top of page

வேர்கள்: சிதறுண்ட நெடுங்கனவின் ஆதிவலி

ஆபிரிக்க அடிமை வாழ்வின் பேரவல நிலையை துயரத்தின் சாட்சியாய் உலகின் முன் நிறுத்திய Roots நாவல் வெளிவந்து இன்றுடன் - ஓகஸ்ட் 17 ஆம் திகதியுடன் - 47 வருடங்களாகின்றன.


வலி சுமந்தவர்களின் புனித நூல் எனப்படுகின்ற இந்த நாவல் இன்றுவரை உலகின் பல மொழிகளில் பல லட்சக்கணக்கில் விற்றுவருகின்ற அதேவேளை, மறுபக்கத்தில், இது புனைவா - அபுனைவா என்பதில் தொடங்கி, நாவலின் சில பகுதிகளை நூலாசிரியர் அலெக்ஸ் ஹெய்லி, இன்னொரு நாவலில் இருந்து திருடினார் என்று தொடர்ந்து, இந்த நாவலில் பல வரலாற்றுத் தவறுகளே உள்ளன என்பது வரைக்கும் இன்று ஆதாரத்துடன் பல சர்ச்சைகள் வெளிவந்தவண்ணமுள்ளன. ஆனால், அனைத்தையும் தாண்டி, இந்த நாவலுக்குள் வினையெச்சங்களாக எஞ்சி நிற்கும் வரலாற்றின் நிகர் பெறுமதி விசாலமானது.


மனித நாகரிகம் வளர்ச்சியடைந்துவிட்டதாகப் பெருமைகொள்கின்ற இக்காலப்பகுதியிலும் பேரவலங்களின் நெடு வேரான – எக்காலத்தினதும் பொதுத் துயரான - யுத்தம் எனப்படுவது எவ்வாறு மக்களை பூர்வீக நிலங்களிலிருந்து புலம்பெயர்வை நோக்கி விரட்டுகிறதோ –

அதேபோல, பதினேழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவான - நிறுவனமயப்படுத்தப்பட்ட - நிறவெறி என்ற குரூர மானுட சிந்தனை, பல லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாக அவர்களது சொந்த இடங்களிலிருந்து வேர் அறுத்து எறிந்தது.


(தமிழ் இந்துவில் வெளியான முழுமையான கட்டுரை)


ree


ஆபிரிக்க அடிமை வாழ்வின் பேரவல நிலையை துயரத்தின் சாட்சியாய் உலகின் முன் நிறுத்திய ரூட்ஸ் நாவல் வெளிவந்து ஓகஸ்ட் 17 ஆம் திகதியுடன் 47 வருடங்களாகின்றன. வலி சுமந்தவர்களின் புனித நூல் எனப்படுகின்ற இந்த நாவல் இன்றுவரை உலகின் பல மொழிகளில் பல லட்சக்கணக்கில் விற்றுவருகின்ற அதேவேளை, மறுபக்கத்தில், இது புனைவா - அபுனைவா என்பதில் தொடங்கி, இந்த நாவலின் சில பகுதிகளை அலெக்ஸ் ஹெய்லி, இன்னொரு நாவலில் இருந்து திருடினார் என்று தொடர்ந்து, இன்று இந்த நாவலில் பல வரலாற்றுத் தவறுகளே உள்ளன என்பது வரைக்கும் ஆதாரத்துடன் பல சர்ச்சைகள் வெளிவந்தவண்ணமுள்ளன. ஆனால், அனைத்தையும் தாண்டி, இந்த நாவலுக்குள் வினையெச்சங்களாக எஞ்சி நிற்கும் வரலாற்றின் நிகர் பெறுமதி விசாலமானது.


மனித நாகரிகம் வளர்ச்சியடைந்துவிட்டதாகப் பெருமைகொள்கின்ற இக்காலப்பகுதியிலும் பேரவலங்களின் நெடு வேராக – எக்காலத்தினதும் பொதுத் துயராக - யுத்தம் எவ்வாறு மக்களை பூர்வீக நிலங்களிலிருந்து புலம்பெயர்வை நோக்கி விரட்டுகிறதோ –

அதேபோல, பதினேழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவான - நிறுவனமயப்படுத்தப்பட்ட - நிறவெறி என்ற குரூர மானுட சிந்தனை, பல லட்சக்கணக்கான மக்களை அடிமைகளாக அவர்களது சொந்த இடங்களிலிருந்து வேர் அறுத்து எறிந்தது.


அடிமைச் சமூகங்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட்டு, பெயர் தெரியாத தொலைதேசங்களில் கொண்டுபோய் இறக்கப்பட்டார்கள். முதுகுகளுக்கு மேல் சவுக்குகள் சுழன்றுகொண்டிருக்க, ஆயுளுக்கும் அடிமைகளாகச் சேவகம் செய்தார்கள். செய் நேர்த்தியான - தேர்ந்த - அடிமைகள் உயர் விலையில் மறுபடியும் விற்கப்பட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது, தங்களுக்கு இலவசமாக அடிமைக்குஞ்சுகள் கிடைத்துக்கொண்டதாக அவர்களை ஆண்டவர்கள் மனம் குளிர்ந்தார்கள். தலைமுறை தலைமுறையாக தங்கள் பண்ணை வேலிகளுக்குள் அடிமைகளைப் பயிரிட்டு வளர்த்தார்கள். உரிமைக்காய் ஏங்கிய இந்த அடிமைகள், வறண்ட ஒளியில் வானத்தைப் பார்த்தவாறே வாழ்ந்து செத்தார்கள்.


இதுபோல, சுமார் ஏழு தலைமுறைகளுக்கு அடிமைச் சேவகம் செய்த தனது மூதாதையரின் குல வலியை 1977 இல் அலெக்ஸ் ஹெய்லி ரூட்ஸ் என்ற நூலின் ஊடாக வெளிக்கொண்டுவந்தபோது, வாசித்தவர்கள் அனைவரது குருதியும் ஒரு கணம் உறைந்தது. பின்னர் உருகியோடியது.


எளிதாக முறிந்துவிடக்கூடிய துயர்தோய்ந்த நீள் கதையை, தன் நிலத்தின் நாயகர்கனை முன்னிறுத்தி, வரலாற்று நாவலாக கட்டுணர்வோடு ஏற்றி அமைத்ததுதான் அலெக்ஸ் ஹெய்லி இந்நாவலில் அடைந்த பெரு வெற்றி.


கம்பியாவின் கிராமமொன்றில் முரசு செய்வதற்காக மரம் வெட்டச் சென்றபோது, பதுங்கியிருந்த வெள்ளையர்களால் பிடிக்கப்படும் ஏழு வயதுச் சிறுவன் குண்டா கிண்டே, கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்படுவதிலிருந்து ஆரம்பமாகும் ஆபிரிக்கக் குடும்பொன்றின் நீண்ட - கொடிய - அடிமைச் சீவிய வரலாறு குருதி வாடையோடு ஆரம்பமாகிறது.



ree


உலகெங்கும் தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து துரத்தப்படுபவர்களது வலி ஒன்றுதான். ஆனால், போர் மிச்சம் விட்ட உயிரைத் தங்களுக்குள் வைத்திருப்பவர்கள், ஏதாவதொரு திசையில் - ஏதோ ஒரு நிலத்தில் - தங்கள் வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு அவகாசம் கிடைக்கிறது. ஆனால், அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டவர்களுக்கு, அவர்களது நிலம் - மொழி - பண்பாடு - மொழி மாத்திரமல்ல, அவர்களது உடலே அவர்களுக்குச் சொந்தமில்லை.


ரூட்ஸ் நாயகன் குண்டா கின்டே அடிமையாகக்கொண்டு செல்லப்படுகின்ற வேர்ஜினியாவில் அவன் தொடர்ச்சியாகத் தப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போய், கடைசியில் அவனது காலொன்றைப் பாதத்தோடு வெட்டியெறியும்போது ஏற்படுகின்ற வலி, ரூட்ஸ் நாவல் முழுவதும் பரவிக்கிடக்கிறது.


அதன்பிறகு, அவன் பணிபுரிகின்ற பண்ணையில் திருமணமாகி, பிறக்கின்ற கிஸ்ஸி என்ற மகள், அவனது முதலாளியால் விற்கப்படுகின்ற வலியும், அவளை வாங்குகின்ற முதலாளி, அவளைப் புணர்ந்து குழந்தையைப் பெற்று, அவனை ஒரு அடிமையாக வளர்த்து கடைசியில், சேவல்சண்டை சூதில் தோற்று - மகன் என்ற துளி பாசமுமின்றி - இன்னொருவனுக்கு விற்கப்படுவதும் என்று ரூட்ஸ் நாவலை நாற்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு இன்று படிக்கின்றபோதும், மானிடத்தின் கீழ்மைகளில் எழுகின்ற அச்சம் ஆழமானது. அதிகார வெறியின் மிகக்குரூரமான மனப்பிறழ்வை அருகில் காண்பிக்கக்கூடியது.


ரூட்ஸ் நாவல் தனியே ஆபிரிக்கர்களின் புலம்பெயர் வலியை மாத்திரம் பதிவு செய்துவிடவில்லை. நிலத்தைப் பிரிந்தபிறகும் - இன்னொரு நிலத்திலேயே பிறந்து வாழவேண்டிய விதி தமக்கு நேர்ந்தபோதும் - பூர்வீக நிலத்தினதும் தங்களது இனத்தினதும் பண்பாட்டை - கலாச்சாரத்தை - மொழியை - தலைமுறைகளின் ஊடாக வாய் வழிக்கதைகளாக எடுத்துச் செல்கின்ற சடங்குமுறை வாழ்வென்பது, சுயவாதைக்கு அப்பால் எவ்வாறான அகவிடுதலையைத் தருகிறது என்பது நாவலின் அடியில் அடர்நதியாய் நகர்கிறது.


இந்நாவலில், ஒரு இனத்தின் இருப்பெனப்படுவதும் இழந்தவர்களின் நிலம் சார்ந்த பெருமையும் வர்க்கவேறுபாடுகள் சார்ந்ததோ - சாதிக்கட்டுமானங்கள் சார்ந்ததோ இல்லை. மாறாக, அது அவர்களது இனம் சார்ந்த - மொழி சார்ந்த – உரிமை சார்ந்த வேணவாவாகத் தொடர்கிறது.


அறுக்கப்பட்ட தலைமுறைகளின் பற்றுக்கோடாக, ஆபிரிக்கர்களுக்குள் தொடரப்பட்டுவந்த வாய் வழி கதைகூறல்முறை, ஈற்றில் அலெக்ஸ் ஹெய்லி கம்பியாவுக்குச் சென்றபோது ஏழு தலைமுறைகளின் பிறகும், சொந்த நிலத்தில் காணப்படுவதானது, அவர்களை எவ்வகையான நீண்ட வட்டமொன்றில் மீண்டும் கொண்டுவந்து இணைத்திருக்கிறது என்பதைப் படிக்கும்போது, அவர்களுக்கு ஏற்படுகின்ற அதே நெகிழ்ச்சி நாவலைப் படிக்கின்ற ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படுகிறது.


முரண்களின் வரிசையும் பாத்திரங்களின் எதிர்க்குரல்களும் இப்பெரும் நாவலை இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமான செவ்வியல் பிரதியாக உணரவைக்கிறது. நெடுந்துயர் சூழ்ந்த காலத்திற்குள்ளேயும், அறத்தைக் கைவிடாதவர்களின் வாழ்வு எவ்வாறானது, மேலாதிக்கம் கொண்டவர்களை துணிச்சலோடு எதிர்கொண்டது எப்படி, தங்களில் தவறிழைத்தவர்களின் வாழ்வு எவ்வாறு முடிந்தது? அடக்கப்படுகின்ற சமூகத்திற்குள் தவறுகள் எனப்படுபவை எவ்வகையான சட்டகத்தில்வைத்து மதிப்பிடப்பட்டது என்று பெரும் இருண்ட காலத்திற்குள் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் இன்று படிக்கின்றபோது, இந்நாவல் பெரும் மானுட தரிசனமொன்றை நோக்கி நகர்த்துகின்றது.


வேர்கள்: தீமையின் அவதாரங்களிலிருந்து விலகி, உலகம் தன்னைத் திருத்திப் பயணிக்க வழிகாட்டும் புனிதநூல்.


Comentarios


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page