top of page

புனிதக்கிளை

(காலம் இதழின் அறுபதாவது பிரசுரத்தில் வெளியான சிறுகதை - 2024 January )


ree

புனிதக்கிளை


மெல்பேர்ன் தமிழர் கலாச்சார நிகழ்வொன்றில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ராஜித பண்டார எனக்கு அறிமுகமானான். காதுகளுக்கு அருகில் மாத்திரம் நரைத்த முடி. நறுக்கிவிட்ட குறுந்தாடி. கறுப்பு வண்ணச் சங்கிலியில் கழுத்தில் தொங்கும் கண்ணாடி. சற்று முன்வளைந்த குட்டையான தோற்றம். மெல்பேர்னில் வெளிவரும் “செரண்டீப்” மும்மொழிப் பத்திரிகையின் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்தான். கைகளில் கற்றையாக வைத்திருந்த பத்திரிகைகளில் ஒன்றைப் பிரித்து நீட்டினான். அந்த உருவம் ஒரு அழகானை மலரை ஆச்சரியத்தோடு பகிர்ந்துகொண்ட குழந்தையைப் போல இன்றும் நினைவகலாமல் உள்ளது. 


நான் இலங்கையில் பத்திரிகையில் பணிபுரிந்தது தனக்கு தெரியும் என்றான். தனது பத்திரிகையில் தமிழில் கட்டுரைகள் எழுதுமாறு கேட்டான். எழுதுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றான். மொழியின் சமத்துவத்திற்கு அப்பால், இன நல்லிணம் என்றைக்கும் எழுத்தினால் சாத்தியம் என்றான். அவனது தோற்றமும் பேச்சும் உலர்ந்த பூக்களைக்கூடத் துளிர்க்கச் செய்யுமளவுக்கு ஈரமாய் நெஞ்சில் பதிந்தது.


“இனமொன்றின் ஊழிக்குரல்” – என்ற தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரையை, பத்திரிகையின் மூன்றாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தான். அந்தக் கட்டுரையை யாராவது அவனிடம் மொழிபெயர்த்துக்கொடுத்திருந்தால், அதன்பிறகு என்னிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டான் என்று திடமாக நம்பினேன். ஆச்சரியமாக நட்பு நீடித்தது. தொலைபேசியில் அவனது பெயரைச் சேமித்துவைக்குமளவு தொடர்பு நீளத்தொடங்கியது. 


மெல்பேர்னில் நடைபெறும் அரச வைபவங்களுக்கு “செரண்டீப்” பத்திரிகைக்கு அழைப்பு வரும். என்னையும் அழைத்துப்போவான். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுடன் நெருக்கமாகப் பேசினான். சிறிலங்காவிலிருந்து வருகின்ற அரசியல் முக்கியஸ்தர்களுடன் பின்னிரவுச் சந்திப்புக்களில் கலந்துகொள்ளுமளவுக்கு ராஜிதவுக்கு மிகுந்த நெருக்கமிருந்தது.


ராஜிதவுடன் பழக்கமேற்பட்ட முதல் சிங்கள வருடப்பிறப்புக்கு வீட்டு விருந்துக்கு வருமாறு அழைத்தான். மஞ்சள் வண்ணத்தோரணங்கள் வாசலில் வரவேற்றன. வழுக்கு மரத்தில் செதுக்கிய தர்மச்சக்கரம் ஓலிவ் மரநிழலில் தோட்டத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தது. குழாய்வழியாக பாய்ந்த நீர் அந்தப் பலகையின் மேல் வழிந்தோடிக்கொண்டிருந்தது. தோட்டத்துக்கும் வீட்டுக்கும் இடையில் அமைந்திருந்த பரந்த வளவுக்குள் ஓலைகளால் வேய்ந்த விருந்துக் குடில் அமைக்கப்பட்டிருந்தது. நான் போயிறங்குவதற்கு முன்னரே அங்கு ஏராளம் விருந்தினர் கூடிவிட்டனர். ராஜித என்னைக் கண்டவுடன் ஒரு குடும்ப உறுப்பினர்போல முக மலர்ந்தான். குளிர்ந்த கைளினால், என்னை அணைத்துக்கொண்டு சென்று நண்பர்களிடம் அறிமுகம் செய்தான். ஓலைப்பெட்டிகளில் கொட்டிக்கிடந்த பல வர்ணப் பலகாரங்களை பச்சை இலை புதைத்த தட்டொன்றில் எடுத்துத் தானே பரிமாறினான். சிங்களப் பாரம்பரிய உணவுகளின் பெயர்களையும் எனக்கு ஊட்டிவிட்டான்.


பலகாரத் தட்டோடு வீட்டுக்குள் அழைத்துச்சென்று நடுவில் வீற்றிருந்த பெரிய புத்தர் சிலையைக் காண்பித்தான். கண்டியிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்னர் கப்பலில் கொண்டுவந்த சுருவம் என்று முகமலர்ந்தான். மடியில் மடித்திருந்த அவரது கைகளுக்குள் வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனடைந்த அதே பெருமையோடு புத்தரைப் பார்த்து நானும் வணங்கினேன். புத்தர் சிலைக்கு இடப்பக்கமாக இராணுவ சீருடையில் விறைத்த பார்வையோடு சிங்கள அதிகாரியொருவரின் படமிருந்தது. மெலிந்த மெழுகுவர்த்தியொன்று அந்தப் படத்துக்கு முன்னால் சுடர் சுமந்திருந்தது. 


“பயங்கரவாதிகளுடனான போரில் உயிரிழந்த எனது அண்ணா”


புத்தரைக் காண்பித்ததைவிட தனது அண்ணனைப் பற்றிப்பேசும்போது ராஜிதவின் முகத்தில் அதிக பெருமை தெரிந்தது. என்னோடு எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நெருக்கம் அவனுக்குத் திருப்தியளித்தது. ராஜிதவைக் கேட்டுமுடித்த பலர், என்னைப்போல பலகாரத்தட்டோடு அருகிலிருந்த ஓலைக்கொட்டிலுக்குள்ளிருந்தனர். 


இடுப்பில் சுருக்குவைத்த சிங்களச் சேலையில் அங்கு அடிக்கடி தென்பட்ட முதிய பெண்ணை அழைத்து வந்த ராஜித, தனது மனைவி என்று அறிமுகம் செய்தான். ராஜிதவைவிட களை நிறைந்த முகம். புத்தரின் கைகளில் பார்த்த வெண்மலர்போல கைகூப்பிச் சிரித்தார். தன்னுடைய பத்திரிகையில் எழுதுபவர் என்று என்னைச் சிங்களத்தில் அறிமுகம் செய்திருக்கவேண்டும். அதன்பிறகு, அவர் மேலுமொரு தடவை இமைகளைத் தூக்கி ஆச்சரியத்தோடு சிரித்துவிட்டு உள்ளே சென்றார். 


நண்பர்களைக் கவனிப்பதில் ஓடிக்கொண்டேயிருந்த ராஜித, அவ்வப்போது எங்காவது ஓரிடத்திலிருந்து பேசும்போது, அவனைச் சுற்றிக் கூட்டம் பெருகும். ஒரு பத்திரிகை நடத்துபவர் என்பதற்கு அப்பால், ராஜித மெல்பேர்ன் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க சமூகத் தலைவன் என்று மதிப்பிடக்கூடியதாயிருந்தது. என்னை மாத்திரமல்ல, எல்லோரையும் தனது பாதையில் பதப்படுத்தியவாறு பயன்படுத்துவதில் காண்பிக்கும் ராஜிதவின் வல்லமையை அவ்வப்போது இரகசியமாக மதிப்பிட்டுக்கொள்வேன்.


ஒருதடவை அவன் பேசத்தொடங்கிய நீண்ட உரையாடலொன்று எனக்கு மிகவும் புதிய தகவலாயிருந்தது. வருடத்துக்கு இரண்டு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்கின்ற ராஜித, ஒவ்வொரு தடவையும் அங்கு தனது பௌத்த நம்பிக்கையொன்றை தவறாது நிறைவேற்றிவருவது வழக்கம் என்பதை ஓலைக்குடிலுக்குள்ளிருந்து கூறினான். தலதா மாளிகைக்கு சென்று சங்க தேரர்களுக்கு தானம் வழங்கி, ஆசீர்வாதம் பெறுவதோடு, ஏதாவது ஒரு திருமணம் அல்லது வேறு மங்களகரமான நிகழ்வின் விருந்துக்காக வெட்டப்படவிருக்கும் மாட்டினைப் பணம் கொடுத்து வாங்கி, அதன் உயிரைக் காப்பாற்றுவது ராஜிதவின் மத வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. வருடத்தில் குறைந்தது இரண்டு மாடுகளைக் காப்பாற்றும் தனது இலங்கைப் பயணத்தை, ராஜித ஒரு சடங்குபோல நிறைவேற்றிவருகிறான்.


அவனது நண்பர்கள் மாத்திரமல்லாமல், அவர்களது மனைவிமார்கள் - குழந்தைகள் எனப்பலரும் கூடியிருந்து அவனது அனுபவத்தைக் கேட்டார்கள். ராஜிதவின் பேச்சிலிருந்த நிதானமும் சொற்களில் காண்பித்த மென்மையும் செயல்களுக்கு அப்பால், அவனை சமூகத்தின் பெறுமதியான முதுசமாக வெளிச்சமிட்டுக் காட்டியது. அவன் மீதான ஈர்ப்பு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுமிருந்தது. 


“புத்த பெருமானின் பஞ்ச சீலக்கொள்கைகளே எங்கள் அன்றாடங்களின் ஆத்மா. அடுத்தபிறப்பொன்று எமக்கு திருப்தியாய் அமைவதற்கு, இப்பிறப்பில் உயர் காரியங்களைப் பிடிப்போடு செய்யவேண்டும். உயிர்களைக் கொல்லுதல் மகா பாவம். அதுவும் உயிர்களைக் கொன்று தின்னுதல் பாவங்களில் பெரிய பாவம். பசுக்கள் மனிதர்களின் மறுபிறவிகள். அவற்றைக்கொல்லுதல் இன்று கண்வெடித்த குழந்தையைக் கொல்வதற்குச் சமம்”


ராஜிதவின் சொற்கள் ஞானப்பெருஞ்சுணையாக அங்கிருப்பவர்களின் கண்களில் பெருகியோடியது. 


(2)


சிறிலங்காவுக்குச் சென்று வந்த ராஜித, மெல்பேர்ன் பௌத்த சங்கங்களின் சம்மேளனத்துடன் முக்கிய சந்திப்புக்களுக்காக அடிக்கடி போய்வந்தான். சிங்கள மக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்தான். அந்தக்கூட்டத்துக்கான விளம்பரத்தினையும் பத்திரிகையில் முழுப்பக்கத்துக்குப் பிரசுரித்திருந்தான்.


“சகோதர மக்களுடன் தொடர்புகளை உருவாக்குவது நல்லது. கூட்டத்துக்கு வா” 


ராஜிதவின் அழைப்பில் நியாயம் இருந்தது. நிகழ்விற்கான விளம்பரங்களில் தெரிந்த மர்மத்தை நேரில் காணும் ஆர்வத்தோடு சென்றேன்.


ராஜித எதிர்பார்த்ததைவிட மண்டபம் நிறைந்து, போதியளவு கதிரைகள் இல்லாமல் பல பெண்கள் கைகளில் குழந்தைகளோடு நின்றுகொண்டிருந்தனர். கூட்டத்துக்கு முன்னால் காவியுடை தரித்த நான்கு தேரர்கள், தேஜஸ் வழியும் பார்வையோடு அகன்ற சொகுசுக் கதிரைகளுக்குள்ளிருந்து அனைவருக்கும் ஆசீர்வாதமளித்தவண்ணமிருந்தனர்.


பத்திரிகைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மேசையோடு நான் மண்டபத்துக்கு வெளியிலிருந்தேன். உள்ளே நடைபெறுவது முழுமையாகத் தெரிகின்ற கோணத்தில் நான் இருந்துகொண்டது எனக்குப் பல வகைகளில் வசதியாக இருந்தது. 


ராஜித ஆரம்பித்தான்.


“பரிபூரண ஒளி பொருந்திய புத்த பகவானின் ஆசீர்வாதம் பெற்ற மகா ஜனங்களே….இன்றெமக்கு இவ்வாழ்வை வழிநடத்தும் ஆண்டவரின் அருளுக்கு கோடி நன்றிகள்.


“சிறிலங்காவுக்கு அடுத்ததாக சிங்கள மக்கள் அதிகம் வசிக்கின்ற இடம் மெல்பேர்ன். எம் கரங்களில் கூடிய பொருள்பொதிந்த நெருக்கத்தை நாங்கள் இழந்துவிடக்கூடாது. இது ஒரு பெருமைக்குரிய வரலாற்றை எழுதிய புகழ்சூடிய இனத்தின் பிறிதொரு அதிஷ்டகாலம்.


“எமது இனத்தின் ஆதாரம் எங்கள் மதம். எம் ஒற்றுமையின் ஆதாரமும் எங்கள் மதம். எங்கள் வெற்றிகள் அனைத்தினதும் பக்கபலம் எமது மதம். பகவானின் போதனைகளை இதயக்கமலத்தில் தாங்கி நிற்கின்ற எங்கள் வழிபாடுதான் எம் நெருக்கத்தின் ஆணிவேர். தேரவாதம் எங்கள் உயிர்நாடி. அது இந்த மண்ணிலும் ஆழ வேரூன்ற வேண்டும்”


பேரறிவின் ஒளி சிந்தும் ராஜிதவின் விழிகள், கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரது இதயத்திற்குள்ளேயும் இறங்கி நின்று பேசிக்கொண்டிருந்தன.


“புத்தபகவான் ஞானம்பெற்ற போதிமரத்தின் கிளையொன்றினை மேன்மை குடியிருக்கும் எங்கள் புனித அனுராதபுர ரஜ மஹா போதியிலிருந்து ஏந்தி வந்து, இங்கெமது விஹாரை நிலத்தில் வேரூன்றவேண்டும் உறவுகளே. அது இன்னும் பல ஆண்டுகளுக்கு இம்மண்ணில் எம் இனம் தளைக்கத் துணை நிற்கும். எம் சமூகத்தின் ஒற்றுமை நிலைத்திட நீண்ட திடம் தரும்”


கூட்டத்தின் முன்னாலிருந்து நான்கு தேரர்களும் காவியுடைக்குள் ஏந்தியிருந்த தங்கள் விசிறிகளை ஒரு தடவை அசைத்தார்கள். அரங்கிலிருந்த அனைவரும் கரவொலி எழுப்பினார்கள்.


“இந்தியாவின் புத்தகாயாவில் பகவான் ஞானம்பெற்றபோது அவர் சாய்ந்திருந்த போதி மரத்தின் தென் திசைக்கிளை எங்கள் இலங்கை மண்ணுக்கு வந்தபோது அதனை வணங்கிப் பெற்று வளர்த்தோம். ஆண்டாண்டு காலமாக அதன் பொருள் புரிந்து பூஜித்தோம். ஞானத்தின் வாசனையை துதிந்தேந்தினோம். அன்றிலிருந்து எங்கள் புனித தேசமே புதிய வேர்களைப் பரப்பியது. எத்துணை பகை சேர்ந்தபோதும் எவ்வளவு இடர் நேர்ந்தபோதும் அனைத்தையும் சமராடும் பலம் சேர்த்தது எங்கள் மஹா போதியே.


“எங்கள் மண்ணின் மீது குருதி வீழ்ந்தபோது மஹாபோதி தன் ஈரக்கரங்களால் கறை அகற்றிவிட்டது. எங்கள் மண் காக்கச் சென்ற படைவீரர்கள் பகை வீழ்த்துவதற்கும் மஹாபோதி அவர்களின் மனமெங்கும் தன் வீரக்கரங்களால் வலுசேர்த்து நின்றது………”


ராஜித தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். 


அன்றைய நிகழ்வுக்காக பிரசுரிக்கப்பட்ட விளம்பர பக்கத்தைப் பிரித்துப்பார்த்தேன். அந்த முழுப்பக்க விளம்பரத்தின் பின்னணியில் பொன்நிறவேலிக்கு மத்தியில் சடைத்த மஹாபோதி அரச மரம் நின்றுகொண்டிந்தது தெரிந்தது. அந்த புனித மரத்தினைச் சுற்றி சில பக்தர்கள் வழிபடுகின்றதும் அந்த விளம்பரத்தில் மெல்லிதாகத் தெரிந்தது. 


(3)


இலங்கைக்குச் சென்ற ராஜித பண்டார நாக விஹாரையிலும் ஆனையிறவு இராணுவத்தின் தலைமையக விஹாரையிலும் தேரர்கள் முன்னிலையில் முழந்தாளிட்டு, தானம் வழங்கும் படங்கள் அவனது பத்திரிகை நண்பர்களுக்கென உருவாக்கப்பட்ட புலனக்குழுமத்தில் பகிரப்பட்டிருந்தது. 


வடநில விஹாரைகளில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு வெள்ளியன்று காலை அனுராதபுர புனித மஹாபோதி விஹாரைக்குச் சென்றான். புனித விருட்சத்தின் கிளையை ஏந்திக்கொண்டு ஆஸ்திரேலியா போவதற்காக, பக்தர் ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அப்பகுதியெங்கும் பரவியிருந்தது. விஹாரைக்கு அருகிலுள்ள ரஜ மஹாபோதி மாவத்தை, மிகுந்து மாவத்தைகளிலிருந்து பக்தர்கள் பலர் பூக்களோடு வழியனுப்ப வந்திருந்தார்கள். புனிதக்கிளை பெரியதொரு வெண்கலக் கலயத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. 


கிளை விரித்த அரசமர நிழலில் விகாரையின் மூத்த தேரர் ஒருவர் ராஜிதவை ஆசீர்வதித்து, அவனோடு திரண்டு நின்ற பக்தர்கள் முன்னிலையில் நாசிக்குரலெடுத்துப் பேசத்தொடங்கினார். 


“அணையாத பெரும் சுவாலையின் ஒரு பிடியை உன் கைகளில் தந்திருக்கிறோம். இவ்வெளிச்சத்திலிருந்து பிறக்கின்ற ஒளி உலகமெல்லாம் பரவேண்டும். கருணை மிகுந்த பகவான் புத்தரின் போதனைகள் இம்மண்ணைப்போல பிறிதொரு தேசத்திலும் பூக்களாய் மலரட்டும்”


ராஜித அவரது கால்களில் விழுந்து வணங்கினான். அரச மரக்கிளையோடு ராஜித மெல்பேர்ன் நோக்கிப் புறப்படவிருந்த செய்தி, இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. அவனது வரவை மெல்பேர்ன் சிங்கள மக்கள் புத்த பகவானின் வருகையைப்போல எதிர்பார்த்திருந்தனர். 



(4)


மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரிகள் ராஜிதவை அரச மரக்கிளை அடைத்த போத்தலோடு தனியறையொன்று அழைத்துச் சென்றார்கள். ராஜிதவுக்கு உடலெங்கும் வெக்கை கனன்றது. இறைதூதுவனாய் பயணப்பட்டுக்கொண்டிருந்த தன்னை, இடறுகின்ற அதிகாரிகளின் உத்தரவுகள் அவனுக்கு அவமானத்துக்கு மேல் ஆத்திரத்தைக் கிளறியது.


கருநீலச் சீருடையில் எவின் என்ற பெயர் பதித்த அதிகாரியொருவர், ராஜிதவை தன் முன்னாலுள்ள கதிரையில் இருக்கச் சொன்னார்.


சிவந்த கன்னங்களின் மீது தனது மூக்குக் கண்ணாடியினால் சொறிந்தபடி ஆரம்பித்தார்.


“உயிருள்ள மரக்கன்றுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பின்பற்றவேண்டிய நடைமுறை உங்களுக்குத் தெரியாதா”


ஈயமாய் கொதித்தபடி இறங்கிய கேள்வியை, ராஜித நிதானமாகத் தணித்துக்கொண்டான்.


“இது சாதாரணமான மரக்கிளை அல்ல. உலகின் மிகத் தொன்மையான மதமொன்றின் தலைவர், ஞானம் பெற்ற மரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு புனிதக்கிளை”


அதிகாரியின் கண்களைப் பார்த்து அழுத்தமாகக் கூறினான்.


“உயிருள்ள பொருட்கள் எதுவென்றாலும், அவற்றின் ஊடாக நாட்டுக்குள் வரக்கூடிய கிருமிகள், நோய்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்கின்ற முக்கியமான எல்லைப்பாதுகாப்புச் சட்டம் இது. நீங்கள் இந்த மரக்கிளையைக் கொண்டுவரக்கூடாது என்று கூறவில்லை. அதற்கென்றொரு ஒரு நடைமுறையுள்ளது. எங்களுக்கும் இதனை எவ்வாறு நாட்டுக்குள் அனுமதிப்பதென்றொரு கட்டுப்பாடு உள்ளது……”


அதிகாரியின் நீளமான விளக்கங்களை ராஜிதவினால் அனுமதிக்கமுடியவில்லை.


“நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா. இது பூஜையில் வைக்கப்பட்டுக்கொண்டுவரப்பட்டுள்ள பரிசுத்தமான கிளை. இதில் கிருமிகளிருக்கின்றன, நோய்கள் தொற்றியிருக்கும் என்று கூறி என்னையும் எனது மதத்தினையும் காயப்படுத்தாதீர்கள். சிலுவையைக் கொண்டுவந்தால், அதனை அலுமீனியத்தடியென்று கூறுவீர்களா. அது என்ன உங்களது சட்டங்களை மற்றவர்கள் மீது உரசிப்பார்க்கும்போது மாத்திரம் எப்போதுமொரு எகத்தாளம்” 


புனிதக்கிளையை எப்படியும் நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற ஆற்றாமையினால் ராஜிதவின் வார்த்தைகளும் குரலும் நீண்டன. 


“மிஸ்டர் ராஜித, இந்த மரக்கிளையைக் கொண்டுவருவது பற்றி நீங்கள் முற்கூட்டியே பயணச்சீட்டில் பதிவுசெய்யவில்லை என்ற குற்றத்திற்காக நீங்கள் ஆச்சரியப்படுமளவுக்கு ஒரு அபராதத் தொகையை அறவிடுவதற்கு சட்டத்தில் போதுமான வசதியுள்ளது. ஆனால், இது மதம் சார்ந்த விடயம் என்ற காரணத்தினைப் பூரணமாக உணர்ந்துகொண்டுதான், உங்களோடிருந்து பொறுமையாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்”


அதிகாரி எவின் அதற்கு மேல், ராஜிதவுக்குப் பேசுவதற்கு அனுமதி வழங்காமல், தனது முடிவினை தடித்த சொற்களினால் சொல்லிச்சென்றான்.


“ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு விதிகளின்படி, உயிருள்ள மரக்கிளைகள் அனைத்தும் உயிரியல் பரிசோதனைக்கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒரு மாத காலம் தனிமைப்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் இந்தக் கிளை உன்னிப்பாக அவதானிக்கப்படும். இந்தக் கிளை வழியாக எந்த ஆபத்தும் ஏற்படாது என்று உறுதிச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும், உங்களிடம் கையளிக்கப்படும்”


எவினின் கண்களையே பார்த்து அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த ராஜிதவுக்கு அவனை அறியாமல் கண்ணீர் பெருகிக் கன்னத்தில் வழிந்தது. வரலாற்றின் நீண்ட பயணமொன்றில் தான் தனித்துவிடப்பட்டதுபோல உணர்ந்தான் ராஜித. இதய நரம்பொன்றினை உயிரோடு அறுத்தெடுப்பதற்கு தன்னைச் சுற்றிச் சீருடையோடு அதிகாரிகள் காத்திருப்பதுபோல நடுங்கினான்.


தலைநகர் கன்பராவிலுள்ள சிறிலங்காவின் தூதரகத்துக்கு அழைப்பெடுத்து, அரசு மட்டத்தில் பேசி, புனிதக் கிளையைப் பிணையெடுக்க யோசித்தான். சிறிலங்கா அமைச்சர் மத்தும பண்டாரவை அழைத்து, அவன் வழியாக உதவியைப் பெற்றுப் புனிதக் கிளையோடு தொடர்ந்து பயணிக்கலாமா என்றெண்ணினான். 


அசோகச் சக்கரவத்தியின் உத்தரவினால் சங்கமித்த ஏந்தி வந்து தேவநம்பிய தீசனிடம் கையளித்த புனிதக்கிளை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படர்ந்து வளர்ந்து – பல சிங்கள உயிர்களைப் பலிகொடுத்து- இன்னும் எத்தனையோ வெற்றிகளுக்கு வாள் கொடுத்து – வீரத்தின் - மேன்மையின் – மதப்பெருமையின் வரலாற்றோடு தளைத்துகொண்டேயிருந்த உலகின் மிக நீண்ட  கிளை – 


மெல்பேர்ன் விமானநிலையத்திலுள்ள நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அதிகாரியின் முன்னால் மண்டியிட்டுக்கொண்டதை ராஜிதவினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவனது கண்கள் கொப்பளங்களாய் வெடித்து அதன் வழி உயிர் வடிந்துவிடும்போலிருந்தது. 


(5)


ராஜிதவின் வீட்டுக்குப் பலர் சென்றார்கள். ராஜிதவினால் யாரையும் முகங்கொடுக்கமுடியவில்லை. படுக்கையில் துவண்டுகிடந்தான். பெரும் கனவொன்றின் நீட்சியாக மிதந்துகொண்டிருந்த அவனது மனம், காயத்தோடு விழுந்துகிடந்தது. அழைப்பெடுத்தவர்கள் அனைவருக்கும் விளக்கம் சொல்லிக்களைத்தாள் ராஜிதவின் மனைவி. அக்கறையோடு வீடு வந்தவர்களை திருப்பி அனுப்புவதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. 


ராஜிதவின் படுக்கைக்கு அருகிலிருந்த வானொலியில் - 


பஹ_ம் சாஸ மபி நிம்

மித்த சாயுத தம்…. 


ஜெய மங்கள கதா தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தது. இரவில் மாத்திரம் விழித்தெழுந்த ராஜித, வீட்டின் நடுவிலிருந்த புத்தர் சிலைக்கு முன்னால் மண்டியிட்டு அழுதான். மனைவியால் தேற்றமுடியாதளவு கதறினான். பின்னிரவில் களைத்துத் தூங்கினான்.


இரண்டாவது வாரத்தில் ராஜித வழமைக்குத் திரும்பினான். புனிதக் கிளையைக் கையேற்கும்வரை வீட்டைவிட்டு வெளிவரப்போவதில்லை என்று மனைவியிடம் கூறினான். பரிதி கவிழும் நேரம்வரைக்கும் காத்திருந்தான். தோட்டத்தில் பூக்களைப் பறித்துச் சென்று இரவு நேரப் பிரார்த்தனைகளில் நீண்டநேரமிருந்தான். இதயம் மீண்டும் துடிக்கும் ஒலி அவனுக்குள் கேட்டது. 


மெல்பேர்ன் விமான நிலையத்திலுள்ள உயிரியல் சோதனைக்கூட கண்காணிப்பு மேசையில் - கூடைகளில் அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள், குவளைகளில் ஊர்ந்துகொண்டிருந்த நத்தைகள், பல வகையான இறைச்சிகள் என அனுமதிபெறாமல் கொண்டுவரப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு, அவற்றுக்கான கமராக்கள் கணனிகளோடு பொருத்தப்பட்டு, பிரத்தியேக மானிகளால் அவதானிக்கப்பட்டவண்ணமிருந்தன. அந்தப் பொருட்களில் ஏற்படுகின்ற இரசாயன மாற்ற வரைவுகள் கணனியில் பச்சை நிறத்தில் வளைந்து வரைந்து ஓடிக்கொண்டிருந்தன. 


அந்த வரிசையின் அந்தத்தில் நீண்ட கண்ணாடிக் குவளையில், பௌத்த வரலாற்றின் ஆதார உயிரியான புனிதக்கிளை – பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருந்தது. கிளையின் ஓரத்தில் சிறு குருதிக்கறையொன்றும் தெரிந்தது.


(6)


ராஜித எனக்குள் உதிரத் தொடங்கினான். 


அவனோடு தொடர்புகள் அறுந்திருந்த நாட்களில்தான், அவனது மனம் எனக்குள் அதிக வெளிச்சத்தோடு பரவித் தெரிந்தது. மெல்பேர்னுக்குள் வந்த புனிதக்கிளையின் நிழலில் அவனது விகாரமான மனம் நிர்வாணமானது. விடம் தரித்த வரலாறொன்றின் நீட்சிக்காக, அவனுக்கு அந்தப் புனிதக்கிளை தேவைப்பட்டது. அதற்காக அவன் எதையும் இழக்கவும் யாரையும் பகைக்கவும் கை விரித்தபடி நின்றான். என்னை மிகக்குரூரமாகத் தனது அன்பின் அரவணைப்பில் பிணைத்து வைத்திருந்தான். சாவின் பெரும் களமாய் கிடந்த நிலத்தில் அறுத்தெறியப்பட்ட பல்லாயிரம் பேரின் குருதியில் வருடிக்கொண்டுவரப்பட்ட அந்தப் புனிதக்கிளை, தனது இனத்திற்கு அழியா வரமளிக்கும் என்று அவன் நம்பினான். அந்தக்கிளை அனைவரையும் ஆழவேண்டும் என்றும் விரும்பினான். அதற்காக, அவன் எல்லா வேடங்களையும் மாற்றி மாற்றிப் பூண்டுகொண்டான். 


அவனது கண்கள், புன்னகை, அடக்கம், பொறுமை என்று அனைத்தும் கரும்புழுக்களாய் அவனில் நெளிந்தன.


குளிர்காலச் சனிமாலையொன்றில் புனிதக்கிளையைப் பெற்றுக்கொண்ட மெல்பேர்ன் சிங்கள மஹா சங்கத்தினர் புறநகர் விஹாரை நிலமொன்றில் அதை நாட்டுவதை அறிவிக்கும் நிகழ்வைக் கூட்டினார்கள். காற்றோடு மழையும் தொடங்கியது. நிகழ்வுக்கு நான் போகவில்லை. வாழ்வில் முதன்முறையாக ஒருவனின் அன்பின் முன்னால் அவமானமாய் உணர்ந்தேன். தேனீர் அருந்தியபடி, செரண்டீப் பத்திரிகையின் பக்கங்களைத் தட்டிப்பார்த்தேன். ராஜிதவுக்குள் நொதித்துக்கிடக்கும் கெட்ட வாடை, ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் முகத்தில் அறைந்தது. அவனையே நினைத்துக்கொண்டிருப்பதும் ஒருவகையில் எரிச்சலாயிருந்தது. கதிரையிலேயே சாய்ந்து கண்ணயர்ந்தேன்.


புள்ளிகள் போட்ட பருத்தி மேலாடையில், நிகழ்வு மண்டபத்துக்குள் வந்தான் ராஜித. மண்டம் நிறைந்த மக்களை பரவசத்தோடு பார்த்தான். முன் வரிசையில் புன்னகை நிறைந்த தேரர்கள் வீற்றிருந்தார்கள். சற்று நேரத்தில், சிறிய சாடியில் சூடிய மஹா போதி அரச மரக்கிளை பட்டுத்துணி போர்த்திய சிறு பல்லக்கில் அரங்கத்திற்குள் சுமந்து வரப்பட்டது. வெண்ணிற ஆடையணிந்த பல்லக்கர்களுக்கு இருமருங்கிலும் இரு சிறுவர்கள் மஞ்சள் வண்ண விசிறியை மெதுவாய் அசைத்த வண்ணம் ஊர்ந்து வந்தார்கள். தொழுதபடி எல்லோரும் எழுந்து நின்றார்கள்.


மேடைக்குச் சென்ற ராஜித - 


"மேன்மை குடியிருக்கும் எங்கள் புனித அனுராதபுர ரஜ மஹா போதியிலிருந்து ஏந்தி வந்து, இங்கெமது விஹாரை நிலத்தில் வேரூன்றவுள்ள இந்தப் புனிதக்கிளை, ஆண்டாண்டு காலமாக இம்மண்ணிலும் எம் இனம் தளைக்கத் துணை நிற்கும். எம் சமூகத்தின் ஒற்றுமை நிலைத்திட நீண்ட திடம் தரும்.....”


பேருவுகையோடு சூளுரைத்தான். தொடர்ந்து பேசினான்.


குருதிக் கறை அழியாத ஆதிநிலத்தின் ஓலம் கேட்டு திடுக்குற்றெழுந்தேன். மழையின் சத்தம் ஆரோகணித்தபடியிருந்தது. 


முற்றும்


 




Comments


  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page