top of page

மன்னாரில் வீசிய மலையாளக்காற்று

  • Jul 1
  • 3 min read

இலங்கைத் தமிழர்களின் பூர்வீக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அநேகமாக வரலாற்று ரீதியாக - சமய ரீதியாக - பொருளாதார ரீதியாக - அரசியல் ரீதியாக - இயற்கை சார்ந்து தனித்தனியான சிறப்பம்சங்களைக் கொண்டவை. ஆனால், மன்னார் பிரதேசம் கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட அனைத்தும் திரண்டு ஒன்றாக அமையப்பெற்ற பெரு நிலம். ஆனால், அதன் காலநிலை சார்ந்து அல்லது ஏனைய பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிக்கு மீறிய முக்கியத்துவத்தினால் மன்னார் அதிகம் பேசப்படாத பிரதேசம். அல்லது கொண்டாடப்படாத நிலம்.


நேற்றைய தினம் எங்களிடம் கிளிநொச்சியிலிருந்து விடைபெற்றுச் சென்ற மலையாள நண்பர்கள், இன்று காலையே அழைத்தார்கள். அப்போது, நான் அம்மாச்சியில் இரண்டாவது தோசையை சட்னிக்குச் சம்பந்தம் பேசிக்கொண்டிருந்தேன். தாங்கள் இன்று புறப்படுகின்ற மன்னார் பயணத்தில் மறுக்காமல் இணைந்துகொள்ளுமாறு ஷாஜி விநயமாகக் கேட்டார். நானும் கருணாகரனும் வேறொரு பயணத்திட்டத்தோடு சுயாந்தனை அழைத்திருந்தோம். அவன் வவுனியாவிலிருந்து புறப்பட்டு மாங்குளம் தாண்டி வந்துகொண்டிருந்தான். ஆனால், திட்டத்தை மாற்றினோம். பூநகரியிலிருந்து சேட்டன்களோடு இணைவதாக உறுதியளித்தோம். மூவரும் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டோம்.



பூநகரிக் கோட்டைக்கு அருகாமையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, அல்லிக்குளத்தைப் பார்த்தவாறு ராஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பூங்காற்றுப் புதிரானது என்று அவரும் ஆமோதித்துக்கொண்டிருந்தார். சங்குப்பிட்டிப் பாலத்தினால் ஷாஜி குழுவினர் வந்து சேர்ந்தனர். வாகனத்தின் கதவைத் திறந்தால், பக்கத்தில் மைக் செற்றோடு, குலாப் அலி கான் போல சப்பாணி கட்டியபடி சாரத்தோடு வீற்றிருந்தூர் ஷாஜி. உள்ளே கருணாகரனை அனுப்பினோம். நாங்கள் பயணத்தில் இணைந்துகொண்டதில் அனைவருக்கும் ஏக மகிழ்ச்சி. சுயாந்தனை அறிமுகம் செய்துவைத்தேன். அவன் மலையாள எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவன். மலையாளக் கவி சச்சிதானத்தின் கவிதைகளைப் பற்றி நீண்ட கட்டுரையொன்றை முன்னர் எழுதியிருந்தான். சச்சிதானம் அவர்கள் அந்தக் கட்டுரையைப் படித்து, சுயாந்தனுடன் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.


தொடர்ந்து பேசலாம் என்றபடி, நானும் சுயாந்தனும் வாகனத்தில் முன்னே செல்ல, சேட்டன்களுடன் கருணாகரன் பின்தொடர்ந்தார். மன்னார் வீதியில், பல்லவராயன் சிலைக்கு அருகில் இறங்கினோம். படம் எடுத்தோம். பல்லவராயனுக்கு இறந்தும் ஓய்வில்லை. நடுவெயிலில் வெந்துகொண்டிருந்தார்.


பயணம் தொடர்ந்தது. வீதியின் இருமருங்கிலும் பாலை நிலங்கள். சுள்ளிக் காடுகள், முட்புதர்கள். சிறிய கோவில்கள், பெரிய இராணுவ தளங்கள், அவர்களது சாப்பாட்டுக்கடைகள். அவ்வப்போது நீண்ட நிழல்கள்.


மன்னாருக்குள் நுழையும் பாலத்தில் மிதந்து, நகருக்குள் நுழைந்தோம். அங்கு, எழுத்தாளர் உதயனை ஜோதியில் இணைத்துக்கொண்டோம். அங்கிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்தோம். தென்னைகளும் பனைகளும் ஒரு பக்கம் செறிந்திருக்க, தூரத்தில் கடல் எம்முடன் கூடவே வந்தது.



எழுத்தாளர் அசோகன் சுருவில், தலைமன்னார் கடற்கரைக் கிராம மக்களுடன் பேசவேண்டும் என்றும் அது தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலுக்குத் தேவை என்றும் முன்னரே கூறியிருந்தார். தலைமன்னார் துறைக்குச் சென்று, கலங்கரை விளக்கையும் கடலையும் பார்த்துக் கைகாட்டிவிட்டு, அங்கிருந்து திரும்பி வந்து, கடற்கரைக் கிராமங்களின் பக்கம் சென்றோம். எழுத்தாளர் உதயன் பேசாலையில் கற்பித்தவர். ஆக, அங்கு அநேகமானவர்களை அவருக்குத் தெரியும். கடற்றொழிலாளர்கள் உதயன் அண்ணையை உடனேயே அடையாளம் கண்டுவிட்டார்கள். ஓடிவந்து வரவேற்றார்கள். போர்த்துக்கேயர் முதன் முதலாக இலங்கைக்கு வந்து கட்டிய தேவாலயமிருந்த இடத்துக்குச் சென்றோம். அதற்கு அருகிலிருந்த மர நிழலில் ஒதுங்கினோம். ஊரவர்களோடு பேசத்தொடங்கினோம். ஒவ்வொருவராய் - பலராய் - சைக்கிள்களிலும் மோட்டார் சைக்கிளிலும் ஓட்டோவிலுமாக வந்து கூடினார்கள். பலர் ஷாஜியை ‘பீஸ்ட்’ பட வில்லன் என்று அடையாளம் கண்டு, படமெடுக்கத் தொடங்கினார்கள்.



ஊர் மக்கள் போருக்குப் பின்னரான மீனவர்களது வாழ்க்கை, இந்திய மீனவர்களது அத்துமீறல் உட்பட தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்று பல விடயங்களை உணர்வுபூர்வமாகப் பேசினார்கள். “உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்கு சென்றாலும் நாங்கள் அகதிதான். ஆனால், இலங்கைக்கு வந்த இந்தியர்களை நாங்கள் ஒருபோதும் அகதிகளாகப் பார்த்தது கிடையாது. அதோ பாருங்கள், அவர்களை நாங்கள் எவ்வாறு கௌரவப்படுத்தியிருக்கிறோம்” - என்று மலையகத் தமிழர்கள் இலங்கையில் கால்பதித்த இருநூறு வருட நினைவாகத் தாங்கள் கட்டிய நினைவுச் சின்னத்தைக் காண்பித்தார்கள். நிறையப் பேசினோம். நீண்ட நேரம் பேசினோம்.



வெயில் குடித்து வெந்த உடலில் பசி சுருதி சேர்த்தது. தலைமன்னார் ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள, வீதியோரச் சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்தில் அணைந்தோம். “பத்துப் பேருக்குச் சாப்பாடு கிடைக்குமா, பயங்கரப் பசி” - என்று ஈனக்குரலில் இறைஞ்சினோம். “இதோ பதினைத்து நிமிடம் தாருங்கள். மீன் கறியோடு சோறு பரிமாறுகிறோம்” - என்று உள்ளிருந்த இரண்டு பெண் குரல்கள் உரத்துக் கூவின. அதுவரையில், வலையைச் சிக்கெடுத்துக்கொண்டிருந்த குடும்பத்தலைவரும் சமையலில் இணைந்தார். வீட்டின் உள்ளேயிருந்து பிளாஸ்திக் கதிரைகள் வெளியே வந்தன. கிடுகுக் கொட்டிலின் நிழலில் மணலுக்குள் போட்ட கதிரைகளில் இளைப்பாறினோம். சிறிது நேரத்தில் மீன் கறியும் கத்தரிக்காய் பால்கறியும் பெரிய மிளகாய் பிரட்டல் கறியும் மீன் பொரியலும் வெண் சோற்றில் குந்தியபடி வெளியே வந்தன. மட்டி, சாளை மற்றும் சூடை போலிருக்கவேண்டும், எல்லா வகையான மீன்களையும் போட்டு நல்ல உறைப்பான கறி. வாயெல்லாம் புன்னகையாக ஓடியோடிப் பரிமாறினார்கள். அந்தக் கடைக்குள் அதுவரை அப்படியான அமளியைக் கண்டிராத, அவர்களது செல்லப் பிராணிகளான இரண்டு பூனைகளும் மூன்று நான்கு நாய்களும் காலுக்குள் ஓடி ஓடிச் சிலிர்த்தன. சாப்பாட்டின் ருசியால் எங்கள் எல்லோரது கண்களும் சிரித்தன.



நான்கு தலைமுறைகளாக தலைமன்னாரில் வாழுகின்ற அந்தக் குடும்பத்திற்கு மீனவமே வாழ்வாதாரம். இரண்டு தலைமுறைக்கு முன்னர் தாத்தா மாத்திரம் பிரஞ்சுக்காரராக நுழைந்திருக்கிறார். மீனைப் பொரித்துக் கொண்டு ஓடிவந்த சிவலைப் பெண்ணின் கண்களில் தத்தாவின் பிரஞ்சுக் கலப்புத் தெரிந்தது. அனைவருக்கும் தமிழ் தெரிந்திருந்தது. ஆனால், சிங்களம்தான் புரிகிறது. எனக்குப் பக்கத்திலிந்து அசோகன் சுருவில் தனது நண்பரோடு மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார். பின்னுக்குக் கிடுகு வேலிக்குள் அடுப்பங்கரையில் சிங்கள சம்பாஷணை கேட்டுக்கொண்டிருந்தது. முன்னுக்கு, சுயாந்தன் தமிழில் ஏதோ கேட்டான். குளிர்நிறைந்த அந்தக் கொட்டில் கடைக்குள் ஒரு கதம்ப மாலையே அரங்கேறியிருந்தது.



சாப்பிட்டு முடித்துவிட்டு, கடை முன்றலில் நீண்ட இலக்கிய உரையாடல் நடந்தது. அடுத்த தலைமுறை மலையாள எழுத்தாளர்கள் அணுகும் இலக்கிய வகைமைகள், புலம்பெயர்ந்த மலையாளிகளின் எழுத்துமுறைகள், பேசப்படாத மலையாள எழுத்தாளர்கள், கே.ஆர் மீராவின் எழுத்துக்கள், மலையாள எழுத்துக்களில் எழுந்துவரும் உத்திகள், கடற்கரை வாழ்வு குறித்து மலையாள எழுத்தாளர்களின் அணுகுமுறைகள், மலையாள சிற்றிலக்கிய இதழ்களில் விவதாங்கள் என்றுபல விடயங்களை எம்.கே. மனோகரன், அசோகன் சிருவில், அஷ்டமூர்த்தி ஆகியோருடன் பேசினோம்.



பின்னர், பேசாலை வெற்றிமாதா தேவாலயத்துக்குப் புறப்பட்டோம். அது நான் கேட்டுக்கொண்டதற்கு அமையச் சென்ற இடம். இந்தத் தேவாலயத்தில் நடைபெறும் உடக்குபாஸ் என்று வியாகுலப் பிரசங்கத்தின் அடிப்படையிலான பாரம்பரிய கூத்துக்கலையை வைத்து எழுத்தாளர் உதயன் எழுதிய நாவல் "கப்பித்தான்" பேசாலை என்ற பிரதேசத்தின் உருவாக்கத்தையும் அதற்கான வரலாற்றுப் பின்புலங்களையும் எழுதிய அருமையான நாவல். உடக்குபாஸ் கூத்துப் பற்றி நாவலில் படித்ததுமுதல், அந்தத் தேவாலயத்தைப் பார்க்கவேண்டும் என்று உதயன் அண்ணனிடம் தொலைபேசியில் கூறியிருக்கிறேன். இன்று மலையாள எழுத்தாளர்களின் புண்ணியத்தில் மானிப்பாய்காரனுக்கு அதிஷ்டம் கிட்டியது. பெறுமதியான விஜயம்.



அதன்பிறகு, பள்ளிமுனையில் அமைந்துள்ள பருக்கை மரத்துக்கு விஜயம் செய்தோம். ஆபிரிக்க நிலத்தின் பூர்வீக மரமான இந்த பருக்கையை, தங்கள் ஒட்டகங்களுக்குத் தீனிபோடுவதற்காக எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் அரேபியர்கள் மன்னாருக்குக்கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது. சுமார் 21 மீற்றர் சுற்றளவில் பருத்துப்படுத்திருந்த கரிய மரத்தின் மீது, பச்சிலைகள் கிளைகளெங்கும் செழித்துச் சடைத்திருந்தன. மன்னாரின் இன்னொரு வரலாற்றுச் சாட்சியத்தையும் தரிசித்த கையோடு அங்கிருந்து வெளியேறினோம்.


வெள்ளாங்குளம் காட்டுக்குள் யானை பார்க்கலாம் என்று இரண்டு பக்கமும் கண்களை எறிந்தபடி வந்தோம். ஆங்காங்கே குரங்குகள்தான் துள்ளி விளையாடிபடியிருந்தன. குறுக்கும் மறுக்குமாக வழக்கம்போல மாடுகளின் பயணம் தெருவெங்கும் நிகழ்ந்தது. வேகத்தைக் குறைத்து அவற்றோடு சமரசம் செய்தபடி மல்லாவிக்கு வந்து சேர்ந்தோம். அம்மாச்சியில் தேனீர் பருகினோம்.



மாலைச் சூரியன் செவ்வொளி பரப்பியபடி தொலைவில் இறங்கத் தொடங்கியது. மாங்குளம் சந்தியோடு சுயாந்தனிடம் விடைபெற்றோம். நான் சேட்டன்களின் வாகனத்தில் ஏறி, களைத்துக் களித்த பயணத்தை உரைமீட்டியபடி கிளிசொச்சியை வந்தடைந்தோம்.


அனைவரது மனங்களும் தொலைபேசிகளும் காட்சிகளால் நிறைந்திருந்தன.

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page