top of page

ஆடுஜீவிதம் - சுவாலையின் சுவை

Updated: Mar 31, 2024


மீட்சியற்ற கொடும் பொறியில் சிக்கிய அப்பாவிப் புலம்பெயரி ஒருவனின் விடுதலைக்கான போராட்டமும் அதன் பின்னணியில் அவன் அனுபவித்த வாதைகளையும் நுட்பமாக விவரித்த நாவல் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம்.


ree


மலையாளத்தில் மாத்திரம் நூறு தடவைகளுக்கு மேல் பதிப்பிக்கப்பட்ட நாவல். ஐந்துக்கும் மேற்பட்ட பிறமொழிகளில் மொழிபெயர்கக்ப்பட்டது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் நிகழும் பல சம்பவங்களும் பாத்திரங்களின் மன அமைப்புக்களும் அவற்றின் முரண்களும் ஆடுஜீவிதம் என்ற புலம்பெயர் களத்தில் கதையுடைய பிரதிக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை.


சவுதியில் வேலை செய்வதற்காக கேரளத்திலிருந்து போயிறங்கும் நஜீப் என்ற இளம் குடும்பஸ்தன், கூடச்சென்ற ஹக்கீம் என்ற இளைஞனோடு விமானநிலையத்தில் வைத்து ஆட்டுப்பண்ணை நடத்துபவன் ஒருவனால் கூட்டிச்செல்லப்படுகிறான். பாலை நிலப் பண்ணையொன்றில் கொண்டுபோய் அடைத்தபிறகுதான், தான் அடிமையாகக் கொண்டுவரப்பட்டதை நஜீப் உணர்கிறேன். ஆடு மேய்ப்பவனாக அவன் அனுபவிக்கின்ற தொடர் துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரு வழி பிறக்கிறது. அருகிலிருந்த இன்னொரு பண்ணையில் அடிமையாக அடைக்கப்பட்டிருந்த அவனது தோழன் ஹக்கீமுடனும் புதிய அடிமை இப்ராஹிம் என்பவனோடும் அங்கிருந்து தப்புகிறார்கள். கதையின் நாயகன் நஜீப் எவ்வாறெல்லாம் நரக வாதைப்பட்டு, ஈற்றில் இந்தியா திரும்புகிறான் என்பது இந்த நாவிலின் சுருக்கம்.


நாவலின் முக்கிய பகுதிகளை கதைப்புள்ளிகளின் அடிப்படையில் வகுத்தால் -


  • நஜீப் மீதான அவனது அரேபிய முதலாளியின் கொடுமை

  • அடிமையாகப் பணிபுரியும் பண்ணையென்றாலும், நஜீபுக்கும் அவன் வளர்க்கும் ஆடுகள் - ஒட்டகங்களுக்கும் இடையான உறவின் இறுக்கம்.

  • பண்ணiயிலிருந்து தப்பும்போது எதிர்கொள்ளும் கொடுந்துயரை, பாலை நிலத்தின் நுட்பமான அவதானங்களின் ஊடாக நில வரைவியல் சார்ந்து முன்வைப்பது.

  • நஜீபின் இறைபக்தி


இந்த உணர்வுபூர்வமான பகுதிகளைச் சுற்றித்தான் இந்த ஒட்டுமொத்த நாவலும் விரிகிறது. "ஆட்டுப் பண்ணையில் அடிமையாக வாழ்ந்த தனது வாழ்வும் அங்கிருந்த ஆட்டின் வாழ்வும் ஒன்றே. அங்கு தானும் ஒரு ஆடுதான்" - என்ற நஜீபின் வலிநுரைக்கும் வாக்குமூலத்தோடு நாவல் நிறைவுறுகிறது.


ஆடுஜீவிதம் நாயகன் மாத்திரமல்ல, உலகின் அத்தனை நாடுகளிலும் புலம்பெயரிகளாகத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தவர்கள் அனைவருமே, ஆடுஜீவிதத்தில் வருகின்ற ஆடுதான். இது புலம்பெயரிகள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரேபியப் பண்ணையில் ஆண்மை சிதைக்கப்பட்டு, முடிந்தவரையில் பாலும் கம்பளியும் எடுக்கப்பட்ட பின்னர், தேர்ந்த ஆடுகள் இறைச்சிக்கு அனுப்பப்டுவதைப் போலவும் எஞ்சியவற்றின் இறப்புக்களுக்கு கணக்கே இல்லை என்பது போலவும்தான் புலம்பெயரி ஒவ்வொருவனுடைய வாழ்வுக்கும் சாவுக்கும் வெளிநாட்டு மண்ணில் எஞ்சியுள்ள பெறுமானம். இந்த உண்மையை ஒவ்வொரு நாடும், வெவ்வேறு கலைச்சொற்களால் போர்த்திக்கொல்லாம். ஆனால், உண்மை வேறானது.


ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு இவ்வாறான பல லட்சம் ஆடுகளால் ஆனது. கரை சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் தொண்ணூறுகளிலிருந்து கணக்கெடுத்தால், இவ்வாறான பல ஆடுஜீவிதத் தொடர்களை எழுதிவிடக்கூடிய கதைகளைக் கொண்டது. எயார் போர்ட் கதைகள், ஏஜென்ஸி கதைகள், படகுக் கதைகள், பழம்பிடுங்குவதற்கு ஏற்றிச்செல்லப்பட்டவர்களின் பண்ணைக் கதைகள் என்று பல்லாயிரம் திரைப்படங்கள் எடுத்துவிடப்போதுமானவை.


ree

இந்தப் புலம்பெயர் வாழ்வின் கூட்டுவலியின் பிரதியாக ஆடுஜீவிதம் திரைப்படம் எம் முன் விரிகிறது. ஒரு புலம்பெயரியாக நாவலின் தீவிரத்தையும் நஜீபின் ஒவ்வொரு உணர்வையும் காட்சிக்குள் யதார்த்தபூர்வமாகப் பொருந்திக்கொண்ட கதையையும் ப்ரிதிவிராஜின் நடிப்பினையும் திரையில் மிகவும் ரசித்தேன்.


நாவலில் உள்ள அத்தனை காட்சிகளையும் நீட்டி முழக்கும் வசதியிருந்தால், ஒரு தொடராகவே ஆடுஜீவிதத்தை இன்னும் விரித்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டரை மணிநேரத் திரைப்படத்திற்குள் நாவலின் கதைமையத்தை எவ்வாறு நுட்பமாகப் பார்வையாளனிடம் கொண்டுசெல்வது என்ற சவாலை இயக்குனர் திறம்படக் கையாண்டிருக்கிறார்.


திரைப்படத்திற்காக நாவலிலிருந்து வெட்டிய நீக்கிய பகுதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. அதுபோல, விரித்துச்சொல்லப்படவேண்டிய பல விடயங்களை அர்த்தபூர்வமான ஒற்றைக் காட்சிகளால் குறிப்புணர்த்திய இடங்களும் திரைக்கதைக்கு தீவிரத்தன்மையைக் கொடுத்திருந்தது. உதாரணமாக, மழைக்கு அஞ்சும் பண்ணை முதலாளி, அவனைச் சுடக்கூடிய வாய்ப்பிருந்தும் நஜீப் துப்பாக்கியைத் திருடாமல் விட்டுவிடுவது, ஆடுகளின் ஆண்மை நீக்கம் போன்ற பல காட்சிகள் கிட்டத்தட்ட இந்தத் திரைக்கதைக்குத் தேவையற்றவை. ஆனால், ஆடுகளுக்கும் நஜீபிற்கும் இடையில் காலப்போக்கில் உருவான உறவு மிகவும் நெருக்கமானது. தனது மகனுக்குச் சூட்டுவதற்காக எண்ணியிருந்த பெயரை புதிதாய் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு வைத்துக்கொண்டளவு ஆடுகளுக்கும் அவனுக்குமான பிணைப்பு வலியது. ஆனால், அந்த உறவின் பெறுமானத்தை, தப்பியோடுவதற்கு முன்னரும் ஆடுகளுக்கும் ஒட்டகத்திற்கும் தீவனம் போடுகின்ற காட்சியின் மூலம் ப்ரிதிவிராஜின் நடிப்பு இலகுவாக உணர்த்திவிடுகிறது. தப்பிச்செல்லும் பாலையின் கொடூரத்தை ஹக்கீம் பலியாகும் காட்சி ஆத்மார்த்தமாகச் சொல்லிவிடுகிறது. பாலையின் தன்மைகள் ஓரளவுக்கு சூடானியன் இப்ராஹிமின் வழியாக காட்சியாகின்றன. இவ்வாறு நாவலின் பல இடங்கள் யதார்த்தத்தை மீறாமலும் திரையின் இலக்கணத்தோடு ஒத்துப்போனதும் கச்சிதமாயிருந்தது.


'ஆடுஜீவிதம்' திரைப்படம், நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு துளியிலிருந்து விரிவான கடல் அல்ல. நாவல் எனும் கடலையே ஏறக்குறைய தனக்குள் போதுமானளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது.


ஆடுஜீவிதம் - நிறைந்த அனுபவத்தை அருளிய திரைப்படம்.

Comentarios


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page