
நகல் - நிஜம்: மீஹாத்
- Jul 3
- 2 min read
மீஹாத்தின் "நகல் - நிஜம்" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. நானும் கருணாகரனும் கிருஷ்ணமூர்த்தியும் சனியன்று பிற்பகல் புறப்பட்டு, ஆறு மாவட்டங்களின் ஊடாகப் பயணம் செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னால் சென்று இறங்கும்போது, ஞாயிறு சாமம் ஒரு மணியாகிவிட்டது. எங்களுக்காகக் காத்திருந்த மீஹாத் அக்கரைப்பற்றுப் பெரு வளைவின் கீழ் வந்து வரவேற்று எமக்கான தங்குமிடத்தில் சேர்த்தார்.
கிழக்கிற்குப் பயணிக்கும்போதெல்லாம் நான் ஆச்சரியப்படுகின்ற விடயம், அங்குள்ள முஸ்லிம் பிரதேசங்களின் இரவு வாழ்க்கை. ஓட்டமாவடியில் ஆரம்பித்து அக்கரைப்பற்றுவரையுள்ள அத்தனை முஸ்லிம் பிரதேசங்களிலும் சாப்பாட்டுக்கடைகள், பல சரக்குக்கடைகள், தொலைபேசிக் கடைகள் முதற்கொண்டு புடவைக்கடைகள்வரை இரவு பதினொன்றுக்குப் பின்னரும் இயங்கியபடியிருந்தன. காத்தான்குடிக்கு அருகிலுள்ள தெருவோர மைதானமொன்றில் அந்த நேரத்தில் இளைஞர்கள் பட்டாளம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது.

சிட்னி, மெல்பேர்ன் பெருநகர இரவு வாழ்க்கை என்பது களியாட்ட விடுதிகள், உணவகங்கள், மதுபான நிலையங்கள், சூதுவாடிகள் எனக்குறிப்பிட்ட தொழிற்துறைகளினால் மாத்திரம் இயங்குபவை. அவ்வாழ்வில் வசியம் கொண்டவர்கள் மாத்திரமே அந்த இரவில் அலைகிறார்கள். அதில் தம்மைத் தொலைத்துத் திளைக்கிறார்கள். ஆனால், கிழக்கின் இரவு வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. இடையில் ஒரு கோயிலில் சாமிவேறு வெளிவீதி வலம் வந்துகொண்டிருந்தது. அதற்காக இன்னொரு இடத்திலிருந்து பறவைக் காவடி போய்க்கொண்டிருந்தது.
வண்ண வரிசைகளில் அமைந்த வீதி விளக்குள், மின் முடி சூடிய கோவில் கோபுரங்கள், அருகருகாக அமைந்த அடுத்த மத ஆண்டவர்கள், உணவகங்களுக்கு வெளியில் மேசையிட்டு உண்ணும் சாப்பாட்டுப் பிரியர்கள், அவர்களுக்கு இடையில் மின்னும் செல்பிகள் என்று அனைத்தையும் கண்களால் சுவைப்பதற்காகக் கால்வாசித் தலையை ஜன்னலுக்கு வெளியே சரித்துவைத்திருந்தேன்.

ஏறாவூர், வாழைச்சேனை, கிரான், செங்கலடியென பரந்துகிடந்த வயல்வெளிகளின் அழகை இருளில் காண முடியாவிட்டாலும் குளிர்காற்றினால் குறிப்பறிந்துகொண்டேன்.
பக்கத்துப் பள்ளிவாசலின் பாங்கொலியோடு அக்கரைப்பற்று விடிந்தது. சற்று நேரத்தில் மனம் நிறைய அன்போடும் கை நிறைய அப்பத்தோடும் வந்து கதவைத் தட்டினார் மீஹாத். இலக்கியம் சோறு போடுமோ இல்லையோ, அப்பம் போடும் என்பதனை அவரது வருகை உறுதிப்படுத்தியது. அருகிலுள்ள கடைக்கு நடைபோனோம். தேனீர் சடங்கை முடித்துக்கொண்டு, ஓட்டோ ஒன்றில் ஏறி, ஆறு கிலோமீற்றர்களை ஆரையாகக் கொண்டு சிறுவட்டத்தில் அக்கரைப்பற்றை வலம் வந்தோம். அவ்வப்போது இறங்கிப் படமெடுத்தோம். ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சிக்கடைக்குப் போய்க்கொண்டிருந்த அக்கரைப்பற்று வாசிகள், மேய்ந்துகொண்டு திரிந்த எங்களை விநோதமாகப் பார்த்துச் சென்றனர்.

சிராஜ் வீட்டிற்குச் சென்றோம். புத்தக விற்பனையும் வாசிப்பும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் புதிய வாசிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்று சில விடயங்களைப் பேசிவிட்டு, அருகிருந்த கடையில் அன்னாசிச் சாறு அருந்தினோம்.

ஒன்பது மணிக்கு நிகழ்விடத்துக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார் நலீர். நீர்ப்பூங்காவின் நடுவில் அமைந்த திறந்தவெளிக் கேட்போர்கூடம் தடாகத்தில் தாமரைபோல காட்சியளித்தது. சரியான இடமாகவே மீஹாத் தெரிவுசெய்திருந்தார். நிகழ்விற்கு இடையில் யாரும் டிமிக்கி கொடுத்துவிட்டு எழுந்து ஓடமுடியாது. மூன்று பக்கமும் தண்ணீர். ஒரு மார்க்கம் மாத்திரமே தரைவழி. கூட்டத்திற்கு நடுவே தப்புவதானால், எல்லோருக்கும் தெரியும்படி எழுந்து நடக்கவேண்டும் அல்லது ஓடவேண்டும்.
எங்களைக் கண்டதும் ஷாதிர், ரஸாக், ஜிப்றி என்று நண்பர்கள் வந்து ஆரத்தழுவிக்கொண்டார்கள். நீர்ப்பூங்காவைச் சுற்றிச் சிறு நடைபோனோம்.

நிகழ்வு இனிதே - சம்பிரதாயபூர்வமாக - தாமதமாக ஆரம்பித்தது.
எல்லாத்துறைகளுக்குள்ளேயும் நீக்கமற ஊடுருவிக்கொண்ட செயற்கை நுண்ணறிவு, இலக்கியத்திற்குள் ஏற்படுத்தப்போகும் / ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் என்ன? அந்தத் தாக்கத்தின் வீச்சு என்ன? சிருஷ்டிக்கும் துறையில் செயற்கை நுண்ணறிவினை எதுவரை அனுமதிக்கலாம்? நிஜங்களாகியிருக்கும் நகல்கள் (simulakrum) எனப்படும் பின் நவீனத்துவ தத்துவச் சிந்தனை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மிகை யதார்த்தமாகப் (hyper reality) பரிணமித்துள்ள பிரதிகளுக்கு AI யுகத்தில் பெறுமதி என்ன? இப்படியான பிரதிகளை விமர்சன ரீதியாக வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய தேவை என்ன?
போன்ற இலக்கிய நிகழ்வுகளில் வழக்கமாக பேசப்படாத புதிய விடயத்தை இந்த அமர்வு விவாதத்திற்கு எடுத்திருந்தது. மிஹாத்தின் "நகல் நிஜம்" நூலின் ஊடாக இந்த உரையாடல் நடைபெற்றது.

இலக்கியத்துறை சார்ந்து மாத்திரமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத்துறை சார்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்ததால், அமர்வு கிட்டத்தட்ட இலக்கியத்திற்கும் சமகாலத் தொழில்முறைச் சாவால்களுக்கும் இடையிலான பாலத்தின் மீது நின்று உரையாடும் நிகழ்வாக அமைந்தது.
நிகழ்விற்கு மீஹாத்தின் நண்பர்கள், வாசகர்கள், அரசியல் தரப்பினர், உரையாளர்கள் என்று பலரும் சமூகளித்திருந்தனர். சில உரைகளின்போது, கொளத்தூரில் ஸ்டாலினைத் தோற்கடித்த வி.எஸ். பாபுவின் ஸ்டைலில் இரண்டு கைகளையும் குறுக்காகப் போட்டு ‘கத்தரி அபிநயம்’ செய்துவிடலாமோ என்றிருந்தது.

இரண்டரை மணியளவில் நிகழ்வு முடிவடைந்தது.
இலக்கிய உரைகள் மூக்கு முட்ட நிறைந்திருந்தது. அறைக்குச் சென்று குட்டித்தூக்கம் போட்டோம். சிராஜ் தலைமையில் மாலையில் அக்கரைப்பற்றுக் கடற்கரைக்குச் சென்று காற்றும் பிளேன் ரீயும் வாங்கினோம். படங்கள் எடுத்தோம். மினி மணல் வெளி உரையாடல் ஒன்றை நடத்தினோம். அங்கேயும் இலக்கியம் பேசினோம்.
ஏழரை மணிக்கு கலர்புல் காண்டா மிருகம் போல உறுமிக்கொண்டு புறப்பட்ட பேருந்தில் ஏறினோம்.
வழி நெடுக அத்தனை நகரங்களும் இரவொளியில் மீண்டும் உதிக்கத் தொடங்கியிருந்தன.




Comments