ஒளிவளர் பயணம்
- Jan 28
- 1 min read
சமகாலத்தில் அன்றாடம் என்பது நாங்கள் திரை நேரங்களில் செலவிடுகின்ற நீள் கணங்கள் தின்றதுபோக, கைகளில் கிடைக்கின்ற வாழ்க்கையின் அதிஷ்டம் மிக்க பெறுமானமே. இந்த மிகுதிகளில் எங்களை ஆட்கொள்கின்ற காட்சிகள் - எழுத்துக்கள் - உரையாடல்கள் என அனைத்தும் எங்களை இயல்புக்கும் பாவனைக்கும் இடையில் நுட்பமாக விசாரணை செய்கின்றன. உள்ளத்தையும் அதில் உறங்கும் உண்மையையும் பல விதமாக எடைபோடுகின்றன. எமக்குள் செயற்கையான உலகங்களை உருவாக்க எத்தனிக்கின்றன. ஒவ்வாமைகளில் ஒட்டப்பார்க்கின்றன. பசிய வாழ்வொன்றை வாழ்வதற்குக் கடுமையான பயிற்சிகளை கோருகின்றன.

இவ்வாறு மிகுதிகளில் கண்ட நிகரான உலகினையும் அங்கு உணர்ந்த கணங்களையும் சொற்களில் கோர்த்துப் பிணைத்த புனைவுப் பிரதியே "மாயச்சூது".
இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஏதோவொரு வகையில் எனது அன்றாடங்களைத் தொந்தரவு செய்தவை. நான் உணர்ந்த நிகழ்வுகளின் மீது புனைவின் தீண்டலைக் கோரியபவை. சொல் வெளிகளில் களிநடனம் புரிந்தவை. கதைப் பிரசவத்திற்கான திகதிகளைத் தாங்களே தீர்மானித்தவை. பிறப்பினால் எனக்குள் நிறைவைச் சேர்த்தவை.
ஒரு புலம்பெயரியின் பருதிப் பார்வையில், வாழ்வின் பல்வேறு கணங்கள் ஏற்படுத்திய புதிய அனுபவங்களும் புதிய களங்களும் புதிய பார்வைகளும் இக்கதைகளில் புதிய உலகங்களில் வெளிச்சம் பாய்ச்சியிருக்கின்றன. இந்த சிறுகதை உலகங்களிற்குள் புனைவின் வழியாக நான் மேற்கொண்ட ஒளிவளர் பயணப்பேறினை வாசகர்களும் பெற்றுக்கொண்டால் - அல்லது வாசிப்பவர்களின் ஆழ் மனதில் இக்கதைகள் சிறு அசைவை ஏற்படுத்தினால் - அது இந்தக் கதைகளுக்கு ஏற்பட்ட நிறைவான அங்கீகாரம் எனக் கருதுகிறேன்.

இந்தப் புனைவுப் பிரதி, வெறுமனே அதிர்ச்சிகளுக்கும் சலிப்புக்களுக்கும் பின்னால் மறைந்திருக்கும் புதிர்ச்சித்திரங்கள் அல்ல. சில கதைகளிலுள்ள சம்பவங்கள் எனக்குள் பல ஆண்டுகளாக உறைந்து கிடந்து தொந்தரவு செய்தவை. கதைகளின் ஊடாக எனக்குள் பெரு வெளிச்சத்தை உருவாக்கியவை. புதிய உலகங்களுக்கான வழிகளை காட்டியவை.
இது எனது நான்காவது சிறுகதைத் தொகுப்பு. முதல் மூன்று தொகுப்புக்களைப்போலவே இந்தத் தொகுப்பின் கதைகளும் அவை எனக்கும் நிகழ்ந்த கணங்களும் மிகுந்த நிறைவைத் தந்திருக்கின்றன. அந்த வகையில, கதை புரண்டோடும் புனைவுப் பெருநிலமாய் என்னுள்ளத்தை பெறுமதியோடு பேணுகின்ற என் மொழியை இக்கணத்தில் பெருமையோடு பாதம் தொட்டுப் பணிகின்றேன்.
இத்தொகுப்பினை அழகாக உருவாக்கித் தந்துள்ள நூல்வனம் பதிப்பகத்தாருக்கும் மனம் கனிந்த நன்றிகள்
தெய்வீகன்





Comments