில் சிறப்பான வரியை எழுதினால், அது கவிதையாக, கவித்துவமாக இருக்கிறது என்று சாதாரணமாகவே சொல்லி விடுகிறோம். இங்கே மொழியைச் செம்மையுடன், நுட்பத்துடன் வெளிப்படுத்துவதே நிகழ்கிறது. அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கும் அந்த வெளிப்பாட்டை உணர்ந்து கொள்வதற்கும் கவி மனம் என்ற ஒன்று நமக்குள் உள்ளதல்லவா! அந்த மனம் உள்ளவரையில் கவிதைத்தாகமும் இருக்கும். மட்டுமல்ல, எல்லாக் கேளிக்கைகளுக்கும் அப்பாலான அந்தரங்கம் ஒன்று நமக்கு உள்ளது. அதனோடு எப்போதும் இருப்பது கவிதையே. அந்த அந்தரங்கத் தன்மை நம்முடைய அந்தரங்கத்தோடு இணையும்போது நம்முடைய தனிமை நீங்கி விடுகிறது. அல்லது அதற்கொரு துணை கிடைத்து விடுகிறது.


அடுத்தது, ஈழச்சூழலின் துயரம் இழப்புகளால், நெருக்கடிகளால், பிரிவுகளால் உருவானது. தனிப்பட்ட இழப்புகளை விடவும் சமூகத்தினுடைய இழப்புகளே நம்முடைய அகத்தில் பெரிதாக உணரப்படுகிறது. இதைக் கடப்பது எளிதல்ல. திரும்பத்திரும்ப அது ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு வடிவில் நமக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இது சாபமா, வரமா என்று தெரியவில்லை. எந்த இழப்பையும் எந்தத் துயரையும் தனியாக எடுத்துணராமல், சமூக இழப்பாகவும் சமூகத்துக்கமாகவுமே கொண்டு பழகிய மனதில் நான் தனியாக இல்லை. இவை எனக்கு மட்டுமானவை அல்ல என்ற எண்ணமே உள்ளது. இதனால், என்னுடைய கவிதைகளைப் படிப்போருக்கும் நான் தனியன் இல்லை. இந்தத் துயரங்களோ, இழப்புகளோ மகிழ்ச்சியோ எனக்கு மட்டுமானவை அல்ல என்ற உணர்வைத் தரக் கூடும். இதை வாசக அனுபவமே சொல்ல வேண்டும். அல்லது இதைப்பற்றி விமர்சகர்கள்தான் மேலும் ஏதாவது கூற முடியும்.


மூன்றாவதாக, கவிதையில் நிச்சயமாக நாம் ஏதோ ஒரு வகையில் மீட்சியை, ஆசுவாசத்தை, நிறைவைக் காண்கிறோம். நிறைவின்மையிலும் நிறைவை. அதுதான் அதனுடைய சிறப்பு. இதேவேளை ஈழக்கவிதைகளில்  பெரும்பாலானவையும் இப்படிப் பலதையும் பொதுத் துயராக, பொது இழப்பாக உணர்வதன் வழியானவையே என்பதையும் கவனிக்கலாம்.


நகல்களும் போலச் செய்தல்களும் பெருகிவரும் இந்தச் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மானுட அகம் பற்றிய உண்மை நிரம்பிய கவிதைகளை எழுதும் பொறுப்பும் தேவையும் கவிஞர்களுக்கு எத்தகைய புதிய சவால்களை ஏற்படுத்துகிறது?

உண்மையை விடப் பொய்யுக்கும் போலிக்குமே அதிக கவர்ச்சி. உண்மைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. கவிதையோ இலக்கியமோ கலையின் எந்த வடிவமும் உண்மையாக, உண்மைக்கு நெருக்கமாக, உண்மையத் தீண்டுவதாக இருப்பதே சிறப்பு. இந்த உலகம் உண்மைக்காகவே எவ்வளவோ இழப்புகளையும் பாடுகளையும் சந்தித்திருக்கிறது. கனியைப் புசிக்க வேண்டாம் என்ற தேவனுடைய வார்த்தைகளை விட, அதைப் புசிக்கச் சொன்ன சாத்தானின் வார்த்தைகளையே மனிதர் நம்பினர். மனித விதி இதுவா, மனிதக் குணம் இதுவா என்று தெரியவில்லை.


ஆனால், பொய்யின் ருசியிலேயே பலரும் திளைப்பதைப் பார்க்கிறேன். இதற்கு AI தொழில் நுட்பம் அப்படியானோருக்குக் கை கொடுக்கும். எனக்குத் தெரிய பலர் AI ஐ வைத்துக் கொண்டு வித்தை காட்டுகிறார்கள். அது அவர்களுடைய கோமாளித்தனம் என்பதை எல்லோரும் அறிவர். AI ஒரு புதிய அறிவியல் சாதனை. அறிவியற் சாதனைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.


எத்தனை விதமான தொழில் நுட்பச் சாதனைகள் வந்தாலும் உங்களுடைய மனம் தனியான ஒன்று. அது பல்வேறு அறிதல்களின் தொகுப்பாக இருந்தாலும் அதைத் தொகுத்து வைத்துக் கொள்ளும் முறைமையினால் அது உங்களுடைய தனித்துவத்திற்குரியது. இவ்வாறுதான் ஒவ்வொருவருடைய மனமும் (அகமும்) தனித்தன்மையோடு உள்ளது. என்பதால், ஒவ்வொரு கவிஞருடைய அகமும் தனியானது; தனித்துவமானது. இப்படித் தனியாகவும் தனித்துவமாகவும் இருக்கும் மனதிலிருந்து வெளிப்படும் கவிதை நிஜத் தன்மையைக் கொண்டிருக்கும்.


செயற்கை நுண்ணறிவினால் அல்லது போலச் செய்தல்களால் ஒருபோதும் தனித்துவமான, நிஜக் கவிதையையோ கதையையோ உருவாக்கி விட முடியாது. அது யாருடையது என்றில்லாத மாதிரியொரு பொதுத் தன்மையையே வெளிப்படுத்தும். செயற்கை நுண்ணறிவு என்பது இணைய வெளியில் உள்ளவற்றின் தொகுப்பிலிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தையும் அதன் வழியில் உருவாகும் வெளிப்பாட்டுக்கான சிந்தனையையும் மட்டுமே கொண்டது. அங்கே வரையறைகள் எப்போதும் இருந்தே தீரும். மனித மனம் அப்படியானதல்ல. அது நுண்மையான இழைகளால் வேறுபட்டிருப்பது. வரையறைகள் அதற்குக் கிடையாது. என்பதால் தங்கள் கவிதையைச் சுயமாக எழுதுவோருக்கு எந்தச் சவால்களும் இல்லை. ஆனால், இடையீடுகள் உண்டு. அதை ஆற்றலுள்ள கவிஞர்கள் கடந்து விடுவார்கள். மலையை முழுதாக எதுவும் எளிதிற் தீண்டி விடுவதில்லை. அப்படித்தான் விரிவானத்தையும் கடலையும். மெய்யான கவிஞர்களையும்.


ஈழத்தமிழ்ச் சூழலில் மூத்த இலக்கியவாதிகளின் பங்கும் பணியும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதிலும் – அவர்களுடன் சேர்ந்து இயங்குவதிலும் – சந்திக்கும் சவால்கள் என்ன?

முன்னோடிகளை இனங்காண்பதும் அவர்களுடன் உறவாடுவதும் அவர்களை வாசிப்பதினூடாகவே நிகழ்வது. வாசிப்பதினூடாகப் பெறுகின்ற அறிதல், அனுபவம், சிந்தனை, உணர்வு போன்றவற்றை அவர்களுடன் விவாதிப்பதிலிருந்தும் அவற்றைக் குறித்து எழுதுவதிலிருந்தும் இது வளரும்;  விரியும்; தொடரும். அதைப்போல, இளைய தலைமுறையினரை அல்லது புதியவர்களை வாசிப்பதன் வழியாகவும் அவற்றைக் குறித்து உரையாடுவதன் மூலமும் மூத்த தலைமுறை இளைய தலைமுறையை நெருங்க முடியும். இரண்டுக்கும் பொதுவான அடிப்படைகள் இவை. இந்த அடிப்படை சீராக இருந்தால்தான் அடுத்த கட்டமாக இணைந்து செயற்படுவதும்  வழிப்படுத்தல்களும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உண்டாகும். வழிகாட்டுதல் என்பது நாம் சொல்வதினால் உருவாகுவது என்பதை விட நாம் நடந்து கொள்ளும் முறையினால் உருவாகுவதாகும்.


எவரொருவர் இளைய தலைமுறையினரின் ஆற்றலை மெய்யாகக் கொண்டாடுகிறாரோ, அவரோடு அவர்கள் இயல்பாக நெருக்கமாகுவர். எதன் பொருட்டும் நீங்கள் இடைவெளிகளைப் பேண முற்பட்டால், அவர்கள் விலகித் தூரமாகவே செல்ல முயற்சிப்பர். பீடங்கள் ஒருபோதும் உறவுக்கும் நெருக்கத்துக்கும் இணைந்து செயற்பாட்டுக்கும் உதவாது. என்பதால் எல்லைக் கோடுகளை அழித்து விட்டு, முடிந்த வரையில் நெகிழ்ந்து கொள்ளும் உளநிலையோடு, இணைந்து செயற்படுவதற்கான வழிகளைக் காண வேண்டும்.


இளைய தலைமுறையினருடன் உரையாடுவதற்குச் சிறந்த ஆளுமையாக சுந்தர ராமசாமியைச் சொல்வதுண்டு. இன்னொரு வகையில் விக்கிரமாதித்யன், கோணங்கி, ஜெயமோகன் போன்றோர் உள்ளனர். ஈழச் சூழலில் டொமினிக் ஜீவா, சு. வில்வரெத்தினம், எஸ்.எல்.எம். ஹனீபா, சத்தியபாலன் ஆகியோரைச் சொல்வேன். இப்போதுள்ளோரில் ஷோபாக்தியிடம் அப்படியான இயல்புண்டு. எல்லைக் கோடுகளற்ற நெருக்கம் உண்டாகும்போதே எதைப்பற்றியும் உரையாடலாம் என்ற நம்பிக்கையும் துணிவும் ஏற்படும். அப்படியான உரையாடலில்தான் இலக்கியத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியையும் புதிய முகத்தையும் காண முடியும். ஆகவே இங்கே சவால் என்று எதுவுமே இல்லை. தயக்கமும் குழப்பமும் இல்லாமல் நம்மைத் திறந்து கொள்வது மட்டுந்தான் சவால்.


உங்களது முதிர்ச்சியினால் உருவாகும் கனிவும் அதன் அடிப்படையில் உருவாகும் மதிப்பீடுகளும் விரியும்போது அவை இலக்கியத்தின் மீது செலுத்தும் கூர்மை மழுங்கியதாக அடுத்த தலைமுறை வைக்கும் விமர்சனங்களையும் உங்கள் மீது வைக்கப்படும் முரண்களையும் கடுங்கேள்விகளையும் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

உண்மையில் முதிர்ச்சியில்தான் கூர்மையான மதிப்பீடுகள் உருவாகுவதுண்டு. முதிர்ச்சியில் விளையும் விரிந்த அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பக் கடுமையான விமர்சனத்தை வைக்கும் நிலை தோன்றியிருக்கும். இளமையில் தோன்றும் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் ஒளிவு மறைவின்றி அந்தத் துடிப்போ அப்படியே எழுதியோ சொல்லியோ விட முடிகிறது. அது அந்தப் பருவத்தின் இயல்பும் கொதிப்புமாகும். அது வேறு. முதிர்ச்சியான நிலையில் அப்படி நேரடியாகச் சொல்லாமல் பக்குவமாகச் சொல்லலாமா என்று தோன்றுவதுண்டு. பக்குவமாகச் சொல்வதென்பது வேறு. சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விடுவதென்பது வேறு. ஒன்றை கொதிப்போடும் சொல்லலாம். அமைதியான முறையிலும் சொல்லலாம். எப்படிச் சொல்வது என்பது அந்தச் சூழலையும் குறித்த ஆளுமையையும் பொறுத்தது.


என்னைப் பொறுத்தவரையில் முதிர்ச்சியினால் ஏற்பட்ட கனிவினால் என்னுடைய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் நிலைப்பாடும் கூர் மங்கியது என்றில்லை. பல இடங்களிலும் உக்கிரமாகவே பேசியிருக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறியதேன்? சிலவேளை என்னுடைய உணர்த்து முறைமை வேறாக இருக்கலாம். அது உங்களுக்கு உண்டாக்கியிருக்கக் கூடும். ஆனால், அவற்றின் தீவிரத்தில் குறைவிருப்பதில்லை. நம்பியார், P.S. வீரப்பா, அசோகன், பிரகாஸ்ராஜ் போல கண்களை உருட்டி, குரலை உயர்த்தி, உடலை முறுக்கிச் செய்யும் வில்லத்தனத்தை விட நாகேஸ், ரகுவரன் போன்றோரிடம் வெளிப்படும் வில்லத்தனம் எனக்குப் பிடிக்கும்.


இலக்கியம், விமர்சனம் போன்றவற்றினுடைய அடிப்படைகள், ஜனநாயக உரிமைகள் குறித்த அக்கறை, சாதியம் குறித்த நிலைப்பாடு, இன ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலும் அதற்கான போராட்டமும், அமைப்புகளின் உள் விமர்சனங்கள் என எதிலும் சமரசம் செய்யாமலே இயங்கியும் எழுதியும் வருகிறேன். இவற்றை இன்னும் சற்று அழுத்தமாகவும் கூர்மையாகவும் சொல்லியிருக்கலாம்; சொல்லலாம்.  அடுத்த தலைமுறை வைக்கும் முரண்களை நான் புரிந்து கொள்ள முற்படுகிறேன். அவை எப்படி, எங்கேயிருந்து உருவாகின்றன? அதற்கு நான் எந்த அளவுக்குப் பொறுப்பாளி என்பதைக் கூர்மையாக ஆராய்கிறேன். அதொரு கற்கை.


அவற்றில் நியாயமான அடிப்படைகள் ஏதாவது இருந்தால் கவனிக்கலாம். அப்படித்தான் விமர்சனங்களையும் கடுங்கேள்விகளையும் பார்க்கிறேன். அவற்றில் கற்றுக் கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் ஏதாவது இருக்குமானால் அவற்றை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். அது அவசியமானது. இதனால் அடுத்த தலைமுறையுடன் இணைந்தும் நெருங்கியும் பழகவும் முடிகிறது. அவர்களுடன் நெருங்கிச் செயற்படக் கூடியதாக உள்ளது.

என்னதானிருந்தாலும் விமர்சனங்களும் முரண்களும் வந்தே தீரும். அது இயல்பு. அதை எப்படி அணுகுவது என்பதே முக்கியம். என்னுடைய வழிமுறையில் அவர்களை நிராகரிப்பதையும்விட, அவர்களை அரவணைத்துச்செல்வதே பயன் என எண்ணுகிறேன். இதனால் அடுத்த தலைமுறையினருடன் அதிக நெருக்கத்தையும் உறவையும் கொண்டிருப்பவர்களில் முதல்வரிசை ஆட்களில் நானும் உள்ளேன்.


அடுத்த தலைமுறை என்பது என்னையும் விட உங்களையும் விட அறிவுத்திறனிலும் நுட்பத்திறனிலும் வளர்ச்சிக்கான அடிப்படைகளைக் கொண்டது. கூர்ப்பு விதி இது. இதை மீற முயற்சிப்பது அபத்தம். புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வது சிறப்பு. அதேவேளை அதிக பிரசங்கித்தனமாக, அதிகாரத்துவத்தோடு நடந்து கொள்ளும் இளைய தலைமுறையைக் கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுகவே வேண்டும்.


உங்கள் நெடிய இலக்கியப் பயணத்தில் உங்களோடு பயணித்த சக படைப்பாளிகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பங்கு எத்தகையது? இந்த இலக்கிய உலகப் பரப்பில் உங்களை இயங்க வைக்கும் பலமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நான் என்பது சுயம்பு அல்ல என்று முன்பே சொல்லியிருக்கிறேன். என்னுடைய அரசியல், இலக்கிய, பண்பாட்டுப் பயணத்தில் பலர் இணைந்திருக்கிறார்கள். பலரோடு நான் இணைந்திருக்கிறேன். இது இயல்பு. எனக்கு மூத்த தலைமுறையினர் தொடக்கம் என்னுடைய சம காலத்தவர்கள், எங்களுக்கு அடுத்த தலைமுறையினர் என ஒவ்வொரு தரப்பினரின் பங்களிப்பும் பெரியது. கா. சிவத்தம்பி, மு.தளையசிங்கம், டொமினிக் ஜீவா, வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், க. தணிகாசலம், சு.வி,  சுந்தர ராமசாமி, நகுலன், பிரமிள், தேவதேவன், சு.வி, மு.பொ, புதுவை இரத்தினதுரை, அ. யேசுராசா, கி. பி. அரவிந்தன், இளையவன் (சின்னபாலா), சிவசேகரம், ஜெயமோகன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சம்பத், கி.ரா, யுவன் சந்திரசேகர் தொடக்கம் எஸ்போஸ், இயல்வாணன், சித்தாந்தன், தானா விஷ்ணு, ஷோபாசக்தி, நிலாந்தன், பா. அகிலன், சிவரமணி, அ. சங்கரி, அம்பை, ப. தயாளன், சிராஜ், சயந்தன், தெய்வீகன், கிரிசாந், யதார்த்தன் என இதொரு நெடும்பட்டியல். பெயரிட்டு முடியாதது. சிலர் நேரடியாகவும் சிலர் எழுத்துகளின் வழியாகவும் பங்களித்திருக்கிறார்கள்; இடையீடு செய்திருக்கிறார்கள்.


பாருங்கள் இதில் வெவ்வேறு இலக்கிய முகாம்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளை உடைய எழுத்தாளர்கள், இலக்கியர்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே நடக்கின்ற விவாதங்கள், சச்சரவுகள், போட்டிகள் எல்லாம் என் போன்றவர்களைச் செதுக்கியுள்ளன. ஒளிவு மறைவு இல்லாமல் நான் அனைத்துத் தரப்புகளோடும் பேசியும் பழகியும் வந்திருக்கிறேன். அவரவர் நிலைப்பாடு அவர்களோடு. என்னுடைய நிலைப்பாடு என்னோடு என்பதே எனது கொள்கை.

இது தொடக்கத்தில் சற்று நெருக்கடியாகவும் பிறரால் புரிந்து கொள்ளக் கடினமாகவும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் என்னுடைய இந்த நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் சிலர் சந்தேகத்தோடு பார்த்ததுமுண்டு. தொடர்ந்து பழகப்பழக அவர்கள் என்னைப் புரிந்து கொண்டனர். என்பதால்தான் சொல்கிறேன், இந்தப் பூமியில் எவரும் தனி மனிதரல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் தனித்த ஒன்றல்ல. கிரகங்கள்கூடக் குடும்பங்களாகவே தங்கள் இயக்கத்தையும் தொடர்பையும் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கிடையில் உறவும் சமாந்தரமும் உண்டு.


என்னுடைய இலக்கிய வெளிப்பாட்டில் குடும்பத்தின் பங்களிப்புப் பெரியது. ஆனால், நான் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது துக்கம். (எதைத்தான் நான் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறேன்) இதைப் பிந்தியே உணர்ந்தேன். கூடவே பல இளைய நண்பர்கள். எல்லோருடைய பெயரையும் இங்கே குறிப்பிட முடியாது என்பதால் அவர்களைச் சுட்ட முடியவில்லை. ஆனால், அவர்களை நினைவு கொண்டே ஆக வேண்டும். அவர்களே என்னைப் பல சந்தர்ப்பங்களிலும் ஊக்கியவர்கள். இந்த இலக்கியப் பரப்பில் என்னை இயங்க வைப்பது இலக்கியத்தின் – கலையின் –  மீதான விருப்பமே. கூடவே நண்பர்கள், வாசிப்பு மற்றும் இதனுடன் இணைந்திருக்கும் சூழல்.


எவர் ஒருவருக்கு எதில் விருப்பும் ஈடுபாடும் அதிகமாக இருக்குமோ அதிலேயே அவருடைய புலன்கள் தொடுகையுண்ணும். என்னுடைய புலன்கள் இலக்கியத்தின் – கலையின் – பாதையில் தொடுகை செய்கின்றன. அடிப்படையில் எனக்கு எப்போதும் புதியனவற்றில், புத்தாக்கத்தில், புதுமையில் விருப்புண்டு. அது இலக்கியத்திலேயே அதிகமாக இருக்கும். அது என்னை ஊக்குகிறது. உந்துகிறது.


ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் மாத்திரமன்றி பல பொதுப்பணிகளிலும் நீங்கள் அனைவருடனும் இணைந்து செயற்படுபவர்கள் என்ற ரீதியில் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். ஈழத்தில் இலக்கியம் சார்ந்து கூட்டு முயற்சிகளுக்கும் குறைந்த பட்சம் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவதற்கும் – நூல் வாசிப்புக்களை மேற்கொள்வதற்கும் – அயற்சி நிலவுவதாகக் கருதுகிறீர்களா? அவ்வாறான சூழ்நிலை நிலவினால், அதற்கான காரணங்கள் என்ன?

ஈழத்தமிழ்ச் சமூகம் பிறரால் தோற்கடிக்கப்பட்டது என்பதை விடத் தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இதைப் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். ஈழத்தில் இலக்கியத்தை மட்டுமல்ல, எதையும் நீங்கள் உருப்படியாக வளர்க்க முடியாது. நாலுபேர் கூடி எந்த நற்காரியங்களையும் செய்ய ஏலாது. அப்படிக் கூடிச் செய்யக் கூடியதென்றால் கசிப்பு (கள்ளச்சாராயம்) காய்ச்சலாம். போதைப்பொருள் கடத்தலாம்.


இதுவரையில் 400 க்கு மேற்பட்ட சிறிய கூட்டங்களையும் பெரிய நிகழ்வுகளையும் இலக்கியம், சினிமா, ஓவியம் ஆகியவற்றுக்காக நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறேன். தேசிய கலை இலக்கியப் பேரவை, யாழ் திரைப்பட வட்டம், மல்லிகைப் பந்தல் எனப் பல அமைப்புகள் பல ஆண்டுகாலமாகச் செயற்பட்டு வந்திருக்கின்றன. யாழ் இலக்கியக் குவியம் அண்மைய ஆண்டுகளில் சில நிகழ்ச்சிகளை உற்சாகமாகச் செய்தது. இப்பொழுது தனுஜனும் நாடகக் கலைஞர் சீலனும் செம்முகம் ஆற்றுகைக் கலைஞர்களும் ஊர் ஊராகச் சென்று புத்தக அறிமுகங்களையும் அதற்காக நாடகங்களையும் நிகழ்த்துகிறார்கள். ஆனாலுமென்ன? எல்லாவற்றையும் தோற்கடித்து, நம்மைக் களைப்படையச் செய்து விடும் இந்தச் சமூகம்.


இதிலே வேடிக்கை என்னவென்றால், யாழ்ப்பாண நூலக எரிப்பைக் கண்டிக்கின்ற, அதையிட்டுக் கண்ணீர் சிந்துகின்ற மக்களும் அரசியற் தலைவர்களும் புத்தகங்களையே படிப்பதில்லை. நூலகப் பக்கமே செல்வதில்லை. யாரும்  பிள்ளைகளுக்குப் புத்தகங்களையும் நூலகங்களையும் அறிமுகப்படுத்துவதில்லை. புத்தங்களை விரும்புவோர் ஒரு சிறிய தொகையினர்தான். அவர்கள் இரண்டு, மூன்று விழுக்காடு ஆட்களாகத்தான் இருப்பார்கள்.


இப்படியான சூழலில் இலக்கியம் சார்ந்த கூட்டு முயற்சிகள் என்றால், சிரிப்பதா? அழுவதா? என்றே கேட்கத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூட சற்று நேரம் ஒதுக்கி இலக்கியத்தைப் பற்றி விரிவாகப் பேசுவதை நான் கண்டதில்லை. ஒரு எழுத்தாளரையோ கவிஞரையோ, ஓவியரையோ தேடிச் சென்று பார்த்து நான் அறிந்ததில்லை. ஆனால் முன்பு அப்படித் தேடிச் சந்திப்பது இருந்தது. 23, 30 மைல் தொலைவுக்குச் சைக்கிளோடிச் சென்று இலக்கியம் பேசியவர்கள் இருந்தார்கள். புங்குடுதீவிலிருந்து பண்ணையில் அடிக்கும் எதிர்காற்றில் சைக்கிள் வலித்துக் கொண்டு கவிஞர் வில்வரத்தினமும் மு.பொவும் யாழ்ப்பாணத்துக்கு வருவார்கள். யாழ்ப்பாணத்தில் அ.யேசுராசா, நிலாந்தன், ஏ.ஜே. கனகரத்னா என்று நண்பர்களைச் சந்திப்பார்கள். அப்படிச் சந்திக்கும் காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் காற்று வழிக் கிராமம், காலத்துயர் தொகுதிகளுக்கான கவிதைகளை அவை அச்சிடப்படுவதற்கு முன், கையழுத்துப் பிரதியிலேயே படித்திருக்கிறேன். அனுபவமும் சிந்தனையும் கூடி முயங்க இப்படியான சந்திப்புகள் உதவும்.


வடமராட்சியிலிருந்து குலசிங்கம், நெல்லை க. பேரன் போன்றோர் இலக்கியம் பேசுவதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வருவார்கள். தெணியானும் சிவத்தம்பியும் ஏ.ஜேயும் மல்லிகை அலுவலகத்துக்கு வருவார்கள். இப்படிக் கூடிச் சந்திப்பதைப் பற்றி எம். ஏ. நுஃமான், புதுவை இரத்தினதுரை போன்றோர் கவிதையாக எழுதியிருக்கிறார்கள். கல்முனையில் தானும் நுஃமானும் சந்தித்துப் பேசுவதைப் பற்றி சண்முகம் சிவலிங்கம் எழுதியதாக ஞாபகம். புலம்பெயர் நாடுகளிலிருந்து அல்லது வெளியூரிலிருந்து யாராவது எழுத்தாளர்கள் வந்தால், அவர்களுடனான சந்திப்புகளை, உரையாடல்களை டொமினிக் ஜீவா செய்வார். யேசுராசா வீட்டில் தினமும் இலக்கிய உரையாடல்கள் நடக்கும். தெல்லிப்பளையில் கோகிலா மகேந்திரன், சோ.ப, அநுவை நாகராஜன் போன்றோர் கூடிப் பேசுவார்கள்.


யுத்த காலத்தில் கூட இப்படியான சந்திப்புகள் நடந்ததுண்டு. அக்கராயனிலிருந்து ஓமந்தைக்கும் மல்லாவிக்கும் என 60, 70 கிலோ மீற்றர் சைக்கிள் மிதித்து நிலாந்தனிடமும் மு. திருநாவுக்கரசுவிடமும் நானும் தவபாலனும் செல்வோம். அவர்கள் வருவார்கள். நாங்கள் புதுக்குடியிருப்பில் இருந்தபோது அங்கே கூடுவோம். கிளிநொச்சியில் எங்களின் வீடு சந்திப்புகளின் முற்றமாகியது.


அண்மையில் யாழ் இலக்கியக் குவியமும் ‘நீள்கரை’ சந்திப்புக்கான அமைப்பும் குறிப்பிடக்கூடியதாக சில ஆண்டுகள் இயங்கின. இப்போது அவையும் சோர்வுக்குள்ளாகி விட்டன.  இவையெல்லாம் ஒரு கனாக்காலம் போலாகி விட்டன. தொலைபேசியில் கூட இலக்கியம் குறித்து உரையாடுவதே இல்லை. அதற்கான வாசிப்பும் ஆர்வமும் இல்லை என்பதே இதற்குப் பிரதான காரணம்.


இதை மீறி யாராவது இலக்கிய நிகழ்ச்சி செய்வதாக இருந்தால், அது  உறவினர்கள், ஊரவர்கள் என முகத்துக்கு அஞ்சி நாலுபேர் கூடி நடப்பதாக இருக்கிறது. மற்றும்படி மிஞ்சிப்போனால் சிறிய அளவில் 20, 25 பேருக்குள் நடக்கின்ற கூட்டங்கள்தான் பல இடங்களிலும் நடப்பவை. இப்போது நடப்பவை. 30, 35 பேருக்கு மேல் வந்தால் அது பெரிய கூட்டமாகப் பார்க்கப்படுகிறது. இலக்கியம் என்றால் இப்படித்தானிருக்கும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியத்தில் ஈடுபடுவோர் குறைவாக இருக்கலாம். அதை வாசிப்போரும் அதனுடைய முக்கியத்துவத்தைப் புரிந்திருப்போரும் குறைந்திருப்பது நல்லதல்ல. அது சமூகத்திற்குத் தீமையானது. பண்பாட்டுக்கு எதிரானது.


வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட ஒரு சூழலில், சுயாதீனப் பதிப்பாளர்களின் இருப்பும் செயற்பாடுகளும் சவாலாகவே இருக்கும். தமிழ்நாட்டில் இயங்கும் சிறு பதிப்பகங்களின் பொருளாதாரச் சவால்களை அறிவேன். அவை தாக்குப் பிடிக்கும்  உத்திகளோடு செயற்படுகின்றன. இதை ஒப்பிட்டு, ஈழத்துச் சூழலில் ஒரு சுயாதீனப் பதிப்பாளரும் எழுத்தாளரும் பொருளாதார ரீதியாகத் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்?

ஈழத்துப் பதிப்பகங்கள், எழுத்தாளர்களின் பொருளாதார இருப்பு என்பது தமிழ்நாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டில் விரிவான வாசகர் பரப்பு, மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள், அரச நூலகக் கொள்வனவு போன்றவற்றோடு ஒரு வலுவான விநியோகக் கட்டமைப்பும் உள்ளது. ஆனாலும் அங்கே இதெல்லாம் போதாது என்ற கவலைக்குரல்கள் உண்டு. இருந்தாலும் இது  சிறு பதிப்பகங்களுக்கு ஒரு குறைந்தபட்சப் பாதுகாப்பினை வழங்குகின்றது. ஈழத்துச் சூழலில் சந்தை மிகச் சிறியது, அரச ஆதரவு குறைவு. வாங்கும் திறன் பொருளியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சனங்களிடம் ஆர்வமும் இல்லை. சிங்களச் சூழல் வேறு. அவர்கள் புத்தகங்களைக் கொண்டாடுகிறார்கள். இந்த முரண்களுக்கு மத்தியில், ஈழத்துச் சுயாதீனப் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் தற்காத்துக் கொள்ளவும் நிலைத்திருக்கவும் சில மாற்றுப் பொருளாதார உத்திகளைக் கையாள்வது அவசியம்.


புத்தகங்களை நூற்றுக் கணக்கில் அச்சடித்துக் கட்டி வைப்பது சுயாதீனப் பதிப்பாளர்களைப் பொருளாதார ரீதியாக அழித்துவிடும். தமிழ்நாட்டின் பல சிறு பதிப்பகங்கள் வெற்றிகரமாகக் கையாளும் ‘முன்வெளியீட்டுத் திட்டத்தை’ (Pre – order) ஈழத்திலும் வலுவாகச் செயல்படுத்த வேண்டும். வாசகர்களிடம் முன்கூட்டியே நிதியைத் திரட்டி, அதற்கேற்பப் பிரதிகளை அச்சிடுவதும், டிஜிட்டல் அச்சு (Digital Print) தொழில்நுட்பத்தின் மூலம் தேவைக்கேற்ப 100 அல்லது 200 பிரதிகளை மட்டும் அச்சிடுவதும் முதலீட்டு இழப்பைத் தடுக்கும்.


ஈழத்து நூல்களுக்கான வலுவான சந்தை புலம்பெயர் தேசங்களில்தான் உள்ளது. ஆனால், தபால் செலவு புத்தகத்தின் விலையை விடப் பன்மடங்கு அதிகமாக இருப்பது பெரும் தடை. இதைத் தவிர்க்க, Amazon அல்லது Notion Press போன்ற உலகளாவிய Print on Demand ஐப் பயன்படுத்தி, ஈழத்து நூல்களை அந்தந்த நாடுகளிலேயே அச்சிட்டு விநியோகிக்கும் உரிமைகளை வழங்கி இணைந்து சாத்தியப்படுத்தலாம்.


நூலகங்களையோ கடைகளையோ நம்பியிராமல், நேரடியாகப் பதிப்பகத்தை ஆதரிக்கும் 100 முதல் 200 தீவிர வாசகர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வாசகர்களுக்கு, அந்த ஆண்டில் வெளியாகும் அனைத்து நூல்களையும் நேரடியாக அனுப்பி வைக்கும் சந்தா முறையை முன்னெடுப்பது பதிப்பகத்திற்கு நிரந்தரப் பணப்புழக்கத்தை உறுதி செய்யும்.


இலக்கியம், புனைவாக்கம் மற்றும் ஆக்கபூர்வமான எழுத்து (Creative Writing) குறித்த கட்டணப் பட்டறைகளை நேரடியாகவோ இணையவழியாகவோ மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நடத்தலாம். தமிழ்நாட்டில் இதைச் சாத்தியப்படுத்தி வருகிறார்கள்.


இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் உங்களுக்குக் கிடைத்தவை என்ன? புற வாழ்க்கைச் சூழலில் கிடைக்கும் பொருளாதாரம், சமூக மதிப்பு, முன்னேற்றம் போன்றவை எழுத்தாளரான உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?

கலை, இலக்கியம் என்பது ஒருபோதும் பொருளாதார வளர்ச்சியையோ, அதிகாரத்தையோ, ஆடம்பரமான சமூகப் பதவிகளையோ வழங்கும் துறையாக இருப்பதில்லை. அது முதலில் அதில் ஈடுபடுவோருக்கு அக நிறைவை அளிக்கிறது.அதை நுகர்வோருக்கும் அது கிடைக்கிறது. அது பண்பாடாக விளைகிறது. குறிப்பாக  போரினால் சிதைக்கப்பட்ட சூழலில், தீவிர இலக்கியத்தில் இயங்குபவர்களுக்குப் புறப் பயன்கள் மிகச் சொற்பமானவையே. என்னுடைய வாழ்க்கை இதற்குச் சான்று.


தீவிர இலக்கியம் நிதி வளத்தைத் தருவதில்லை. மாறாக, புத்தகங்களை வாங்குவதற்கும், வெளியிடுவதற்கும், பண்பாட்டுச் சந்திப்புகளை நடத்துவதற்கும் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டிய நிலையே நமக்கு. சமூகத்தின் பார்வையில் ‘வெற்றிகரமான மனிதருக்கான’ அளவுகோல்கள் எழுத்தாளருக்குப் பொருந்துவதில்லை. தீவிர வாசகர் வட்டத்தின் அன்பும் மதிப்பும் மட்டுமே கிடைக்கும் அதேவேளையில், சமரசமற்ற கருத்துகளால் அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பையும் சமூகத்தில் சிலவேளைகளில் தனிமையையுமே சந்திக்க நேரிடுகிறது. குறுகிய அடையாளங்களைத் தாண்டி, சக மனிதனின் துயரத்தையும் இயற்கையின் நுண்மைகளையும் உணரும் பேரன்பையும் கனிவையும் இலக்கியம் அளிக்கிறது. சமூகப் பிறழ்வுகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக அஞ்சாமல் தன் மனசாட்சியின் குரலைப் பதிவு செய்யும் ஆத்மார்த்தமான நிறைவை எழுத்தும் இலக்கியச் செயற்பாடுகளும் வழங்கியிருக்கின்றன.


முற்றும்

 
 
 

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page