பிராப்ளம்ஸ்கி விடுதி
- Theivigan Panchalingam
- Mar 30, 2024
- 2 min read
வெளிநாடுகளுக்கு சட்ட ரீதியாகவோ சட்ட விரோதமாகவோ வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் நீண்டதொரு கதையிருக்கும். அந்தக் கதைகளை எங்கே எழுதினாலும் அவற்றுக்கு தனியானதொரு பெறுமதியிருக்கும். புகலிட இலக்கியப் பரப்பிலிருந்து இவ்வளவு காலமும் வந்த கதைகளின் சருமத்தைச் சற்று சுரண்டிப் பார்த்தால், இவ்வாறு வெளிநாடு வந்தவர்கள் அனுபவித்த பெரிய வலிகள் அடங்கிய கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். அல்லது அதிர்ச்சி மதீப்பீடுகள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும்.

உண்மையிலேயே, வெளிநாடுகளிலுள்ள அகதிகள் அனுபவிக்கின்ற துயரங்களில் பெருவலி மிக்கது, வெளிநாட்டு அகதி முகாம்களில் நீண்ட காலம் அடைக்கப்பட்டவர்களின் வாழ்வும் அவர்களின் முடிவற்ற துயரும். இன்றைக்கோ நாளைக்கோ விஸாவோடு விடுதலை தந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் இந்த அகதிகளின் நீண்டகாலத்தடுப்பு எனப்படுவது, சிறுகச் சிறுகச் சாகும் கொடிய வாழ்வு. சகலதையும் இழந்து துடித்துக்கொண்டிருக்கும் - வளர்ந்த - மனிதனை, மீண்டும் தொப்புள் கொடி அறுத்து, அவன் குழறும் ஒலியில் அகதிக்கான சுருதி கேட்கிறதா என்று சதா சோதனை செய்து பார்க்கும் இடம்தான் வெளிநாட்டு அகதிமுகாம் வாழ்க்கை.
இந்த முகாமுக்குள் கவிழும் பகலுக்கு வெளிச்சமில்லை.
அகதிமுகாம்களிலும் சிறைகளிலும் ஆளுக்காள் ஆறுதல் சொல்வது என்பது அர்த்தமற்ற அப்பியாசம். அங்கு எல்லோரும் வகைதொகையான பிரச்சினைகளுடன் - சிக்கல்களுடன் - வந்திருப்பவர்கள். அழுபவன் பிரச்சினையைவிட அடுத்தவன் பிரச்சினை இன்னும் விகாரமாயிருக்கும். எங்கு திரும்பினாலும் பிரச்சினைகளைச் சுமந்து அலையும் சதைப்பிண்டங்கள். பேச்சு ஒலிகளும் சிரிப்புச் சத்தங்களும்கூட அச்சம் தரக்கூடியவை. இதற்கு மத்தியில் ஒரு வாழ்வை வாழ்வதும், உண்டு - உறங்கி, தன்னை மறந்துவிடாமிலிருப்பதற்கு மூச்சுக் காற்றினை பத்திரப்படுத்துவதும் அகதி என்ற உயிரிக்கு பெரும் சவாலானது.
அப்படிப்பட்ட அகதிகள் வாழும் பெல்ஜிய முகாமொன்றின் கதைகள் அடங்கிய நாவல் Problemski Hotel. 23 பகுதிகள் அடங்கிய இந்த நாவலில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து முகாமில் சிக்குண்ட அகதிகள் பற்றிய பாரமான கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. தனது வாழ்வின் உண்மையான வலிகளை ஒப்புவித்து, உயிர்ப்பிச்சை கேட்டுவரும் அகதிகளில் முக்கால்வாசிப்பேரை கிரிமினல்தனமாக சிந்திப்பதற்கு தூண்டுபவை வெளிநாட்டு குடிவரவு அமைச்சுக்களும் அவற்றிலுள்ள அதிகாரிகளும். அகதிமுகாம் வாழ்விலிருந்து விடுதலையானவர்களுக்கு இந்த வரிகளிலுள்ள தாற்பரியம் புரியும். அப்படிப்பட்ட - மனம் சிதைந்த - பாத்திரங்களாலான Problemski Hotel, அகதிகளின் எல்லாவகையான காயங்களையும் ஒவ்வொருவரது வாழ்வின் ஊடாகவும் பட்டியல்படுத்துகிறது.

எதியோப்பிய புகைப்படப்பிடிப்பாளரான பிபுல் மாஸ்லி என்ற பாத்திரத்தின் வழியாக, வித்தியாசமான பின்னணிகள் கொண்ட அகதிகளின் கதைகள் ஒவ்வொரு வடிவத்தில் நாவலுக்குள் வருகின்றன. கதைசொல்லி(யை) காதலிக்கும் சிறுமி லிடியா, உக்ரைன் நாட்டு முன்னாள் குத்துச்சண்டை வீரன் இகார், அல்பேனியனுடன் தகாத உறவுகொண்டு கருத்தரித்த குழந்தையை முகாமில் ஈன்று கொலை செய்யும் மார்ட்டினா, பெல்ஜியப் பெண்ணைத் திருமணம் செய்து வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் மஹ்சூத், சிகரெட் பெட்டிகளை வாங்கிக்கொண்டு முகாம் ஆண்களுக்குப் பாலியல் சேவை செய்யும் பெண்கள், முகாமிலுள்ள ஆபிரிக்கர்களின் குறியைப்போல தன்னுடைய ஆண்குறியையும் பெரிதாக்குவதற்குப் பிரயத்தனப்படும் லோடே என்ற இளைஞன் என்று ஏகப்பட்ட கலவையான எதிர்பார்ப்புக்களும் எண்ணங்களும் கொண்ட பாத்திரங்கள் இந்த நாவலைத் தாங்கி நிற்கின்றன.
இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் லாதாவின் மிகப்பெரிய வெற்றி, பிராப்ளம்ஸ்கி விடுதியின் ஒவ்வொரு பகுதிக்குள்ளேயும் நாவலாசிரியர் Dimitri Verhulst மடித்து மடித்து வைத்திருக்கும் அரூபமான அங்கதங்களை, இயல்பாக சுருள் பிரித்து வெளிக்கொண்டுவந்திருப்பதுதான். Problemski Hotel நாவல் பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், மூலப்பிரதியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து, பின்னர் அதிலிருந்து தமிழுக்கு வரும்போது, குறிப்பாக கரும்பகடி (black humour) எனப்படுகின்ற சமாச்சாரத்தை, பிரதிக்குள்ளிருந்து - இயல்பு குன்றாமல் - தமிழுக்கு எடுத்துவருவது என்பது, கிட்டத்தட்ட தாய்லாந்து குகைக்குள் அகப்பட்ட 13 பேரையும் மீட்டுக் கரைக்குக் கொண்டுவருவது போன்றது. ஏனெனில், இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்களுக்குப் புரியும், அதுவே மிகுந்த சவாலுக்குரிய வாசிப்பைக் கோரும் பிரதிதான். நேரடியான மொழியில் சொல்லப்படாத - மிகுந்த சிடுக்குகளுடன் - கதையை நகர்த்தும் புத்தகம்.
நாவலில், கதைசொல்லியின் காதலி லிடியா தனது தாயோடு தொலைபேசியில் பேசுகின்ற பகுதியும் மார்ட்டினா தனது குழந்தையைக் கொல்லும் பகுதியும் மிகுந்த தொந்தரவு தருபவவை. வாசகனின் மனோபலத்தை சவாலுக்கு உட்படுத்துபவை.
இரண்டு மொழிகளின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட பிரதியொன்றில் மூலப்பிரதியிலுள்ள அதே உணர்வைக் கடத்துவது என்பது ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு லேசான காரியமல்ல. நாவலின் ஆன்மாவை - அதில் தூவிக்கிடக்கும் அங்கதத்தை - வரிக்கு வரி இடறி விழுத்துகின்ற நாவல் நடையை - என்று அனைத்தையும் நேர் சீராக்கி, Problemski Hotel நாவலை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் லதாவிற்கு மிகுந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
நாவலின் பலவீனமாக நான் கருதுவது, இந்த முகாமிலுள்ள அகதிகளின் உண்மையான பிரச்சினை, அவர்களது அடையாளச் சிக்கலா அல்லது விடுதலையா என்றதொரு குழப்பம் நாவலாசிரியருக்கு இருப்பதாகத் தெரிகிறது. முகாமின் வாழ்வை அனுபவிக்காதபோதும் ஒரு புனைவாக எடுத்துவருகின்றபோது, தானொரு அகதியாக இந்த நாவலுக்குள் மாறிக்கொண்ட Dimitri Verhulst, பாத்திர வெளிப்படுத்தலில் அதிகம் உள்நுழையாத அணுகுமுறையால், மேம்போக்காக பல விடயங்களை கடந்துசெல்கிகிறார். அந்தப்போதாமை இந்தப் பிரதியை நாவலாக அணுகுவதா அல்லது அகதிமுகாம் குறித்த செய்திவிவரணையாக அணுகுவதா என்ற சிறு தயக்கத்தைத் தருகிறது.
அரிஸ்டோட்டில் கூறியதுபோல - The whole is more than the sum of its parts. ஒரு முழுமையிலிருந்து பிரிந்த பகுதிகளின் கூட்டுத்தொகையைவிட முழுமை எப்போதும் பெரியதே. Problemski Hotel நாவலின் பகுதிகள் தருகின்ற பல்வேறு சம்பவங்களின் - பாத்திரங்களின் - கூட்டுவலியைவிட, நாவலின் பிரக்ஞைபூர்வமான முழுப்பாதிப்பு என்பது மிகப்பெரியது.




Comments