top of page

டொல்பின் கொத்து

வாழ்க்கையில் விடுபட்டுப்போன சில அரிய அனுபவங்களை பின் நகர்ந்து சென்று அறிதலும் அதில் பரவசங்களைக் கண்டடைதலும் விநோதமான மனநிறைவைத் தரக்கூடியவை. மிகச் சாதாரணமானவையாக எல்லோரும் அறிந்த ஒன்றை அறவே அறிந்துகொள்ளாமல் கடந்து வந்திருப்போம். காலம் கடந்து அவற்றை தெரிந்துகொள்ளும்போது, எங்கள் உணர்கொம்புகளைச் சந்தேகித்தபடியே களிகொள்வோம். இவ்வாறு நான் அண்மையில் அறிந்துகொண்ட பரம்பொருள்தான் "டொல்பின் கொத்து"


இந்தப் பெயரை கேள்விப்படவேயில்லை என்று கூறமாட்டேன். ஆஸ்திரேலியாவிலுள்ள தமிழ் - சிங்களக் கடைகளில் இந்தப் பெயரைக் கண்டபோதெல்லாம், ஏனைய இறைச்சிகளைப்போல டொல்பின் சதையையும் உறையவைத்து, அதிலிருந்து எதையோ உருட்டிப் பிரட்டுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். நான் ஒருபோதும் அண்டாத ஆடு,மாடு போன்றவற்றின் வரிசையில் இந்த வகையறாவையும் துடக்கென இணைத்துக்கொண்டேன்.


ஆனால், மெல்பேர்னில் தென்கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக நான் ஆண்டுச் சந்தா உறுப்பினராக இணைந்திருக்கும் கடையொன்றில், தற்செயலாக இந்தப் பெயர் மீண்டும் என் கண்களில் பட்டபோது, அதில் கூடவே சில விளக்கங்களும் ஒட்டியிருந்தது. அது என்னை அறவே குழப்பியது. அதாவது, "டொல்பின் சிக்கன் கொத்து" என்ற அந்தப் பெயர், டொல்பின் - சிக்கன் போன்றவற்றின் மீது மாத்திரமல்லாமல், அந்தக் கடைக்காரர் மீதும் எனக்குக் கூடுதல் சந்தேகத்தைக் குவித்தது.


ree


குறுக்கு மறுக்காகக் குதித்தோடிக்கொண்டிருந்த பரிசாரகரப் பெண்ணை அழைத்தேன். மேசை விளிம்புகளில் தனது அகன்ற மேனி மோதிவிடாதவாறு டொல்பின் போலவே அவள் ஓடிவந்தாள். என் சந்தேகத்தை அவள் காதுகளில் பரிதாபமாக இறக்கிவைத்தேன். அவமானம் ஏற்படாதவண்ணம் இரகசியமாக விளக்கும்படி கேட்டேன். இரண்டு கைகளாலும் இறகடிப்பதுபோல, டொல்பின் கொத்து தொடர்பான உற்பத்தி வரைவினை அவள் விரிவாக விளக்கிச் சொன்னாள். சில அறியாப்பொருள்களை சிங்களப்பெண்களும் சிங்கிள் குமரிகளும் சொல்லித்தரும்போதும் சீக்கிரம் புரிந்துகொள்ளமுடிகிறது.

கற்றுமுடிந்த சற்று நேரத்தில், ஆவி அணிந்த டொல்பின் கொத்தினை அனுமர் சஞ்சீவி

மலையைக் காவி வந்ததுபோல மேசையில் கொண்டுவந்து இறக்கினாள்.


"Its extremely spicy" - என்றபடி புன்னகைத்தாள்.


லீக்ஸ_ம் கரட்டும் வாழ்வறுந்த சிக்கன் வறுவலும் பொரித்த முட்டையுமாக சுவைக்கான பல உறவுகள் திரண்டிருந்தன. காரத்தின் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டித்துண்டுகள் பெரிய அளவில் வெட்டப்பட்டு அவற்றோடு குழைந்திருந்தன. கரண்டியால் கிளறிவிட்டேன். ரொட்டித்துண்டுகளுக்குள் மடங்கிக் கிடந்த ஆவி முகத்தில் மோதியது. முதல் சுவையில் என் முகம் வரையும் ரேகைகளை அறிவதற்காய் அவள் அருகிலேயே நின்றிருந்தாள்.


அண்ணளவாக ஒரு கரண்டியை உள்ளே அனுப்பினேன். கிளிப்பைக் கழற்றி வாய்க்குள்ளேயே கிரனேட்டை எறிந்ததுபோல சூடு. தாங்கமுடியாமல் எனது வாய் அட்டகோணத்திலும் டான்ஸ் ஆடியது. உறைப்பும் சேர்ந்து உள்ளுக்குள் உடுக்கடித்தது. அதற்கு முன்னர் அவள் அப்படியொரு காட்சியைக் கண்டிருக்கவே முடியாது. தன்னை மறந்தாள்.

தான் தந்த தட்டை மறந்தாள். மிக அருகில் வந்து -


"Are you okay" - என்றாள்.


நான் முழித்துப்பார்த்தேன்.


'அடுத்தது அம்புலன்ஸ்தானா bro' என்பதுபோல அவள் விழிகள் விறைத்திருந்தன.


"Its just a dolphin dance" என்றேன் வலிக்காதவன்போல.


உதடுகளை உள்மடித்துப் புன்னகைத்தடி, மேசைகளைக் கடந்து சென்றாள். தூரத்தில் நின்று எனது இரண்டாவது வாயைப் பார்த்துக் காத்திருந்தாள்.


நானோ "இப்பவாவது சொல்லடி, இதற்கு ஏன் டொல்பின் கொத்து என்று பெயர் வந்தது" - என்று அந்தரத்தில் கரண்டியோடு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page