உலகளாவிய ரீதியில் அறுநூறு குழந்தைகளுக்கு ஒருவன் தகப்பன் என்று கூறினால் நம்பமுடியுமா? நம்பித்தானாகவேண்டும். விந்துக்கொடையாளர்களிடமிருந்து உயிரணுக்களை வாங்கி தங்கள் கற்பத்தில் இணைசேர்த்து குழந்தைகளை உருவாக்குவதற்கு அங்கலாய்த்த பல நூற்றுக்கணக்கான - குழந்தைகளற்ற - பெண்களிற்கு, தனது விந்தணுக்களை உவந்தளித்து, அறுநூறு பேருக்குத் தான் தகப்பன் என்று அறிவித்திருக்கிறான் டென்மார்க்கைச் சேர்ந்த பிள்ளையாண்டான் ஒருத்தன். அவன் ஒப்புக்கொண்டதிலிருந்து அறுநூறு என்ற கணக்கு உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், சட்டத்தை மீறும் வகையில் இடம்பெற்றுள்ள அவனது பல வருட விந்துக்கொடையை கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது, உலகளாவிய ரீதியில் அவன் கிட்டத்தட்ட மூவாயிரம் குழந்தைகளுக்கு தகப்பானாகியுள்ளான் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Netflix தளத்தில் கடந்தவாரம் வெளியாகியுள்ள The Man With 1000 Kids என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட தொடர் இந்த உண்மைச் சம்பவத்தினை விரிவாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
நாகரிக வளர்ச்சியானது எவ்வாறு நாளுக்கு நாள் புதிய உலகங்களை உருவாக்கி மனிதனிடம் கையளிக்கிறதோ, அதைவிட பல மடங்கான புதிய குற்றங்களையும் அது உற்பத்திசெய்துகொள்கிறது. நவீனங்களுக்குள் நுழைகின்ற மனிதன், அவற்றின் ஆக்கபூர்வ பயன்களை அனுபவிப்பதிலும்விட, அந்த உலகில் தனது கூர்மையான குற்றங்களை அதிவேகமாக நிகழ்த்திப் பார்க்கிறான். இது மனித மனதின் இயல்பானதொரு வெளிப்பாடு. மனிதன் இன்று வளர்ச்சியடைந்துவருகின்ற அனைத்துத் துறைகளையும் சற்று வேற்றுக்கண் கொண்டு பார்த்தால், அங்கெல்லாம் நொதித்துக்கிடக்கும் இத்தகைய இருள்-வலயங்களைக் காணலாம்.
மனிதன் உணர்வுபூர்வமாக ஒரு விடயத்தில் ஏக்கமடைந்து அதுவின்றி வாழமுடியாது என்ற புள்ளியில் தவிக்கின்றபோது, அந்தக் கையறுநிலை - வெறுமை - இயல்பாகவே அவனைச் சுற்றி ஒரு மாபியாவை உருவாக்கிவிடுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்களின் ஏக்கமென்பது மிகப்பெரியது. பெண்கள் மாத்திரமன்றி அவர்களின் இணைகளும்கூட அனுபவிக்கின்ற இரகசிய வலி. இன்னும் கூறுப்போனால், அந்த இயலாமையை பொதுச்சமூகத்தின் முன்பாக அவர்கள் ஒரு குற்ற உணர்வாகவும் அனுபவிக்கிறார்கள். இந்த வலியிலிருந்து மீள்வதற்கான நிவாரணிகளை விஞ்ஞானம் பல புகாரான தளங்களில் சாத்தியமாக்கிவைத்திருக்கிறது. அதில் முதன்மையானது, விந்துக்கொடையாளர் சந்தையில் - விருப்பமானவர்களைத் தெரிவுசெய்து - அவர்களிடமிருந்து விந்தினைப் பெற்றுக் கருவுறுவது. இந்தச் செயற்பாடானது வெற்றியளிக்கும்போது கிடைக்கின்ற அளவற்ற மகிழ்ச்சி, அதன் நீண்டகால விளைவுகளையும் அதன் பாரதூரங்களையும் கிட்டத்தட்ட மறைத்தே வைத்திருக்கிறது. ஏனெனில், இதனால் பாதிக்கப்படப்போறவர்களின் எண்ணிக்கையும் பாதிப்பின் பருமன்களும் நடைமுறைரீதியாகப் பெருமளவில் இன்னும் தெரியவராதவை. ஓரளவுக்கு எடுகோள்களின் அடிப்படையிலும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், கட்டுப்பாடுகள் - வரைமுறைகள் என்று வகுத்து வைத்திருக்கிறார்களேதவிர, சட்டங்கள் இத்துறையில் உள்ள எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடவில்லை.
அதாவது, ஒரு விந்துக்கொடையாளன் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளுக்குத் தகப்பானாகக் கூடாது. ஏனெனில், ஒரே விந்துக்கொடையாளன் மூலம் 25 குழந்தைகளுக்கு மேல் பிறக்கின்றபோது, அந்த குழந்தைகள் வளர்ந்து - அவற்றிற்கிடையில் உருவாகக்கூடிய ஒத்த குணங்கள் - ஈர்ப்புக்களின் அடிப்படையில் - அவை இணைகளாக மாறக்கூடிய சாத்தியமுண்டு என்கிறார்கள். பச்சையாகச் சொன்னால், அண்ணனும் தங்கையும் காதலில் வீழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இதைவிடவும் பல வேறு பாரதூரமான மருத்துவக் காரணங்களையும் குறிப்பிடுகிறார்கள்.
இப்படியிருக்கின்றபோது, டென்மார்க்கைச் சேர்ந்த Jonathan Jacob Meijer என்பவன், டென்மார்க்கில் அளவு கணக்கில்லாமல் விந்துதானம் செய்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தகப்பனாகினான். ஏதோவொரு வழியில், இது கண்டுபிடிக்கப்பட்டு டென்மார்க்கில் இவனது விந்துதானத்தை முடக்கியவுடன், இவன் வெளிநாடுகளுக்குச் சென்று குழந்தைகளுக்காக ஏங்கிய பல்வேறு பெண்களிற்கு, தனது தானத்தை ஆரம்பித்திருக்கிறான். இயல்பிலேயே இயலாமையின் அடிப்படையில் இரந்துநின்ற பெண்கள், இப்படியான விந்துக்கொடையாளர்களின் பின்னணிகளை சோதித்து, தானம் தருகின்ற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் கருமங்களிலெல்லாம் இறங்கிவிடவில்லை. கண்ணை மூடிக்கொண்டு தங்கள் கருப்பையைத் திறந்திருக்கிறார்கள்.

இறுதியில், இந்த இரகசிய வீரனது சர்வதேசக் குழப்பம் தெரியவருகிறது. பல நூற்றுக்கணக்கான குழந்தைகளை தங்களது பிள்ளைகளுக்கு தம்பி - தங்கைகளாக உருவாக்கிக்கொண்டிருக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு, இவனால் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இரகசியமாக இறைஞ்சினார்கள்.
அவனோ நிறுத்தியபாடில்லை. நாடு நாடாகச் சென்று தன்னை நம்பி விந்துகேட்டவர்கள் அனைவருக்கும் தானம் செய்வதில் ஒரு போதையடைந்தான். உலகின் எந்த மூலையில் நின்றாலும், அப்பா என்று குரல் கேட்டால் திரும்பிப்பார்க்கவேண்டிய தார்மீக நிலை.
இவனை எந்தச் சட்டத்தினால் முடக்குவது என்றும் எவருக்கும் தெரியவில்லை. கடைசியில், பாதிக்கப்பட்டவர்கள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் போய், தங்களது கையறுநிலையை கண்ணீரோடு முறையிட்டார்கள். நியூயோர்க் டைம்ஸ் இதன் பாரதூரத்தை எடைபோட்டுப் பார்த்தது. விந்துக்கொடை வீரனை பெயர் விவரங்களோடு வெளிக்கொண்டுவந்தது. அப்பா என்று அழைப்பதற்கு உலக வரைபடத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் இவனுக்குக் குழந்தைகளிருப்பதை அம்பலப்படுத்தியது. இவனது விந்து-வலையில் வீழக்கூடியவர்களை எச்சரித்தது.
இவனுக்குச் சட்டக்கடிவாளம் ஒன்றையும் போட்டால்தான், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்குப் போனார்கள். பல நூற்றுக்கணக்கான பெண்கள், தங்கள் மடியில் வந்து ஒரு ஆறுதலான தீர்ப்பு விழாதா என்று ஏங்கினார்கள். குழப்பான வழக்கினாலும் குழப்பவாதியினாலும் நீதிபதிக்கும் மண்டை காய்ந்தது.
"இத்தனை குழந்தைகளுக்குத் தகப்பானாயிருக்கிறாயே இதன் பாரதூரம் உனக்குப் புரிகிறதா? உன் குழந்தைகள் ஆளுக்காள் இணைகளாக மாறி, ஆரோக்கியமற்ற சமூகமாக எதிர்காலத்தில் மாறப்போவதை நீ சிந்திக்கவில்லையா" - என்று நீதிமன்றத்தில் கேட்டபோது -
அவனோ - "எனது விந்தின் மூலம் பிறந்த குழந்தைகள் பேஸ்புக்கில் ஒரு குறியீட்டைப் பேணலாம். அதன் மூலம் தங்கள் சகோதரர்கள் யார் என்பதை தங்களுக்குள் தெரிந்துகொள்ளலாம்" - என்று பதிலளித்தான். நீதிபதிக்கோ இவனுக்கு செவிட்டிலேயே விட்டால் என்ன என்றளவுக்கு ஆத்திரம்.
"இத்துடன் உனது விந்தைமிகு தானத்தை நிறுத்திக்கொள்ளவேண்டும். நீ இவ்வளவு காலமும் இந்த உலகுக்கு செய்த உதவியெல்லாம் போதும். மீறி, யாருக்காவது கொடையளிப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், ஒரு லட்சம் பவுண்ட்ஸ் அபராதம். இதுதான் எனது தீர்ப்பு" - என்று நீதிபதி கூறினார்.
ஆனால், இது தனக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று ஜோனதன் வெளியில் வந்து பிபிஸிக்குக் கூறியிருக்கிறான். இந்த Netflix தொடர் அவனிடம் கருத்துக்கேட்பதற்கு தொடர்புகொண்டபோதும் பேச மறுத்துவிட்டான்.
இதில் ஜோனதன் பக்கமுள்ள நியாயங்கள் என்ன? இதுவரை அவன் இழைத்த விந்துதானத்தைக்கூட குற்றமாகக் கருதமுடியாத நீதியின் பலவீனம் என்ன போன்ற பல உள்ளடுக்குகளைத் தெரிந்துகொள்ள இந்தத் தொடரைப் பார்ப்பது அவசியம்.
Comments