top of page

Grafton: Its a Purple Paradise

  • Nov 11, 2025
  • 3 min read

நியூ சவுத் வேல்ஸ் - குவீன்ஸ்லாந்து மாநில எல்லைக் கிராமமான கிராப்டனில் ஆண்டுதோறும் நவம்பரில் நடைபெறும் ஜக்கரண்டா மலர்த் திருவிழாவுக்கு (Grafton Jacaranda Festival) சென்றுவரவேண்டும் என்ற திட்டம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஆனால், இந்த வருடம் இனிதே நிறைவேறியது.



மெல்பேர்னிலிருந்து சிட்னிக்கு 880 கிலோ மீற்றர்கள் சென்று பின்னர், அங்கிருந்து 620 கிலோ மீற்றர்கள் அமத்தினால், இலகுவாகப் போய் இறங்கிவிடக்கூடிய 'குறுகிய' பயணம்தான். எதற்காக Grafton போகவேண்டும் என்று கூறும்போதெல்லாம், "அடேய், ஒரு பூவைப் பார்க்கிறதுக்கு இவ்வளவு தூரம் போகவேணுமா. ஊரில் பார்க்காத பூவா" - போன்ற வாடிக்கையான சாபங்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், அவர்களுக்குச் சொல்லக்கூடிய பதில் என்னிடம் இல்லைதான்.


மெல்பேர்னிலிருந்து சிட்னிக்கு இலகுவாகப் போய் இறங்கியாகிவிட்டது. அங்கிருந்து, Grafton புறப்படுவதற்கு மழை அனுமதிக்கவில்லை. வழக்கமாக சியர்ஸ் சொல்லும் சிட்னி வானம், அன்றைக்கெனப் பார்த்து, மழையோடு வந்து நின்று கூப்பாடு போட்டது. ஆனாலும் நான் விடவில்லை. ஒரே இழுவையில் Coffs Harbour வரை சென்று சேரந்துவிட்டேன். அங்குள்ள கடையொன்றில் மதிய உணவுக்காக ஒதுங்கி, Pad Thai ஒன்றுக்கு ஓடர் பண்ணினேன். விநயமாகக் கேட்டதுபோலவே விசேடமான உறைப்பை வாரி இறைத்திருந்தாள் குசினிக்குள் நின்ற தாய்லாந்து தாய்க்கிழவி. அங்கிருந்து புறப்படும்போது - "வெளியே போவது கவனம், ஆலங்கட்டி மழையொன்று இறங்கப்போகுதாம்" - என்றாள் வாசலில் நின்ற மூதாட்டி. எட்டிப் பார்த்தேன். ஏற்கனவே மழை மத்தளம் கொட்ட ஆரம்பித்திருந்தது. 'மழைப்பழம்தானே, இதற்காகப் பயந்து ஒதுங்குவதா' - என்று காரை நெடுங்சாலைக்குள் இறக்கினேன்.


அரைமணி நேரத்தில் - சாப்பாட்டுக்கடைக் கிழவி சொன்ன மாதிரியே - அடைமழை காரைக் கவ்விப்பிடித்தது. முன்னே செல்லும் வாகனங்களை மாத்திமல்ல, ஒரு மீற்றருக்கு அப்பால் வீதியே தெரியாத அளவுக்கு அகோர மழை. கார் கண்ணாடியிலிருந்து மழைத் தண்ணியை வழித்து வீசுவதற்கு இரண்டு வைப்பர்களும் உச்ச நடனம் ஆடிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே அருகில் வந்த வாகனங்கள் வீதியோரத்தில் நின்றுவிட்டன. நானோ மழையிடம் மண்டியிடுவதாக இல்லை என்று உறுதியாக உழக்கினேன். கழுத்திலிருந்த தலையை நன்றாக முன்னுக்குத் தள்ளி வீதியை உற்றப் பார்த்தேன். மழையைப் பற்றி ஆலோலம்பாடி கவிதை எழுதுபவர்களைக் கொண்டுவந்து, இந்த நீர்த் தாண்டவத்தைக் காண்பிக்கவேண்டும் போலிருந்தது. ஒவ்வொரு மழைத்துளியும் கண்ணாடியின் வழியாக என்னை முறைத்து முறைத்து பார்த்தது. நூற்றுபத்து கீலோமீற்றரிலிருந்து நூறு, பின்னர் எண்பது, பிறகு அறுபது என்ற வேகத்தில் குறைத்தபோதுதான் வீதி தெரிந்தது.


நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து ஒருவாறு Grafton வீதிக்குள் வந்தாயிற்று. ஆனால், அந்த வீதி நிறைய உயர்ந்த மரங்கள். அடர்ந்த காடு. வெளியில் ஆரோகணித்துக்கொண்டிருந்த மழைச் சத்தம், ஒரு கட்டத்தில் ஊளையாகக் கேட்கத் தொடங்கியது. கழுத்தை இன்னமும் முன்னுக்குத் தள்ளி வீதியைப் பார்த்துக்கொண்டேன். கண்கள் விறைத்தே போய்விட்டன.

Grafton கிராமத்துக்குள் நுழைந்தபோது மழை தணிந்தது.


ஊதா வண்ண ஜக்கரண்டா மரங்கள், மழையில் குளித்து முடித்து சிலிர்த்தபடி காத்திருந்தன. அடைமழையில் உதிர்ந்த சிறு மலர்கள், மரத்தின் அடியில், கலர் மாறாக் கண்களோடு சிரித்தபடி கிடந்தன.



முன்பதிவு செய்த அறையில் சென்று, வழியில் கண்ட பயத்தை நன்றாகக் கழுவிக் குளித்துவிட்டு வெளியில் போனேன். மலர்த் திருவிழா நடைபெறும் நகரின் மைய மைதானத்தையும் மழை நன்றாகத் துவைத்தெடுந்திருந்தது. ஆனாலும், திருவிழா உபயகாரர்கள், கடைகள், சனங்கள் அகலவில்லை. நடுவில் போடப்பட்ட மேடையில் ஒருவர் கிற்றார் கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்துகொண்டிருந்தார். ஊதாவண்ண ஜக்கெட் போட்ட பல பெண்கள் முன்னால் நின்று ஆடிக்கொண்டிருந்தார்கள்.



மைதானத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாவல் வண்ணத்தில் ஜொலித்தது.

திருவிழா மைதானத்தின் ஓரத்திலிருந்த தள்ளுவண்டிக் கடையில் சென்று "டீ கிடைக்குமா" - என்றேன். "கோப்பியே இல்லை, ஐஸ் கிறீம்தான் இருக்கு" - என்றான் ஊதா கலர் பெனியன் போட்ட சனியன். தெரியாத ஊரில் சிரித்தாலும் பிரச்சினை, முறைச்சாலும் பிரச்சினை. வீதிக்கு அடுத்த கரைக்குச் சென்று, கோப்பியொன்றை வாங்கிக்கொண்டு மீண்டும் மைதானத்துக்கு வந்தேன்.


மைதானத்தின் மூலையில் கொலுவைக்கப்பட்டிருந்த ஜக்கரண்டா பொம்மையையும் அதற்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த ஜக்கரண்டா மரங்களையும் பார்ப்பதற்கு சனம் கூடியது. குழந்தைகளுடன் பெற்றோர் மைதானத்திற்குள் குவியத்தொடங்கினர். வெளிச்சத்தில் மிதக்கத் தொடங்கிய மைதானத்தில், ஊதா மரங்கள் அனைத்தும் நட்சத்திரக்கூடுகளாய் அசைந்தாடின. இரவு முழுவதையும் அந்தச் சிறுநகரில் நடந்து களித்தேன்.



அடுத்தநாள் அதிகாலையே எழுந்து, வீதிகளில் நடைபோனேன். பனிப்புகாரைப்போர்த்தியபடி ஊதா மரங்கள் உறைந்திருந்தன. இரவெல்லம் உதிர்ந்த பூக்கள் நிலத்தில் பூத்துக்கிடந்தன.


Grafton ஒரு சிறிய கிராமம்தான். ஆனால், நவம்பர் மாதங்களில் ஒரு நகரமாகத் தன்னை நம்புமளவுக்கு, ஜக்கரண்டா மரங்கள் அதற்கு உயிர்கொடுக்கின்றன. ஊரின் எந்த வீதியில் திரும்பினாலும் ஜக்கரண்டா மரங்கள். ஒரு ஹோட்டலுக்குப் பெயரே "ஜக்கரெண்டா ஹோட்டல்" என்றிருந்தது. வீடுகள் அவ்வளவு பெரியவை இல்லை. விவசாயம், பண்ணைகள், மீன்பிடி, சிறு கைத்தொழில் பேட்டைகள் என்று எல்லாத் தொழில்களையும் சிறிய அளவில் செய்கின்ற இருபதினாயிரம் சனங்கள் வாழுகின்ற பிரதேசம்தான் இந்தக் கிராமம். ஆக, அவர்களிடம் பெரிய ஆடம்பரங்கள் இல்லை. வீடுகளில் அலங்காரங்கள் இல்லை. ஜக்கரெண்டா மரங்கள்தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கொலு வைத்துவிட்டதுபோல நவம்பர் மாத அழகைச் சூடி விடுகின்றன.



18 ஆம் நூற்றாண்டில் - எங்கள் ஊர் மில்க்வைற் கனகராசா போல ஒருவர் - ஜக்கரெண்டா மரங்களை இந்தக் கிராமத்தில் அறம் புறமாக நட்டதில்தான், இன்று Grafton நாவல் பூக்கும் எழில் நகராக சிலிர்த்து நிற்கிறதாம். ஆண்டுதோறும் ஜக்கரெண்டா மலர்த் திருவிழா நடைபெறும் பத்து நாட்களில், ஒரு நாள் இப்பகுதி மக்களுக்கு பணிநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திருவிழாவையொட்டி நடைபெறும் ஜக்கரெண்டா அழகிகள் போட்டி கிராப்டனுக்கு முக்கியமானது. அதில் வெற்றிபெறுபவர்கள், இந்த ஊரின் மேயராக - முக்கிய பொறுப்புக்களை வகிப்பவராக - தகுதிபெறுகிறார். கிட்டத்தட்ட ஜக்கரண்டா ஜாமீன்.


ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற கிராப்டன் திருவிழாவில், ஜக்கரண்ட அரசி (Jacaranda Queen) என்ற பட்டத்திற்குப் பதிலாக, பால் சமத்துவத்தைப் பேணுவதற்காக ஜக்கரண்டா மன்னனாக (Jacaranda King) முதல் தடவையாக ஆண் ஒருவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். (லைட்டா ஆனந்த tears, சியர்ஸ் சொன்ன தருணம்)


சூரியன் எழுந்ததும் பனி கலைந்தது. ஜக்கரண்டா மரங்கள், ஊதா வண்ணத்திலேயே புதிய கலருக்கு மாறத் தொடங்கின. நகரின் ஏனைய வீதிகளின் வழியாக, முதல்நாள் சென்ற நகர் மைய மைதானத்துக்குச் சென்றேன். வெயிலின் ராஜ அரவணைப்பில் நகரமே நாவல் வண்ணத்தில் அசைவதுபோலிருந்தது. நீல வானமும் நாவல் வண்ணமும் பசிய நிலமும் பிணைந்து அந்தப் பகலே போதையூறிய பெருவெளியாய் அருள் பாலித்தது.



மதியம் சிட்னிக்குப் புறப்பட்டேன். வரும் வழியில், முதல்நாள் பெய்த அடைமழையின் சுவடுகளையே காணோம். வானத்தின் காமத்தை முழுதாக உறிஞ்சிச் செரிந்திருந்தது காட்டு நிலம். காற்றை அசைத்தபடி தலைகோதிக்கொண்டிருந்த நெடுமரங்கள், இலை சாய்த்து வழியனுப்பி வைத்தன.


1 Comment


V Amalan Stanley
V Amalan Stanley
Nov 13, 2025

கொடைக்கானல் போதி ஜென்டோ போகும் வழியில் ஒரேயொரு ஜகரான்டா சாலையோரம் ரகசியமாகத் தன்னிருப்பின் அழகை உணர்த்தி நிற்கும். உங்களோடேயே பயணப்பட்டு அதன் பேரெழிலில் திளைக்க முடிந்தது, நண்பரே!

Like
  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page