top of page

மானிப்பாய் வெள்ளம்

  • Dec 19, 2025
  • 3 min read

இலங்கை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கினாலும் மானிப்பாய் தன்னந்தனியாக எந்தப் பாதிப்பும் இல்லாமல் மருதடிப்பிள்ளையார் கோவிலை மையமாகக்கொண்டு மிதக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெனில், மானிப்பாயிற்கு வெள்ளம் வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. சுதுமலை அம்மன் கோவில்பக்கம்தான் வயல்கரையோரமிருக்கிற கோயில் வழக்கம்போல முடி தெரியிற வரைக்கும் மூழ்கும், வெள்ளம் ஓரளவுக்கு இறங்கியபிறகு ஹீல்ஸ் போட்ட ஹிந்தி நடிகைபோல ஐயர் சேற்றுக்குள்ளால நடந்துபோய் பூசை செய்துவிட்டு வருவார். மானிப்பாய் பக்கம் பெய்கிற மழை சமச்சீராகச் சென்று வயல்களுக்குள் அடைக்கலமாவது வழக்கம். குளங்களில் பாய்ந்ததுபோக - குடங்களில் நிரம்பியது தீர - எஞ்சிய நோஞ்சான் வெள்ளம் ஆடி ஆடிப்போய் வழுக்கையாற்றில் விழுந்து அடங்கும்.


மானிப்பாயின் வெள்ள வரலாறு இதுதான்.


ஆக, இப்படிப்பட்ட வராத வெள்ளம் தொடர்பாக வேண்டாத விசாரணையொன்றை நடத்துவதற்கு அம்மாவை அழைத்தேன். அம்மாவுக்கு அன்றாடம் பல சோலிகள். தனது தோழிகளுக்கு அனுப்புவதற்காகப் புதிய இமோஜிகள் தருமாறு கேட்ட பிறகு, பல நாட்கள் நான் பேசவில்லை. இன்று அழைத்திருந்தேன். மழை - வெள்ளம் - மானிப்பாய் - மருதடி - மரியதாஸ் மாஸ்டர் வீட்டடி ஆலமரம் என்று வீட்டைச் சுற்றிய நிலவரங்களை கேட்டேன். உபரியாக, இந்தியத் தொலைக்காட்சி சீரியல்கள் பற்றிய மினித் தகவல்களைச் சொன்னார். கில்மிஷாவுக்குப் பிறகு, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியத் தொலைக்காட்சிகளில் போய் கலக்கும் வாகீஸன், கஜன் குழுவினர் போன்றவர்கள் பற்றி நானும் சிலாகித்துப்பேசி வியந்தேன்.


பிறகு மானிப்பாய் மழை பற்றிய விரிவான கேள்விகளைத் தூவினேன்.

எங்கள் வீட்டுப்பக்கம் பெரிய வெள்ளம் ஒன்றும் வரவில்லை என்று அம்மா திருப்தியோடு சொன்னார். இயக்கம் பவுண் வாங்குவதற்கே வரமுடியாதளவுக்கு மூலையிலிருக்கும் எங்களது வீட்டுக்கு வெள்ளம் வரவில்லை என்று அம்மா சொன்னது ஒன்றும் எனக்குப் புதினமில்லை. "வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வைரவர் கோவிலடி எப்படி" - என்று கேட்டதற்கு, "போன தடவை - வழக்கத்து மாறாக - சாதுவாகத் தேங்கிய வெள்ளத்தினால் வில்வ மரம் பாறி விழுந்ததுபோல, இந்தத் தடவை எந்தப் பிரச்சினை ஒன்றும் இல்லை" என்றார் அம்மா. "போய் வாற வழி கவனம், சேறு சறுக்கும், புற்றுகளுக்குள் வெள்ளம் போனால் பாம்புகள் வெளியிலதான் ரோந்து போகும்" - என்று கவனப்படுத்தினேன். ஆனால், அம்மாவுக்கு அவற்றைப் பற்றியெல்லாம் கவலையெதுவுமில்லை. ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன்தான், வைரவர் கோவிலுக்கு போய்விட்டு, ஒற்றையடிச் சேற்றுப் பாதையால் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது நாக பாம்பொன்று தன்னைப் பார்த்துப் படமெடுத்தபடி எழுந்து நின்றதாம். கேட்டவுடனேயே எனக்கு முதுகில் பாம்பு ஏறியதுபோல சுளீர் என்றிருந்தது. அம்மா கொட்டாவி விட்டபடி கதையை சகஜமாகவே தொடர்ந்தார். தான் அந்த இடத்திலேயே நின்று கும்பிட்டபடி மூண்டு தேவாரத்தை படிச்சிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். தேவாரத்தால் பாம்பைக் கலைக்கலாம் என்று அம்மாவின் பக்திபூர்வமான கண்டுபிடிப்பு எனக்குப் புதியதாக இருந்தது. நான் ஆர்வத்தோடு - "பாம்பு எந்தப் பக்கம் போனது" - என்று கேட்டேன். "அது அப்படியேதான் நிக்குது. நான் வந்திட்டன்" - என்று அதனையும் அம்மா சகஜமாகவே சொன்னார். இந்தக் காலத்து GenZ பாம்புகளே சாய் அபயங்கர் போன்றவர்களின் பாடல்களுக்குத்தான் மயங்கும் என்ற தகவலை அம்மாவுக்குச் சொல்லி நான் எரிச்சலூட்ட விரும்பவில்லை.


நான் கதையில் விட்ட இடைவெளியில், அம்மா ஒரேயடியாக ஆஸ்திரேலியா பக்கமாக தனது ஆட்லறிகளைத் திருப்பினார்.


"இந்த மாதம் மெல்பேர்னில் முக்கியமான கிரிக்கெட் ஏதோ நடக்குதாம். அப்பா சொன்னார்" - என்று ஆரம்பித்தார். பதிலுக்கு நான் "ஆஷஸ் தொடர் என்றால் என்ன" என்று அறுவையான சிற்றுரையொன்றை நிகழ்த்தினேன். அம்மாவுக்கு எனது பூமர் கதையில் அவ்வளவு ஈடுபாடிருக்கவில்லை, அவர் ஆஷஸ் பற்றிய கதையை ஆரம்பித்ததே வேறு காரணத்துக்காக என்பது பிறகுதான் புரிந்தது.


அம்மாவின் வகுப்புத் தோழிகள் (அதாவது மூதாட்டிகள் movement ஒன்று) மெல்பேர்னில் பழைய மாணவிகள் ஒன்றுகூடலொன்றை (get-together) நடத்தப்போகிறார்களாம். "உம்மட மகன் மெல்பேர்னிலதானே இருக்கிறார், நீரூம் வாருமப்பா" - என்று சகதோழி ஒருவர் தனக்கு whats App invitation அனுப்பினவவாம். உலகின் சகல சாத்தியங்களையும் முறியடித்துக்கொண்டு வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர் என்ற வகையில் ஈலோன் மாஸ்க் மீது எனக்கு எப்போதும் மாபெரும் வியப்பிருக்கிறது. ஆனால், அம்மா ஒரு அதிரடி ட்ரெண்டிங்க் நட்சத்திரமாக மிரட்டியபோது, எனக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு விண்கலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. அது மாத்திரமல்ல, இந்த மூதாட்டிகள் movement ஒழுங்குசெய்கின்ற ஒன்றுகூடலில், அம்மாவின் தோழிகள் "மலை மலை மருதமலை" பாட்டுக்கு டான்ஸ் ஆடப்போகினமாம். தான் யாழ்ப்பாணத்தில இருந்து ஒன்றுகூடலுக்கு வருவதாக இருந்தால், வரும்போது நல்ல டிசைனான துவாய் ஒண்டு கொண்டுவரச் சொல்லியிருக்கினமாம்.

உலகமே "வண்ண வடிவேலன்" - என்று பக்தி மயமாக முக்தியடைந்துகொண்டிருக்கும்போது, எங்களை முந்திச்சென்ற மூதாட்டிகள் கூட்டமொன்று மும்தாஜை வளைத்துப் பிடித்திருப்பதைக் கேட்டு எனக்கு தாடை விழுந்தது.


ஆனால், இந்தக் கிழவிகளின் குத்தாட்டத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு "விஸா போடப்போறியளா" - என்று கேட்டேன். "இல்லை அப்பன், இப்ப பிள்ளையார் கதை நடந்துகொண்டிருக்கிறபடியால, அதைக் குழப்பக்கூடாது" - என்றார் அம்மா பொறுப்பாக. பிள்ளையார் வில்லனாகியதால் மூத்த மும்தாஜுகளைக் காணமுடியாமல்போனது இந்த ஆண்டின் இறுதியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சாபம்.


இருந்தாலும், எனக்கு மனதுக்குள் அரித்துக்கொண்டிருந்த ஒரு கேள்விக்காக, நான் மீண்டும் வெள்ளக் கதைக்கே திரும்பிப் போனேன்.


"உங்க வெள்ளத்தால பாதிக்கப்படாத சனமும், வெள்ள நிவாரணம் வேணும் எண்டு பதிஞ்சு, காசு வாங்கப் பாக்கினமாம். அப்பிடி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டனியளோ" - என்றேன்.


"யாழ்ப்பாணத்தில எங்க அப்பு வெள்ளப் பாதிப்பு, இஞ்ச சண்டையாலையும் பாதிப்பு இல்லை, வெள்ளத்தாலையும் பாதிப்பில்ல. ஆனால், காசைச் சுருட்டுறத்துக்குச் சனம் வரிசையில நிண்டிருக்கும். எனக்குத் தெரிய அப்படி யாரும் வாங்கின மாதிரித் தெரியேல்ல" - என்றார் அம்மா.


வெள்ளம்போடாத மிதமான மானிப்பாய் மழையொன்று மனசுக்குள் பெய்ததுபோல இதமாக இருந்தது எனக்கு.


ஆனால், அடுத்த நொடியே அம்மா -


"உங்க சிட்னியில யாரோ ஒரு மனுசனுக்கு மில்லியன் கணக்கில சனம் காசு சேர்த்துக் குடுத்திருக்குதாம், உங்களுக்கு ஒண்டும் தரேல்லையே......." - என்றார்.


அம்மாவின் தேவாரத்துக்கு அசையாத பாம்புபோல நான் உறைந்துபோய் நின்றேன்.

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page