மாயச்சூது - லதா அருணாச்சலம்
- Jan 30
- 2 min read
தெய்வீகனின் சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடான - “மாயச்சூது” வாசித்து முடித்தேன்.

முதலில் கவனத்தில் பட்ட விஷயம், இத்தொகுப்பு அளவில் மிகச் சிறியது, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான வாசிப்பு நேரமே கோரும் நூல். கெட்டி அட்டையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகான நூல் இது. தெய்வீகனின் வழக்கமான தேர்ந்த தமிழ்ச் சொல்லாடல்கள் கொண்ட முன்னுரையுடன் தொடங்கும் இந்நூல், அவரது புனைவுப் பயணத்தின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்த்துகள் .
தொகுப்பின் முதல் கதையான ‘அவனை எனக்குத் தெரியும்’, அவர் முன்பு எழுதிய - இன்றும் தெய்வீகனின் அடையாளச் சிறுகதையாகக் கருதப்படும் - ‘அவனை எனக்குத் தெரியாது’ என்ற கதையின் தொடர்ச்சியாக விரிகிறது. மரணத்தை முன் கூட்டியே அறியும் மனிதனின் கொந்தளிக்கும் மன அலைவுகள் ஓவியக் கலை மூலம் வெளிப்படுவது நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. அவனையே சுமப்பது போல அந்த ஓவியங்களைச் சுமந்து செல்லும் தாயின் இழப்பின் வேதனையை உணர முடிகிறது. மகனுக்கு மரணத்தை அளித்தவனுக்கு அந்தத் தாயின் மன்னிப்பு என்னும் கச்சிதமான முடிவை அளித்ததன் மூலம், நாயகன் தன் குற்ற உணர்விலிருந்து வெளிவரக்கூடிய சாத்தியங்களை முன்வைக்கிறது. மீட்சி என்பது மன்னிப்பின் வழியாகவும் வரக்கூடியதுதானே?
‘எட்டாவது திரை’ கதையில், இரவு கண்காணிப்பு கேமரா பணியாளர் ஒருவர், இரவின் வசீகரத்தையும் அதில் உலவும் மனிதர்களையும் பல ஆண்டுகளாகத் திரையின் வழியே மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால், பகலின் முகத்திற்கு அந்நியனாகிப் போகிறார். பணியிலிருந்து ஓய்வு பெற்று, பகலை நேர் கொண்டு வாழ வேண்டிய ஒரு சாதாரண வாழ்க்கை அவருக்கு அச்சுறுத்தலையும் அசுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. வாழ்வின் சுழற்சிகள் மாறுகையில் அதை ஏற்க முடியாமல் தவிக்கும் அகச்சிக்கலை இக்கதை பேசுகிறது. தவிர்க்க முடியாமல் ஜெயமோகனின் இரவு நினைவில் மோதுகிறது.
இறந்த மனித உடல்களை அறிவியலின் துணையால் பாதுகாத்து வைத்தால் எதிர்காலத்தில் மரணத்திற்குப் பின்னும் உயிர்ப்பிக்கும் அறிவியல் முன்னேற்றம் நிகழ்ந்தால் அந்த உடல்களுக்கு உயிர் அளிக்கலாம் என்ற futuristic சிந்தனையுடன் எழுதப்பட்ட கதை ‘உறை பிழம்பு’. இந்தத் தகவல் உண்மையிலேயே கதையை சுவாரஸ்யமாக்குகிறது. ஆனால், இது அறிவியல் கற்பனையாக மட்டும் நில்லாமல், போரில் தோல்வியுற்ற பின் உயிர் வாழும் மனிதர்களின் மனத் தழும்புகள், இயலாமையின் அழுத்தம் ஆகியவற்றையும் நுட்பமாக அணுகுகிறது.

‘கார்த்திகை’ என்னும் கதையில், மாடு ஏன் ‘கார்த்திகை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது, எவ்வாறு அது அனைவரின் அன்புக்கும் வழிபாட்டுக்கும் பாத்திரமாகி, இறுதியில் இயற்கையின் சக்திக்கு முன் உயிர் விடுகிறது என்று மனதில் அசைபோடும்போது, கதையின் குறியீட்டு அர்த்தம் மெதுவாக வெளிப்படுகிறது.
‘இறுதி முற்றுகை’ தொகுப்பின் சிறந்த கதை என்று சொல்லிவிடக்கூடிய அளவிற்கு வலிமையானது. எத்தனை முறை கேட்டாலும், வாசித்தாலும், ஏதிலிகளின் கையறு நிலை, ஈரம் காயாத காயங்களாக வலி தருபவையே. போருக்குச் சென்ற ஆண்களை விட, அவன் விட்டுச் செல்லும் சுமையைச் சுமப்பவள் பெண் என்பதையும், அதன்பின் குடும்பத்தைக் கால அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த வீரத்திற்கும் குறைந்ததல்ல என்பதையும் இக்கதை சொல்கிறது. ‘தன்னுடைய மக்களுக்காக அவன் சொந்த மண்ணில் போராடினான்,தன்னுடைய கணவனுக்காக அவள் இந்த மண்ணில்
போராடுகிறாள். போர் முடியும்போது அது தாய்மார்களிடமும் பெண்களிடமும்தான் கையளிக்கப்படுகிறது’ எவ்வளவு உண்மையான வரிகள். இறுதியில் அந்தக் குடும்பத்து மகள் வெல்வதாகக் காண்பிக்கப்படும்போது, வாசகரின் உள்ளத்தில் நிச்சயம் ஒரு நிம்மதிப் புன்னகை மலர்கிறது.
‘நீர்வளை’ கதையில் ஒளிந்து வாழும் அகதியின் நிலை குறித்துக் கூற வந்த கருணையும் இரக்கமும், ஏனோ வாசகரிடம் முழுமையாகக் கடத்தப்படவில்லை. கதாபாத்திரங்களின் பின்னணி குறைவாக கூறப்பட்டிருப்பதும், குகையின் சூழலும் மீட்புப் பணியின் தீவிரமும் அதிகமாக முன்வைக்கப்பட்டிருப்பதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
‘காவு’ என்னும் கதை, அதிகம் பேசப்படாத ஒரு பொருளைத் தொடுகிறது. ஓரினச் சேர்க்கையாளர்களின் ஈர்ப்பும் காதலும் தயக்கமின்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகாமில் அடைக்கப்பட்ட பின்னர், கதை தன்னுடைய ஆரம்பத் தீவிரத்திலிருந்து சிறிது நீர்த்துப் போனதுபோல் தோன்றுகிறது. முகாமில் ஆண்களின் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவு இந்தக் கதை அறியத் தருகிறது.
மொத்தமாகப் பார்க்கையில், கதைகளின் பொதுவான மையக் கருதுகோள்களாக ஆஸ்திரேலியா நகரில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழ்க்கை, இறுக்கம் மற்றும் அநிச்சயம் படர்ந்திருக்கும் முகாம் சூழல், போருக்குப் பிந்தைய வெறுமை ஆகியவை அமைந்துள்ளன. குடியுரிமை உள்ள புலம்பெயர் அதிகாரி கடமையின் பொருட்டு தன் நாட்டவரையே வெளியேற்ற வேண்டிய கையறு நிலையில் இருப்பதும் அதன் தொடர்பான மன உளைச்சலும் அனுவங்களன வாயிலாக தெய்வீகனின் எழுத்தில் துல்லியமாக விவரிக்கப்படுகிறது. ஆனால் இதே களம், இதே மையக்கரு ஆகியவற்றில் தெய்வீகனின் விரிவான கதைகள் முன்பே வெளிவந்துள்ளதால், சில இடங்களில் கூறியது கூறல் என்ற உணர்வு ஏற்படுகிறது.
எல்லாக் கதைகளிலும் நேர்த்தியான கூறுமுறை, மொழியின் கச்சிதம், புதிதான ஒரு விஷயம் இருப்பது என அனைத்திலும் தெய்வீகனின் புனைவுலக விரிவு புலப்படுகிறது.
அவரது அனைத்து படைப்புகளையும் தொடர்ந்து வாசித்திருக்கும் தோழமையாகிய நான் முன்வைக்கும் ஒரே கோரிக்கை, அவர் இனி ஒரு நாவல் எழுத வேண்டும் என்பதே. வாழ்த்துகள்.




Comments