top of page

தசமகா தேவியர்

  • Jun 23
  • 2 min read

அண்மையில் தமிழகம் சென்றபோது வாங்கி வந்த சிறு தொகுதி நூல்களில் முக்கியமானது நூல்வனம் பதிப்பாக வெளியாகியுள்ள "தசமகா தேவியர்" என்ற பயண நூல்.


பயணங்கள் எனக்குள் கொண்டாட்டம் மிக்கவை. அறியாத நிலம் நோக்கிச் செல்லும் ஒவ்வோர் பயணமும் எனக்குள் அணையாச் சுடரை ஏற்றிவைக்கும் பெரு விழா போன்றவை. ஒரு முழுயான பயணம், ஒரு பெரு நாவலின் வாசிப்பு அனுபவத்தைத் தந்துவிடக்கூடியது. இந்த வருடம் எனக்கு அமைந்த பல பயணங்கள், அவ்வாறான புதிய அனுபவத்தை அள்ளித் தந்தவை. பயணம் தொடர்பான பிரதிகள், பயண ஆர்வலர்கள் ஏன் பயண அரட்டைகூட எனக்குப் பிடிக்கும். அந்தவகையில், இளம்பரிதியின் ‘பயணப்பொய்கையின் தடம்’ என்ற சிறுதலைப்போடு வெளிவந்த தச மகா தேவியரை ஆர்வத்தோடு வாங்கினேன்.


நூலாசிரியர் இளம்பரிதி தனது பயண அனுபவங்களை பத்துப் பெண்களின் வழியாக - முற்றிலுமான புனைவுப் பிரதியாக - முன்வைத்திருக்கும் வித்தியாசமான நூல் தசமகா தேவியர்.


இந்தப் பிரதியில் வழக்கமாகப் பயண இலக்கியங்களில் விதந்தோந்தப்படும் வரலாற்றின் வரைபடங்களோ, சகலருக்குமான சம்பிரதாய மொழியோ ஆச்சரியங்களின் ஆள்கூறுகளோ இல்லை. பதிலாக, அறியாப் பெரு நிலத்தின் பெருங்கதைகளை பெண் பாத்திரங்களின் வழியாக இளம்பரிதி விவரிக்கிறார். அவரது பயண வழிக்காதைகள் ஒரு புனைவுப் பிரதியாக - மிகச் செழுமையான மொழியோடு - முகிழ்ந்திருக்கின்றன.


பத்துக் கதைகளில், மும்பாயில் சந்தித்த ஈரானிய விமானப் பணிப்பெண் ஊடாக இளம்பரிதி பெற்றுக்கொண்ட பார்ஸி இன மக்களின் தீயுடனான உறவும் அவர்களது தாயகத் தீயை அணையாது தங்கள் புலம்பெயர்வின்போதும் எடுத்துச் சென்ற கதையும் மிகவும் முக்கியமானது. ஈழத்தமிழ் வாழ்வியலோடு ஒரு படிமமாக நெருக்கமாக உணரவைத்தது. அதுபோல, பார்ஸி இனமக்கள் தங்களில் இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்ற சடங்கினைப் பின்பற்றி, உயர்ந்த பீடங்களில் சடலங்களைக் கிடத்தி, பறவைகளுக்குத் தின்னக்கொடுக்கும் முறையும் அதன் பின்னணியிலுள்ள அவர்களது விளக்கமும் படிக்கும்போது துணுக்குறச் செய்தது.


மிஹிர் என்ற பெண் தன் மூதாதையர் போல ஏந்தும் நெருப்பு, சாவதற்காக முதியவர்கள் காத்திருக்கும் பனாரஸ் பகுதி ஜானகிப் பாட்டி - இறுதியில் அவர் இறப்பு, வத்தேஹள்ளிப் பிரதேசத்தில் ராஜ நாகங்களோடு விளையாடும் மானஸா என்று தஸ மகா தேவியரில் அனைத்துப் பெண்களும் கதை அருளும் நாயகிகளாக வியாபிக்கிறார்கள்.


இளம்பரிதியின் பயண அனுபவங்கள், இந்தியாவிற்குள்ளேயே இதுபோன்ற வித்தியாசமான களங்களில் வித்தியாசமான மனிதர்களோடு வித்தியாசமான அனுபவங்களாக விரிகின்றன. முன்பு குறிப்பிட்டதுபோல, இந்த அனுபவங்களை ஒரு பயணியின் நாட்குறிப்பாகவோ, கமராச் சாட்சியமாகவோ முன்வைக்காது, இவற்றினால் தனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை ஆன்மீக அனுபவமாக முன்வைக்கிறார். உண்மையில், இந்த நூல், பெண்களை தெய்வங்களாக உருவகித்து, அவற்றிடமிருந்து பெற்ற தவக்குறிப்புக்கள் போலவும் காட்சிப் படுத்துகிறது.


பயணங்களின் மீது ஆர்வமுடையவர்களுக்கு மாத்திரமன்றி புனைவின் மீது பெருங்காதல் கொண்டவர்கள் அனைவருக்குமான ஒரு அரிய நூல். வாழ்த்துகள் இளம்பரிதி.


நூல் - தசமகா தேவியர்

நூலாசிரியர் - இளம்பரிதி

பதிப்பகம் - நூல்வனம்

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page