யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி தமிழ் சமூகத்தில் அபூர்வமாக நடைபெறுகின்ற அறிவியக்க நிகழ்வுகளில் ஒன்று.
புத்தக வாசிப்புக் குறித்து வெளிப்படையாகவே பேசுவோமானால், இது தற்கால வாழ்வியலோட்டத்திற்கும் அதன் வேகத்திற்கும் எதிரான ஒன்று என்ற பார்வைதான் இயல்பாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரம், எல்லாவற்றிற்குள்ளேயும் அதிரடியாக நுழைந்து, அதே வேகத்தில் வெளியேறிவிடவேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இதுதான் யதார்த்தம். விரலிடுக்கில் அகப்பட்டுள்ள ரீல்ஸ்கள் நகரும் வேகத்தில் வாழ்வில் அனைத்தும் நடந்துமுடிந்துவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை எம்மை அறியாமலேயே எமக்குப் பழக்கிவைத்திருக்கிறோம். இதனால்தான், கவனக்குவிப்பு, தேடல் போன்ற அறிவியக்கத்தின் ஆதாரமான விசைகள் இன்று பல பராயத்தினரிடமும் அன்னியமாகிவிட்டன.
சாய் அபயங்கரினதும் அனிருத்தினதும் மூன்று நிமிடப் பாடல்களால் காயடிக்கப்பட்டிருக்கும் இசை ரசனை, இன்று சற்று நீண்ட பாடல்களைக் கேட்டாலே அயற்சியை ஏற்படுத்துகிறது. ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பார்க்கக்கூடியவாறு உற்பத்திசெய்யப்படும் ரீல்ஸ்களினால், மூளையின் கவனக்குவிப்பினை சிறு துண்டுகளுக்குரியதாக இசைவாக்கி வைத்திருக்கும் டிஜிட்டல் பிராணிகளால் நிறைந்த இன்றைய உலகம், ஒரு புத்தக வாசிப்பினை கொடிய சித்திரவதையாகப் பார்க்கிறது.
இன்றைய உலகில் இரைச்சலைவிட அமைதிதான் அதிகம் தொந்தரவு செய்கிறது. அதனால்தான் வாசிப்புப் பலருக்கும் அன்னியமாதலை உருவாக்குகிறது.
ஆனால், இன்றுவரை வளர்ச்சியடைந்த சமூகங்களை அனைத்தையும் உருவாக்கியவை புத்தகங்களே. இன்று வாழும் வழமான சமூகங்கள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் சிறந்த வாசிப்பாளர்களே. உலகளாவிய ரீதியில் மதங்களினது குருட்டு நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு பிரபஞ்சத்தின் உண்மைகளைச் சோதித்தறியத் தொடங்கிய ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்பட்ட காலப்பகுதி முதற்கொண்டு இன்றுவரை நடைபெறும் அத்தனை அறிவுப்புரட்சிகளுக்கும் அடித்தளமானது வாசிப்பும் புத்தகங்களும்தான்.
புத்தகங்கள் எனப்படுபவை வெறும் காதிக்கற்றைகள் அல்ல, அவை பல்லாயிரமாண்டு கால மானுட அனுபவத்திலிருந்து திரண்ட அமுது. தலைமுறைகளைக் கடந்து நம்மிடம் நீளும் ஞானத்தின் கரம். இந்தப் பேராற்றலின் நிகர் பெறுமதியை தலைமுறை தலைமுறையாக வழிக்கொண்டுவந்த பெருமிதம் மிக்க வரலாறு யாழ்ப்பாணத்துக்கு உண்டு. ஆறுமுகநாவலர், உதயதாரகை, யாழ் நூலகம் போன்ற சாதனைகள் வழியாக யாழ்ப்பாணம் நின்றுகொண்டிருக்கும் பெறுமதி மிகப்பெரியது.
ஆக, இந்தப் புத்தகக் கண்காட்சிகள் அறிவியக்கத்தின் பெரும் திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படவேண்டும். புத்தகத்தை ஒரு வணிகப்பொருளாகப் பார்க்காமல், அதற்கு அப்பால் அதற்குள்ள பெறுமதியை உணர்வதற்காகவேனும் இந்த நிகழ்வுகளுக்கு சமூகமளிக்கவேண்டும். புத்தகங்களை வாங்காவிட்டாலும் பரவாயில்லை. அந்தச் சூழலைச் சுவாசிக்கவேண்டும்.
'வாசிப்பு என்றால் இப்படித்தானிருக்கவேண்டும், இதைத்தான் வாங்கவேண்டும்' - என்று தமிழ் சமூகத்தில் கருத்துச் சொல்வதற்கும் வாசிப்பினை விரும்பிப் புத்தகங்களுக்கு அருகில் போகின்றவர்களைக் குற்ற உணர்வில் தள்ளுவதற்கும் பல 'இடியப்ப வியாபாரிகள்' இணையத்துக்கு இணையம் வகுப்பெடுப்பார்கள். சந்துகளில் நின்று சட்டையைப் பிடிப்பார்கள். புத்தகங்களையும் வாசிப்பினையும் விரும்புகின்றவர்கள் முதலில் செய்யவேண்டியது, இப்படியான கருத்துக் கிறுக்கர்களை ஒதுக்கிவிட்டு, தமது இரசனைக்கு ஏற்றதான புத்தகங்கள் எதுவென்றாலும் தயக்கமின்றி வாங்கிப்படிக்கவேண்டும்.
கேள்விப்படுகின்ற புத்தகங்கள் குறித்து, இணையத்தில் தேடி, அதன் உள்ளடக்கத்தை ஓரளவுக்கு அறிந்துகொண்டு, அது எமக்குப் பொருத்தமானதா என்று முற்கூட்டிய ஒரு தயாரிப்பினை மேற்கொள்ளலாம். அல்லது, புத்தகக் கடைகளிலேயே குறிப்பிட்ட புத்தகங்களை எடுத்து, அதன் முன்னுரைகளைப் படித்தும் தேர்வு செய்துகொள்ளலாம்.
எல்லா ரக வாசிப்புக்கும் வாசல் என்று ஒன்று உண்டு. அதன் வழியாகவே, ஒவ்வொரு வாசிப்பாளரும் தனது வாசிப்பின் வீச்சு, ரசனை என்ன என்பவற்றைக் கண்டடைகிறார்கள். ஒரு புள்ளியில், புத்தகங்களே வாசிப்பாளரைத் தேர்வு செய்யத் தொடங்குகிறது. அக்களி நிலையை அடையும்போது புத்தகங்கள் எம் உடலில் ஒரு அவயமாகிவிடுகிறன்றன. எமக்கான புதிய சிந்தனைகளைத் தரத்தொடங்குகின்றன. எமக்கான நேரங்களை அழகாக்கிவிட ஆரம்பிக்கின்றன. தனிமை என்ற உணர்வு எங்களிலிருந்து நிரந்தரமாகப் பிரியத்தொடங்கிவிடுகிறது.
யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை சங்கிலியின் பூங்காவில் நடைபெறுகிறது. குடும்பத்துடன் செல்லுங்கள். குறைந்தது ஒரு புத்தகமாவது வாங்குங்கள். வாங்கிய புத்தகத்தை நல்லூர் தேருக்கு முதல் வாசித்துவிடவேண்டும் என்ற எந்தவிதமான கந்தன் கட்டளையும் இல்லை. நேரமுள்ளபோது படிக்கலாம். எப்போதும் எங்களிடமொரு புத்தகமுள்ளபோது, அது தனக்கான நேரத்தை எங்களிடம் கேட்டபடியே இருக்கும். ஆக, நீங்களாகவே அந்தப் புத்தகத்தை நெருங்கிவிடுவீர்கள். அதுவொரு அற்புதமான உணர்வு.
அச்சுவாசத்தை அனுபவிப்போம்!




Comments