அவன் காட்டை வென்றான்
- Theivigan Panchalingam
- Mar 29, 2024
- 2 min read
இயற்கையின் மொழி புரிந்தவர்கள் வாழ்வின் மிகப்பெரிய அதிஷ்டசாலிகள். காடாய், கடலாய், மலையாய், மணலாய் இன்னும் பலவாக அவை பேசும் வெவ்வேறு மொழிகளை சரளமாக உள்வாங்கிவிடவும், உரையாடவும் மனிதனுக்கு மிகப்பெரிய அனுபவம் தேவையாகிறது. அந்த மொழியும் வாழ்வும் நிச்சயம் மானிட உணர்வுகளுக்கு அந்நியமானவை. இந்தக் கூட்டு உணர்வின் பிரக்ஞை மிக்க இலக்கியப் பிரதி "அவன் காட்டை வென்றான்"

"அவன் காட்டை வென்றான்" - தன் தொழுவத்திலிருந்து மேய்ச்சலுக்குப் போய் தொலைந்துபோன நிறைமாதப் பன்றியைத் தேடி காட்டுக்குள் போகும் கிழவனின் கதை. இந்த வசனத்தில் குறிப்பிட்ட பாத்திரங்கள்தான் கதையின் நாயகர்கள். கிழவன் - பன்றி - காடு. வெறும் எண்பத்தாறு பக்கங்களே கொண்ட இந்தக் குறுநாவல், வாசகனை தன் வாழ் நிலைத்திலிருந்து ஆழ் வனத்திற்குள் அழைத்துச் சென்று, பிறிதொரு உலகத்தைக் காண்பிக்கிறது. காட்டின் உயிர் தடங்களில் வாழும் கானுயிர்களின் சின்னஞ் சிறிய வாழ்வின் பேராச்சரியங்களில் ஒளி பாய்ச்சுகிறது.
காட்டின் பெருஞ்சதையாய் சடைத்திருக்கும் அத்தனை மரங்களுக்கும் தனித்தனியான பேருணர்வுகள் உண்டென்பதையும் அவற்றோடு ஒன்றி வாழும் கானுயிர்களின் நுட்பமான வாழ்க்கை முறையையும் இந்தக் குறுநாவல் அதி உன்னதமாக - அழகியல்பூர்வமாகப் பதிவு செய்கிறது. காட்டிற்கிருக்கின்ற பல்வேறு வாசங்களை மிருகங்கள் பகுத்து நுகர்ந்தறிவதையும் அதன் வழி இயற்கையின் வட்டத்துக்குள் கானுயிர்கள் பலியாவதையும் ஒரு வேள்வியின் முன்னாலிருக்க வைத்துப் பாடம் சொல்வதைப் போல, இந்த நாவல் வர்ணிக்கிறது.
காடு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இயற்கையும் அணிந்திருக்கும் ஆச்சரியங்களின் மீதும் மனிதன் பல தத்துவங்களையும் சூத்திரங்களையும் பூட்டிவைத்திருக்கிறான். இதன் விளைவாகவே இது நடக்கும். இதன் பெறுபேறாகவே இது நிலைபெறும். ஆனால், இயற்கை இந்த விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதை, இந்த நாவல் கிழவனின் அனுபவத்திற்கு ஊடாக விவரிக்கிறது.
காட்டைப் பற்றிய நாவல்கள் அநேகமாக எடுத்தவுடன் வேட்டையைப் புனைவாக்குவது வழக்கம். அது நாவலாசிரியன் தன்னிலையில் எழுதுவதற்கு வசதியான இடமும்கூட. ஆனால், காட்டின் உயிர் நரம்பினையும் அங்குள்ள கானுயிர்களின் உணர்வுகளையும் நுட்பமான அறிந்தவர்களால்தான், அந்தக் காட்டில் எழுகின்ற சிற்றொலியின் பெரும் பொருளை வாசகனிடம் கொண்டுவந்து சேர்க்கமுடிகிறது.
இந்த நாவலில் விவரிக்கப்படும் பன்றிக்கும் கிழவனுக்கும் இடையிலான உறவும், குட்டிபோட்ட பன்றியையும் குட்டிகளையும் காப்பாற்றுவதற்காக, ஒரு இரவில் கிழவன் முகங்கொடுக்கின்ற போராட்டமும் அவன் நடுநிசிக் கொலைகாரனாக அந்த வனத்தில் கொன்றுபோடும் உயிர்களும் நாவலுக்கு ஒவ்வொரு திசையில் பலம் சேர்க்கின்றன. காட்டிற்கு வெளியிலும் பல வாழ்வியல் உண்மைகளை அசைத்துப்பார்க்கின்றன. ஒரு இரவில் நடைபெற்று முடியும் சம்பவங்கள்தான் இந்த மொத்த நாவலும். ஆனால், எத்தனை ஆண்டுகளானாலும் அரியபுனைவுப் பிரதி என்ற வகைமைக்குள் வந்து அமர்ந்துவிடக்கூடிய பிரதி.
தெலுங்கில் கேசவ ரெட்டி எழுதிய இந்தக் குறுநாவலை, ஏ.ஜி.எந்திராஜூலு தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
இந்தத் தடவை சென்னைப் புத்தகச் சந்தைக்குச் சென்றபோது, புத்தகங்களை வாங்குவதில் மிகுந்த சிரத்தையெடுத்தேன். ஒரு வெடிகுண்டில் சிவப்பு வயரை அறுத்து, கடைசி நேர அனர்த்தத்தைத் தவிர்க்கும் தமிழ்ப்பட ஹீரோபோல, வாங்க விரும்பிய ஒவ்வொரு புத்தகத்தின் பக்கங்களையும் நேர்த்தியாகத் தட்டிப்பார்த்துத்தான் புத்தகங்களைத் தெரிவுசெய்தேன். அந்த அதிஷ்ட வரிசையில் என்னுடன் ஒட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவரை வந்து சேர்ந்த நாவல் "அவன் காட்டை வென்றான்"
Comments