மாயச்சூது - கண்மணி
- Jan 28
- 1 min read
Updated: Jan 30
தெய்வீகனின் 7 சிறுகதைகளை நேர்த்தியான கெட்டி அட்டைக்குள் தொகுத்து, கையிலடங்கும் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்- நூல்வனம் பதிப்பகத்தார்.
அரசாங்கங்களின் மாயச் சூதான போர்களின் விளைவாக வேற்று தேசங்களில் அடையாளமிழந்து, அமைதியிழந்து தவித்திடும் மனிதர்களின் தனிமையும் வெறுமையும் அச்சமும் தெய்வீகனின் கதைகளில் பிளந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தொகுப்பில் என்னை ஈர்த்த கதை - “எட்டாவது திரை” இதில் எழுத்தாளர், இருளையும் ஒளியையும் இரவையும் பகலையும் திருப்பிப்போட்டு விளையாடியிருக்கிறார்.
சற்று செயற்கையும் நீளமுமான “கார்த்திகை” கதை, தொகுப்பில் ஒட்டவில்லை.
“அவனை எனக்குத் தெரியும்” கதையில் முதுமை பழுத்த தாய், புத்திர சோகத்தோடு கொலைத் தண்டனையுற்ற தனது மகனது ஓவியங்களையும் சுமந்து திரிகிறார்.
மனதை வதைத்தெடுக்கும் 'இறுதி முற்றுகை'யில், "சிப்பாய்களாலும் ராஜாக்களை வீழ்த்த முடியுமென்று நம்பு ", என சிறுமி கூறுகையில், இந்த வாழ்வு போராட்டங்களுக்குப் பெறுமானதுதான் என்பதை உணர்கிறோம்.
'காலம் ஒரு கள்ளப்பருந்தைப் போல என்முன்னே விழித்திருக்கிறது’ போன்ற மீளவாசிப்பைக் கோரிடும் வரிகள், வாசகரை ஆங்காங்கு பிடித்து நிறுத்துகின்றன.
அறிவியல், காப்பாளர்கள் மற்றும் கிறிஸ்மஸ் தீவு பற்றிய கதைகள், ஓர் உலகளாவிய பத்திரிக்கையாளரின் பரந்துபட்ட பார்வையை முன்வைக்கின்றன.
மாயச்சூதைத் தனித்துவமான படைப்பாக்குவதும் தெய்வீகனை ஈழ எழுத்தாளர்களில் அலாதியாக்குவதும் இதுவே. நிதானமும் பொறுமையும் கைகூடினால் ஆழ்ந்த எழுத்துக்கள் வெளிவரும். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
எழுத்தாளர் கண்மணி




Comments