நினைவின் எடை
- 4 days ago
- 3 min read
ஐந்து மாத இலங்கைப் பயணத்தை ஒருவாறு நிறைவு செய்துகொண்டு போன வாரம் மெல்பேர்ன் வந்தடைந்தேன். இரு தசாப்தங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வந்திறங்கியபோது அடர்ந்திருந்த அதே குளிர், என்னை அன்போடு அடையாளம் கண்டு அரவணைத்துக்கொண்டது. விமானத்திற்குள் எனக்குப் பின் ஆசனத்திலிருந்து ஓயாமல் இருமிக்கொண்டிருந்த பக்கி, முன்னே போய்த் தொலையட்டும் என்று சற்று மெதுவாக நடந்தேன்.
தானியங்கிக் கருவிக்குள் கடவுச் சீட்டைச் செருகிவிட்டு கமராவைப் பார்த்துச் சிரித்தேன். பச்சை ஒளியைப் பரிசளித்துப் பயணத்தைத் தொடரச் சொன்னது. அந்தப் பக்கி அடுத்த தானியங்கிக் கருவியில் இன்னும் தொங்கிக்கொண்டு நின்றது. அங்கேயும் இருமல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நான் வேகமாக நடந்தேன்.
எல்லாம் க்ளியரான என்னைக் கண்ட அடுத்தடுத்த தானியங்கிக் கதவுகள், த்ரிஷாவைக் கண்ட அரசு அதிகாரிகள் போல, வழி விட்டுக்கொண்டன. சிறிலங்கன் எயார் லைன்ஸ் பொதிகள் மிதக்க ஆரம்பித்த நாடாவின் அருகில் போய் நின்றேன். சற்று நேரத்திலேயே பின்னால், இருமல் சத்தம் கேட்டது. கன்னி ராசிக்காரானாக இருப்பான்போல.
பொதிகளை எடுத்துக்கொண்டு வேக வேகமாக வெளியே வந்தேன். விருந்தினர் காக்கும் வரவேற்பு விறாந்தையிலுள்ள கோப்பிக்கடைக்குள்ளிருந்து பெரியதொரு கூட்டம் எழுந்து என்னை நோக்கி வந்தது. முக்கால்வாசிப் பேரின் கைகளில் பூங்கொத்துக்கள். முன்னே வந்த முதியவரின் கையில் நீண்ட ஜரிகை வஸ்திரம்வேறு.
“பாபாஜி....." என்று கூட்டமாகக் கூவினார்கள்.
என்ன கறுமடா என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். நம்ம இருமல் ஜி. நான் சற்று விலக, தாவிச் சென்ற கூட்டம் ஜியைத் தழுவிக் கொண்டார்கள். சிலர் தாழ் தொழுதார்கள். அப்போதெல்லாம் ஜியின் வாயிலிருந்து அந்தப் பாழாய்போன இருமல் வரவேயில்லை. ஜி தன் பக்தர்களுக்கு ஏதேதோ சொன்னார். அருள் வாக்காக இருக்கவேண்டும். கூட்டமாகவும் தனித்தனியாகவும் படமெடுத்தார்கள். மெல்பேர்ன் பக்தியோடுதான் வரவேற்றிருக்கிறது என்று எண்ணிக்கோண்டேன்.
ஊபராண்டவர் துணையோடு வீடு வந்து சேர்ந்தேன்.
பாபாஜியின் அருளால் ஐந்து நாட்கள் விடாது காய்ச்சல். கூடவே இருமல், தலையிடி என்று அத்தனை இத்யாதிகளும் கூடிக் குதறியெடுத்தென. பதினாறு பனடோல்களையும் விழுங்கி, கடைசியில் முடிந்துபோன பனடோல் மட்டையையும் சப்பித் தின்றுவிடலாமா என்ற நிலையில், நேற்று சரீரம் சற்றுச் சமச்சீராக நடை பயிலத் தொடங்கியிருக்கிறது. இலங்கையிலிருந்த ஐந்து மாதங்களில் ஒரு நாள்கூட விடுப்பெடுக்காமல் வேலை செய்த இந்த இடிதாங்கியை, மெல்பேர்ன் வந்து ஒரு வாரத்தில், மூன்று நாட்கள் லீவில் கிடத்திய பாபாஜி is f*#€£ing great.

இம்முறை இலங்கைப் பயணம் இவ்வளவு நீளும் என்று யோசித்திருக்கவில்லை. மானிப்பாய் மருதடி, வேலைக்கைத் திருவிழாக்களைக் கண்டு வரலாம் என்று போட்ட சிறிய திட்டம், நாட்கள் செல்லச் செல்லச் சற்று நீண்டு, கடைசியில், அந்தோனியார் கோவில் திருவிழா, நவாலி சென் பீற்றர்ஸ் திருவிழா என்று சர்வமத விஜயமாக அகலத்தொடங்கியது.
உண்மையில், மானிப்பாயின் அன்றாடத்தை அறிவதற்கும் யாழ்ப்பாணத்தில் தோன்றிவிட்ட புதிய வாழ்க்கை முறைக்குள் யார், எவ்வாறு தங்களை, எவ்வளவு தூரம் தகவமைத்துக்கொள்கிறார்கள் போன்றவற்றைத் தொடர்ச்சியாக அவதானிப்பதற்கும் இந்தப் பயணம் உதவியது.
மற்றும்படி, மானிப்பாயில் எனது அன்றாடம், காலையில் சற்றுப் பரவாயில்லை. மதியத்திற்குப் பிறகு கொடிய வெயில் மண்டையில் மிதித்து விளையாடும். அதை அனுசரித்து இரவுக்குள் அடைக்கலமாவதுதான் பெரும்பாடாயிருந்தது.
வேலைக்காக அதிகாலை நாலரைக்கு துயிலெழும்போது, சுற்றுவட்டாரத்திலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து சீர்காழியும் என்னுடன் எழுந்துவிடுவார். சிலவேளைகளில், “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” - என்று சாந்தனும் கணீரென்று காற்றைக் கலக்குவார்.
ஆறு மணியாக, "இந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்" என்றபடி முதல் பாண் வண்டில் வரும். சிறிது நேரத்தில் "வெள்ளி மலரே" என்றிசைத்தபடி அடுத்த வண்டில் வரும். "மின்னொளியில் மலர்வன தாழம் பூக்கள்" என்று எஸ்.பி.பி சரணத்தைத் தொடங்கும்போது முன் வீட்டு அக்கா வண்டிலை மறித்து பாண் வாங்குவார்.
மதியம் பன்னிரெண்டரைக்கு - மெல்பேர்ன் நேரம் ஐந்து மணிக்கு - வேலையை முடித்தால், அதற்குப் பிறகு பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்வதென்பது எனது வழக்கமானது. ஏராளமான எதிர்பாராத சந்திப்புக்கள், பயணங்கள் என்று அனைத்தும் பல வர்ணச் சித்திரங்களாய் மனதில் பதிந்திருக்கின்றன. (முக்கியமானவர்களுடான சந்திப்புக்கள் குறித்து அவ்வப்போது எழுதவேண்டும். பார்க்கலாம்)

மானிப்பாயின் பெருநகர் வாழ்க்கை என்பது வழக்கம்போல முன்னிரவு தாண்டியும் பரபரப்பாக இயங்கிப், பின் பிரதான அங்காடிகள் ஆரவாரமாகக் காலையிலேயே உயிர்பெறுகின்றன. வாகன நெரிசலுக்குக் குறைச்சலில்லை. ஆனால், சனத்துக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. டிப்பர்கள் நகருக்குள் அதிகம் இல்லையொன்பதாலோ என்னவோ, விபத்துக்கள் இல்லை. நானும் இன்னும் சில வயோதிபர்களும்தான் அங்கு சைக்கிள்களில் பம்மும் பழசுகள்.
தினமும் மருதடிவரை சென்றுவிட்டு, திரும்பி வந்து தினேஷ் பேக்கரியில் ஒரு தேனீரைப் பருகியபடி, கண்ணாடிச் சுவர் வழியாக மானிப்பாயின் வேகமான அன்றாடத்தை - சந்தைப்புழக்கத்தை - நுகர்வுப்பழக்கத்தை - அவதானிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது. அது தினம் தினம் புதிய அனுபவங்களைத் தந்தது.
பின் அந்திப்பொழுதுகளில், வயல் வெளிகள் நிறைந்த மருதடி, அட்டகிரி, களவோடை, நவாலி என முந்தி வாரோடிய இடங்களின் வழியாக வட்டமடித்து நினைவாறச் சென்று வருவது வழக்கம்.
ஏனைய இடங்களைப்போலவே, மானிப்பாயிலும் நான் அதிகம் கண்டுகொண்ட விடயம், கடைகள் எங்கும் இயந்திரத்தில் தயாரித்த தேனீர்தான். இழுத்து ஆத்தி நுரையோடு நேர்த்தியாகப் பரிமாறும் தேனீர் விற்பனை இப்போது கிட்டத்தட்ட அருகிவிட்டது.
புதிய பின்னல் கதிரை விற்பனை இப்போது எங்குமில்லை. பிளாஸ்திக் கதிரைகள்தான். பழைய பின்னல் கதிரைகளை வைத்திருப்பவர்கள் அறுந்துவிடாமல் அபூர்வமாகப் பாதுகாக்கிறார்கள். தோழி ஒருத்தியின் வீட்டுக்குப்போனபோது, பின்னல் கதிரையை எடுத்துவிட்டு, பிளாஸ்திக் கதிரையை இருக்கத் தந்தாள். எனது எடையை அவள் கிள்ளிக்காட்டிய விதம் க்யூட்டாக இருந்தது.
அதேபோல, பனையோலை மிதித்து, கூரை வேயும் பிஸ்நஸ் எல்லாம் இப்போது இல்லை. கிடுகு மடித்து வேலியடைக்கும் பாரம்பரியமும் அதிகம் காணவில்லை.
ஆக, தேனீர் தயாரிக்கும் கலை தெரிந்தவர்கள், கதிரை பின்னத் தெரிந்தவர்கள், கூரை வேயத் தெரிந்தவர்கள், குத்தூசி பிடித்து வேலியடைக்கத் தெரிந்தவர்கள் போன்ற அபூர்வமான வேலையாட்களைக் கண்ட கடைசித் தலைமுறை நாங்கள்தான்.

ஆனால்,
வேலியைக் குத்தத்தெரிந்தவர்கள்தான் இல்லை. காவடிக்கு முள்ளுக்குத்துவதற்குத் தெரிந்தவர்கள் முந்தைய தலைமுறையிடமிருந்து கச்சிதமாகத் தொழில் கற்று, முதுகு, அலகு, கால்கள் என்று எந்த இடத்திலும் நேர்த்தியாகக் குத்தி காவடிகளை ஏற்றுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் எந்தக் கோவில் திருவிழாவுக்குச் சென்றாலும் குறைந்தது ஐந்து பறவைக் காவடிகள் வரிசையில் நிற்கின்றன. மானிப்பாய் மருதடி திருவிழாவின்போது, நான் பயத்தில் சேர்ட்டையே கழற்றவில்லை.
மரியதாஸ் மாஸ்டரின் ரியூஷனில் ஒன்றாகப் படித்த நண்பன் ஒருவன், ஒருநாள் மாலை நவாலி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக, என்னை அடையாளம் கண்டு மறித்தான். பரஸ்பரம் வாய் பிளந்து ஆச்சரியமாகி - சிரித்து - குசலம் விசாரித்து - கன நேரம் பேசி விடைபெறும் தறுவாயில -
"வாடா ஆனைக்கோட்டைப் பக்கம் போட்டு வருவம், நல்ல புட்டுக்கடை ஒண்டிருக்கு, நண்டுக்கறியோட அடிப்பம்" - என்றான்.
"வெளியில சாப்பிடப் பயமா இருக்கடா, என்ன கறுமத்தைத் தாறாங்களோ......" - என்று வழக்கமான வயலினை நான் வாசிக்கத் தொடங்கினேன்.
"டேய், அங்க AI மூலம் அவிக்கிற புட்டடா சுப்பரா இருக்கும், என்னை நம்பி வா"
எனக்கு தாடை விழுந்து, தாடி சாதுவாகக் கடித்தது. AI மூலம் ஆனைக்கோட்டைக்குள்ள புட்டு அவிக்கிறாங்களா.
என்னுடைய உறைநிலை அவனுக்குப் புரிந்தது.
"டேய், பயப்படாதயடா, ஓனருக்குப் பெயர் ஆறுமுகம், மனுசி இந்திராணி...ரெண்டு பேரும்தான் கடை நடத்தினம்"
I love Manipayans, but நவாலியான்ஸ் always rock with their own cup of humour




Comments