ஒரு புனைவெழுத்தாளன் தன்னை மொழிபெயர்ப்புக்குப் பலிகொடுப்பது என்பது இலக்கியத்தில் இடம்பெறுகின்ற உயர்ந்த தியாகங்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்பாளனின் நேரத்தையும் சுயபுனைவிற்கான சிந்தனையையும் சுவீகரிப்பது மாத்திரமல்ல, அவனுக்குள் நிறைந்திருக்கும் புனைவு மொழியையும் கிட்டத்தட்ட உறிஞ்சிவிடுகிறது. கார்த்திகைப் பாண்டியன் இந்த இழப்பினை, பெரும் அர்ப்பணிப்பாக - பல்வேறு அரிய நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவதன் மூலம் - பெரும்பணியாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தூழியன்.

"ஒரு சாகசக்காரனின் கதை" - கடந்த சென்னைப் புத்தகச் சந்தையில் கா.பா. கையால் கிடைக்கப்பெற்ற சிறுகதைப் புத்தகம். நேரமின்றிக் கடந்து சென்ற வரிசையிலிருந்து கடந்தவாரம் படிக்கக் கிடைத்தது.
இத்தொகுப்பில், அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களிலிருந்தும் தான் கடந்துவந்த மனிதர்களிடமிருந்தும் - இலகுவாக நனவிடைதோய்தல் பதிவுகளாக மாறிவிடக்கூடிய - சம்பவங்களை, புனைவின் பல படிகளுக்கு நகர்த்திச் செல்கிறார் கா.பா. தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'பிளவு" இந்த வகையிலான மனதுக்கு நெருக்கமான் கதை.
ஆஸ்திரேலியாவில் பெருகிவருகின்ற கட்டாக்காலி கங்காருகளின் தொல்லையால், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கங்காருகளைக் கொன்றுபோடுகின்ற அரசுத் திட்டமொன்று இடம்பெற்றுவருவது பலருக்குத் தெரிந்திருக்கும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சாகசக்காரனின் கதையில் வருகின்ற, கன்றுகளை அறுத்துப்போடுகின்ற சம்பவம், நான் வாழும் தேசத்தின் இரத்தச் சடங்கொன்றின் வழியாக நெருக்கமாகியது. அந்தப்புள்ளியிலிருந்து கதை நகரும் திசையும், அதன் முடிவில் மரணமும் - களிப்பும் மேலும் கீழுமாக ஏறிநிற்கின்ற முரணும் - கா.பா. சொல்வதுபோல - ஒரு வெள்ளை நாரையாக எமக்குள் சிறகடித்துப் பறந்து பின் இறந்து வீழ்கிறது.
"உலகின் சின்னஞ் சிறு காதல் கதை"யும் "சாமி"யும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்கின்ற அன்றாடங்கள்தான். நம் எல்லோருக்கும் கிடைக்கின்ற வித்தியாசமானதொரு அனுபவம்தான். ஆனால், கா.பா இந்தச் சம்பவங்களுக்கான சொற்களைச் சேர்க்கும்போதும் புனைவு அவருக்கான பிரத்தியேகமான புன்னகையை அருள்கிறது. அந்தக் கதைகள் அனல் குவியும் நிழலாக எங்களுக்குள் குற்றங்களின் குவிப்பை நிகழ்த்துகிறது. இதுவே, பெரு வரமே அவரின் கதைகளுக்கு உயிரளிக்கிறது.
கா.பாவின் கதை நாயகர்கள் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதிகளாக குற்றத்தின் நிழலிலும் குற்ற உணர்விலும் சஞ்சரிக்கிறார்கள். அந்தச் செந்நிழல் படிந்த பாதைதான் கா.பாவின் எல்லா கதைகளினதும் மையச் சரடாக நீண்டுகிடக்கிறது.
மனிதனுக்கு மிகப்பிரியமான குணங்கள் வன்முறையும் வன்மமும்தான். இதனை மீண்டும் மீண்டும் அகமும் புறமுமாய் தனக்கு வாய்க்கப்பெற்றவர்கள் மீதெல்லாம் அவன் நிகழ்த்தித் திருப்திக்கொள்கிறான். பின் அதற்காக வருந்துகிறான். ஈற்றில், தனிமையில் எஞ்சும் அவனையும் அவன் காயங்களையும் காலம் ஆற்றுப்படுத்தி மறுவாழ்வளிக்கிறது. அன்பு என்ற கலைச்சொல்லின் பின்னால் ஒழிந்துகொள்கின்ற இப்போலி உலகம் மறைக்க விரும்புகின்ற பிரபஞ்சப்பேருண்மை இது. கா.பாவின் கதைகளில், இவ்வாறு காலம் மருந்தளிக்கும் குற்றத்தின் சுழற்சிகள் பல்வேறு புதிர்வட்டங்களாக நிகழ்ந்து மறைகின்றன.
எல்லாவற்றிலும் ஒருபடி மேலாக, ஒரு சாகசக்காரனின் கதையை கா.பா. தனது அசலான மொழியில் நகர்த்தியிருப்பது இப்புனைவின் பிறிதொரு ஆச்சரியம்.
ஒரு சாகசக்காரனின் கதை
வெளியீடு - எதிர்
Comments