top of page

வன ராணி


ree


மெல்பேர்னிலிருந்து சிட்னிக்குப் பயணமாகும் வழியிலுள்ள இலவாரா வனப்பகுதியில் காட்டுத்தீ என்னைச் சூழ்ந்துகொண்டது. 


நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென் கிழக்குக் கரையோரமாகவுள்ள இலவாரா கிராமத்தையொட்டிய பெருங்காட்டினை ஊடறுத்துச் செல்லும் தார் பாதையின் இருமருங்கிலும், தடித்த மரங்களும் பற்றை நிலங்களும் நிறைந்து கிடந்தாலும், அந்தப் பிரதேசத்தை வழக்கமாக, வேகமாகக் கடந்து சென்றுவிடுவதால், காட்டின் செறிவை அருகில் அறிந்ததில்லை.


நெடு மரங்கள் சூழ்ந்த இக்காட்டின் தெற்கே பல அரிய பறவைகளின் சரணாலயம் ஒன்றுள்ளது. மத்தியிலுள்ள சிறுகுன்றுகளின் மீது பாயும் அழகிய அருவி, தேசியப் பூங்காவில்  நீர் வீழ்ச்சியாகச் சரணடைவதை, கோடைகால சுற்றுலாப்பிரியர்கள் நெடுந்தூரம் பயணம் செய்துவந்து கண்டு களிப்பர்.


நான் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினேன்.


முன்னும் பின்னும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த வாகனங்களையும் காணவில்லை. வழக்கமாகவே சன நடமாட்டமற்ற வனாந்தரம் அது. தெருவின் குறுக்காக விழுந்த தடித்த மரமொன்றை, தீயின் நெடிய கொழுந்துகள் பெருஞ்சினத்தோடு தின்றுகொண்டிருந்தன. 


பேரலைகளையும் பெருவெள்ளத்தையும் கோரமான புயலையும் முன்பெல்லாம் கண்ட நான், பெருந்தீயின் சீற்றத்தை அன்றுதான் நேரில் பார்த்தேன். மூசி எரிந்த தீயின் கொழுத்த சுவாலைகளில் எந்தப் பரிவையும் காணவில்லை. நீண்டெரிந்த அதன் நாக்கில் பசி தீராமல், சிறு மரங்களையும் நெடிய பற்றைகளையும் வாரிச்சுவைத்தது.


இருள் கவிழும் முன்னர் சிட்னியைச் சென்றடைவதற்காக இயன்றளவு காலையிலேயே புறப்பட்டு வேகமாக வந்திருந்தேன். இப்பிரதேசத்தில் காட்டுத்தீ குறித்த எச்சரிக்கைகளை வரும்போதே காரில் - வானொலியில் கேட்டிருந்தேன். ஆனால், வனத்தீ இவ்வளவு வேகமாக என்னைச் சுற்றிவளைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 


எனக்கு பின்னால், படர்தெழுந்த பெருஞ்சுவாலைகள் நெடுஞ்சாலையை முற்றிலுமாக மூடி, மரங்களின் உயரத்துக்கு மேல் எரிந்தன. பெருவெக்கையோடு புகையும் சூழத்தொடங்கியது. வெடித்துப் பறந்த தூசுகள் என் மீது வந்து விழுந்தன. தரையோடு வந்து தாவித் தின்பதற்கு ஊர்ந்துவரும் பசியேறிய புலிபோல, வனத் தீ என்னை நோக்கி வருவதை உணரந்தேன்.


காரை எங்கும் அசைக்கமுடியாது. அருகிலுள்ள கம்பிவேலியைக் கடந்து, எரிவதற்குக் காத்திருந்த பரிதாபமான சிறுகாட்டின் வழியாக ஓடத்தொடங்கினேன். எதிர்ப்பட்ட மரக்கிளைகளை இருகைகளாலும் ஒதுக்கியபடி ஓடினேன். பற்றைகள் காலைக் கிழித்தன. அடுத்தகணம் கருகப்போவது தெரியாமல், அன்றலர்ந்த காட்டு மலர்கள், என்மீது மோதின. கன்னங்கள் கூசின. முதன்முதலாக அக்காடு மனித வாடையை நுகர்ந்திருக்கக்கூடும். காலடியில் சிறு பூச்சிகளோ எதுவோ சருகுகளுக்குள் ஓடி மறையும் ஓசை கேட்டது. 


நெடுமரமொன்றின் அடியில் நின்று மூச்சிரைக்கத் திரும்பிப்பார்த்தேன். எனது கார் நின்ற இடத்தை புகை முற்றிலுமாக மூடியிருந்தது. காற்றை வேகமாகத் தின்று தின்று பெருந்தீ, பக்கவாட்டிலுள்ள காட்டின் மீதும் தாவத்தொடங்கியது. 


பொக்கெட்டைத் தொட்டுப்பார்த்தபோது, தொலைபேசியைக் காரில் விட்டுவந்தது புரிந்தது. ஆபத்து இருமடங்காகிவிட்டதை உணர்ந்தேன். அச்சம் கால்களில் இறங்கியது. ஓடிய திசையிலேயே ஓடி, எதிர்ப்படும் குடிமனைகளுக்குள் உதவி கேட்கலாம் என்று திரும்பினேன்.


அதிர்ந்தேன்.


என்னளவு உயரத்தில் பழுப்புநிறக் கங்காரு ஒன்று, நான் ஓடவிருந்த பாதைக்குக் குறுக்காகக் குந்திக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் குளிர் மின்னல் வெட்டி அடங்கியது. 


கங்காருவை இவ்வளவு அருகில் முன்னர் நான் கண்டதில்லை. 


கண்களைச் சிமிட்டியது. அதன் கண்களைப் பார்ப்பதைத் தவிர, அக்கணத்தில் வேறு தெரிவிருக்கவில்லை. அதுவும் என்னையே பரிவோடு பார்ப்பதுபோலிருந்தது. பக்கவாட்டில் தலையைச் சரித்து காட்டை நோட்டம் விட்டது. அப்போதுதான், அதன் பின்னால் பத்து இருபது கங்காருங்கள் கூட்டமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். 


இடுப்பிலிருந்து கீழே பருத்த சரீரத்தில் இரண்டு நெடிய கால்கள் புதைந்திருந்தன. மறு கால்கள் இரண்டையும் தனது நெஞ்சோடு அணைத்திருந்தது.  அவை அவற்றின் கைகள் போலவே எனக்குப்பட்டன. சரிகையணிந்த பல்லக்கிற்கு வால் முளைத்ததுபோலிருந்து. வெளித்தள்ளிய நீண்ட இரு செவிகளும் பயங்கரமற்ற காட்டு விலங்கென்ற நேசமானதொரு உணர்வைத் தந்தன. 


எனக்குப் பின்னால், ஊர்ந்துவரும் காட்டுத்தீயினால் வெடித்துச் சிதறும் மரங்களின் சத்தங்கள் அருகில் கேட்டன. கங்காருகளுக்கும் அது கேட்டிருக்கவேண்டும். அவை மெல்லத்திரும்பி துள்ளித் துள்ளி எனக்கு வழிவிட்டன. நான் வேறு வழியின்றின் அவற்றின் மத்தியால் நடக்கத் தொடங்கினேன். ஓடுமளவுக்கு பாதையிருக்கவில்லை. முன்னால் போய்க்கொண்டிருக்கும் கங்காருக் கூட்டத்தினால், பாதை தெரியவுமில்லை. எனக்குப் பின்னால் ஐந்தாறு கங்காருகளும், அவற்றுக்குப் பின்னால் காட்டுத்தீயும் வந்துகொண்டிருந்தன. எனக்கு முன்னால், நான் பார்த்ததைவிட பெருந்திரளான கங்காருகள், காடுகளுக்குள்ளிருந்து கூடுதலாக சேர்ந்துகொண்டன. 


இப்பகுதியை வனத்தீ சூழ்ந்துகொண்டதை கண்டறிந்து, தீயணைப்புத்துறையினர் வந்திருப்பார்களா? தீப்பிடித்த இப்பிரதேங்களின் மீது வழக்கமாக உலங்கு வானூர்தியில் வந்து நீர்த்தாரைகளை கவிழ்ப்பதுதான் வழக்கம். தீயில் அகப்பட்டவர்களை உலங்குவானூர்தியிருந்து கயிறு கட்டி மீட்டுச்சென்றதையெல்லாம் செய்தியில் பார்த்திருக்கிறேன். 


நெருப்பிடம் விட்டு வந்த காரை நினைக்கும்போதுதான் அச்சமும் பதற்றமும் அடிவயிற்றைப் பிசைந்தது.


திடீரென்று சிறுகுன்றொன்றின் மீது நான் நின்றுகொண்டிருந்தேன். என்னைக் கூட்டமாக அழைத்துவந்த கங்காருகள் குன்றின் விளிம்பில் நின்று, தொலைவில் எரிந்தபடி கலைத்துவரும் பெருந்தீயை தங்கள் ஒவ்வொருவருக்கும் காண்பித்தன. துள்ளித்துள்ளி குன்றின் விளிம்புக்கு வந்த அத்தனை கங்காருகளும் தீயின் திருவிழாவை எட்டிப்பார்த்தன.


காட்டோடு இணைந்த பரந்த வெட்டவெளியில், பெருந்தொகையான கரிய பறவைகளும் பழுப்பு நிறப் பருந்துகளும் பறந்து திரிந்தன. வட்டமடித்தன. ஒன்றோடு ஒன்று மோதுவதைப்போல சாகசங்கள் காட்டின. அவற்றை உற்றுப்பார்த்தபோது அதிர்ந்துபோனேன். தீப்பிடித்த காடுகளிலிருந்து எரியும் தணல் தடிகளைத் அந்தப் பறவைகள் தங்கள் அலகுகளில் எடுத்துவந்து, தீ பரவாத வெளிகளில் எறிந்தன. பின்னர், மீண்டும் எரிகாட்டின் விளிம்பிற்குச் சென்று தணல் தடிகளை ஏந்தி வந்தன.


கங்காருகள் ஒவ்வொன்றாகக் குன்றிலிருந்து கீழே இறங்கின. நானும் அவற்றைத் தொடர்ந்தேன். எனக்கு முன்னும் பின்னுமாக பல நூற்றுக்கணக்கான கங்காருகள் இப்போது, அந்தத் தரவை வெளியில் இறங்கித் துள்ளி ஓடின. சுற்றிவரப் பார்த்தேன். குடிமனைகள் எங்கும் தெரியவில்லை. கலைத்துவரும் காட்டுத்தீயிலிருந்து எதிர்த்திசையில்தான் சென்றாகவேண்டும். கங்காருகள் பாய்ந்த திசையில் வேகமாக நடந்தேன். அவற்றின் வேகத்துக்கு ஈடுதரமுடியவில்லை. ஓடினேன். கங்காருகள்போல நானும் துள்ளுவதைப்போல உணர்ந்தேன். பாயும் பல்லக்காக. 


எனக்கு அருகில் ஓடிவந்த பெண் கங்காருகளின் வயிற்றுப்பையில் சிறு கங்காருகள் தலையை மாத்திரம் வெளித்தள்ளி, தங்கள் தாயின் அருகில் வித்தியாசமாக ஓடிவரும் என்னை விசித்திரமாகப் பார்த்தன. எனக்கு மூச்சிரைத்தது. 


சிறிது நேரத்தில், பழுப்பு நிறப் பருந்துகள் எரி-தடிகளை எறிந்த இடத்துக்கு வந்துசேர்ந்தோம். தடிகள் வீழ்ந்த இடங்களிலிருந்து, புற்றுகளிலிருந்து வெளியேறிய கொழுத்த எலிகளும் பாம்புகளும் நான் வாழ்வில் ஒருபோதும் கண்டிராத உருண்டைப் புழுக்களும் எங்களுக்கு தூரத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தன. எமக்கு முன்னால் தணல் தடிகள் எறியப்பட்ட தடம் தெரிந்தது. அவற்றின் வழியாக கங்காருகள் மெல்ல மெல்லத் துள்ளி நகரத் தொடங்கின. எனக்குப் பாதங்கள் கூசின. ஓடிவந்த களைப்பில் இடுப்பெலும்பு ஒடிந்துவிட்டதுபோல வலி குடைந்தது. தூரத்து நெருப்பின் வெக்கை வெட்டவெளியில் மிதந்து வந்து முகத்தில் அறைந்தது, 


அடிக்கடி அண்ணாந்து பார்த்தபடி நடக்கத் தொடங்கினேன். கங்காருகளும் என்னோடு ஊரத்தொடங்கின. 


அடர்ந்த பசிய காட்டின் நுழைவாயிலை அடைந்தோம். கண்கள் குளிர்ந்தன. சருகுகளில் கங்காருங்கள் கூட்டமாகத் துள்ளிச் செல்லும் சத்தம், காட்டின் பேரமைதியில் இரைந்துகேட்டது. அச்சத்தோடு நானும் நுழைந்தேன். இன்னும் ஏன் குடிமனைகளும் தென்படவில்லை, மீட்பு பணி உலங்கு வானூர்திகளைக் காணவில்லை என்று வற்றாத பதற்றம் அடிவயிற்றில் புரையேறிக்கொண்டிருந்தது.


காட்டின் நடுவில் கண்ட நீள்வட்டச்சுனையொன்றைச் சூழநின்று எல்லா கங்காருகளும் நீர் அருந்தின. எனக்குத் தண்ணீரைக் கண்டவுடன், மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. ஓடிச்சென்றேன். இரண்டொரு கங்காருகள் எனக்கு இடம்விட்டுத் தந்தன. வலியேறிய பாதங்களை தண்ணீரில் வைத்து இறங்கினேன். விரல்களில் ஏறிய குளிர்மை தலை வரை கிளைவிரித்துப் படர்ந்தது. அலை வளையம் விழுந்த நீரில் எனது வறண்ட முகம் தெரிந்தது. குந்தியிருந்து இரு கைகளாலும் பெருஞ்சுனையை அள்ளிப்பருகினேன். அத்தனை நரம்புகளிலும் அருவி பாய்ந்தது. விழித்துப் பார்த்தபோது எதிரில் வீற்றிருந்த மரங்களெல்லாம், கிளை தரித்த நீர் வீழ்ச்சிகளாய் தெரிந்தன. முகத்தை அடித்துக் கழுவினேன். சுனையைச் சூழ்ந்திருந்த கங்காருகள் தங்கள் கால் விரல் நகங்களை ஒன்றோடொன்று தட்டி, தங்களுக்குள் பேசின. ஆண் கங்காருகள் விசிலடித்து ஒலியெழுப்பின.


காட்டின் வழியாக உள்ளே நடக்கத்தொடங்கினோம். 


குடிவாழ்வுக்கு உபயோகமற்ற உதிர்ந்த மேடுகளும் உடைந்த குன்றுகளும் காட்டின் மத்தியில் பற்றையேறிப்போயிருந்தன. முன்பொரு காலத்தில் இக்காடுகளுக்குள் வாழ்ந்து சென்ற இடையர்கள் கட்டிய கல்வீடுகள் தூர்ந்துபோய் காணப்பட்டன. முன்னால் சென்ற ஆண் கங்காருகள், வேகமாகத் துள்ளிச் சென்று அதில் ஏறி நின்று துரத்திவரும் காட்டுத்தீயின் கடைசி அடையாளங்களை நோட்டமிட்டன.


அங்கிருந்து சிறிது தூரம் நடந்த பின்னர் தடித்த மரமொன்றின் அடியில்தான் பாதி கருகிய அந்தக் கங்காருவைக் கண்டேன். 


அது என்னிலும் உயரமான செங் கங்காரு. கொழுத்த தசைகளினால் பருத்த அதன் தேகம், நிலத்தில் சாய்ந்து கிடந்தது. தப்பிக்க முடியாத கொடிய தீயில் அகப்பட்டு, அதன் உரோமங்கள் கருகி, உட்காயங்களினால் ஊன் கசிந்தது. வலியின் உச்சத்தினால் அதன் வாயிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. 


என்னோடு வந்த அத்தனை கங்காருகளும், அதனைச் சூழ்ந்து நின்று எனது அருகாமையை எதிர்பார்த்தன. என் பாதங்கள் பயத்தில் விறைத்திருந்தன. ஊர்ந்து செல்லும் வேகத்தில் அருகில் போனேன். செங் கங்காருவின் கண்கள் வலியினால் சிவந்துகிடந்தன. அதன் நெஞ்சருகில் பெருந்தசை துடித்துக்கொண்டிருந்தது.


அருகில் சென்று அதன் தலையை என் மடியில் கிடத்தினேன். கருகிய அதன் உரோம வாசனை முதலில் குமட்டியது. அதன் தலையை வருடினேன். கண்கள் மேல் கிறங்கி அதன் தாடை விழுந்தது. மொத்த உடம்பிலும் பெருஞ்சூடு நுழைந்துகிடந்தது. உதறிய உடம்பு சற்று அடங்கியது. அதன் மூச்சு சீரானது. 


கூட வந்த நூற்றுக்கணக்கான கங்காருகள் அருகிலிருந்து பற்றைகள், மரங்கள், சருகுகள் என்று எல்லாவற்றிற்குள்ளேயும் நுழைந்து புற்களைத் தேடித்தின்னும் சத்தம் கேட்டது. சிறுகூட்டமாய் காட்டுக்குள் தொலைதூரம் துள்ளிச்சென்று வந்த சில கங்காருகளிடம் பழங்களிருந்தன. மரத்தடியில் கொண்டுவந்து போட்டன. எட்டி ஒரு பழத்தை எடுத்தேன். நன்கு பழுத்திருந்த காட்டுத்தக்காளி. வெள்ளைக் கத்தரிக்காய் போலிருந்தது. மடியில் கிடந்த கங்காருவிற்கு வாயருகில் கொண்டு சென்றேன். தவிப்போடு கடித்துத் தின்றது. சிறிது நேரத்தில், தனது வாலை ஊன்றி என் மடியிலிருந்து எழுந்தது. அருகிலிருந்த மரத்தின் அடியில் புடைத்திருந்த வேரில் சாய்ந்துகொண்டது. 


தாகத்தில் நானும் ஒரு பழத்தை எடுத்துத் தின்றேன். மரத்தில் சாய்ந்த செங் கங்காருவின் கண்களில் வலி சற்று வடிந்திருந்தது. வயிற்றோடு சேர்ந்த குட்டிகளைச் சுமக்கும் பையில் சருகுகள் ஒட்டியிருந்தன. கம்பீரம் அடங்காத அதன் சடைத்த உடம்பு, ஏனைய கங்காருகளைக் காட்டிலும் வித்தியாசமாகத் தெரிந்தது. அவள் நிச்சயம் ஒரு வன-ராணிதான். அவளது விழிகள் என்னை தீராப் பரிவோடு நோக்குவதை, நேசமானதொரு நெருக்கமாக உணர்ந்தேன். 


சுற்றியெரியும் பெரும் வனத்தீ. தொடர்புகளற்ற அடர்ந்த காடு. காயத்தோடு வலி சுமந்த அவள். இத்தேசத்தின் ஆதிப் பிராணியுடன் நான். சில மணி நேரங்களுக்கு முன்னர்வரைக்கும், என் வாழ்வின் ஒரு பகுதி இவ்வாறு சந்தி பிரியும் என்று - இன்றுவரை இந்நாட்டில் வதிவிட உரிமையை உவந்தளிக்காத - ஆஸ்திரேலிய அரசாங்கமே சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன்.


வெடித்தெரியும் காடுகளின் சத்தம் அருகருகாகக் கேட்டது.


பெண் கங்காருகள் மரங்களுக்கடியில் தங்கள் நீண்ட வாலை மடித்துக் குந்திக்கொண்டு, மடியிலிருந்த குட்டிகளின் தலையை வருடிவிட்டன. சில கங்காரு குட்டிகள் தாயின் பையிலிருந்து வெளியே துள்ளிவந்து, புற்களை முகர்ந்து பார்த்துவிட்டு, உள்ளே பாய்ந்தன.


மீண்டும் நடக்கத்தொடங்கினோம். 


வன-ராணியும் எங்களுடன் அசைந்து அசைந்து நடக்கத் தொடங்கினாள். அவள் எனது அருகாமையை ஒவ்வொரு அடியிலும் எதிர்பார்த்தாள். அவளின் தடங்கள் நான் மெதுவாக நடப்பதற்குத் துணையாயின. அவளது கண்களில் வலி கண்ட கணங்களிலெல்லாம், எனது கைகளை நீட்டினேன். அவள் தனது ஒற்றைக் காலை என்னிடம் தந்தபடி நடந்தாள். துள்ளியெழவும் முயன்று தேறினாள். அவளின் கண்களில் உற்சாகத்தின் ஒளி தெரிந்தது.


ஏதாவதொரு பெருந்தெரு எட்டினால், அவ்வழியால் வரும் வாகனத்துக்காகக் காத்திருக்கலாம். காட்டுக்குள் இப்படியே எவ்வளவு தூரம் நடப்பது? எங்கே நடப்பது? மாலை கவிழத்தொடங்கியது. பகல் முழுவதும் நாசியை அடைத்துக்கொண்டிருந்த, காடு கருகிய நெடி சற்றுத் தணிந்தது. வெக்கை அடர்ந்த காற்று உடலெங்கும் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. ஆறு, குளம் தென்பட்டால், உள்ளிறங்கி உறங்கிவிடலாமென்றிருந்தது. பல மணி நேர நடையின் பிறகு, எதிர்ப்பட்ட பெருஞ்சுனையில் கங்காருகளுடன் இறங்கி நீராடினேன். 


இருள் மிகக்கனமானதொரு அச்சத்தைக் கொண்டுவந்தது. இந்த இருட்டை வெட்டவெளியில் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், இக்காட்டுக்குள் எப்படிச் சமாளிக்கப்போகிறேன்? ஒவ்வொரு நரம்பிலும் பீதி படரத்தொடங்கியது. 


எதிர்ப்பட்ட தடித்த மரமொன்றின் அடியில் அடைக்கலமானேன். என்னைச் சூழக் கங்காருங்கள் சருகுகளின் மீது உடல் சரித்துக்கொண்டன. நீராடிய வன-ராணியின் காயங்கள் நன்கு காய்ந்துபோனது தெரிந்தது. நான் சாய்ந்த மரத்தின் மறு பக்கத்தில் பெருங்களைப்புடன் தானும் சாய்ந்துகொண்டாள். 


முன்னிரவு தாண்டியும் உறக்கம் வரவில்லை. இவ்வளவுக்கு என்னைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். பொலீஸார் எனது காரை மீட்டிருப்பார்கள். தீ தின்று அரைவாசியாவது எஞ்சியிருக்குமா? எனது அத்தனை தொடர்பிலக்கங்களும் அடங்கிய தொலைபேசி. அனைத்தையும் எண்ணி எண்ணித் தின்று தீர்த்திருக்கும் அந்த நெருப்பு. கடைசியாகக் கண்ட சுவாலைகளின் உஷ்ணம் இன்னமும் எனது கண்களுக்குள்ளேயே நடனமாடியது. 


அண்ணாந்து படுத்தேன். சிறுதுளி ஒளியில் வானம் மங்கலாய் தெரிந்தது. கரிய சித்திரங்கள் வரைந்ததுபோல மரக்கிளைகள் குறுக்காக அசைந்தன.. காடுமிழ்ந்த புகை இலவாரா வான் முழுக்க அடர்ந்துபோயிருந்தது. தூரத்துக்காடுகள் எரிந்து அடங்கியிருக்குமா? இரவோடிரவாக பெருந்தீ பதுங்கிப் பதுங்கி எம்மை நோக்கி வந்துவிடாதா? எதுவும் புரியவில்லை.


சருகுகளின் சிறிய அரவத்துக்கும் கங்காருகள் கண் விழித்து, தலையை உயர்த்திப் பார்த்தன. தங்கள் கூர்மையான செவிகளை மடிப்பதும் விரிப்பதும் இரவின் அமைதியில் தெளிவாகக் கேட்டது. நடுநிசி தாண்டியும் தூக்கம் வரவில்லை. எழுந்திருந்தேன். பலநூறு சோடிக்கண்கள் என்னை நோக்கிப் பார்த்தன. மீண்டும் சரிந்தேன். தொடர் நடையின் களைப்பும் பசியும் நீள் துயிலில் பூரணமாய் சாய்த்துவிட்டது. வன-ராணியின் தூக்க ஓசை தாலாட்டுவதுபோலிருந்தது.


விடிந்தது.


மக்-பைகள் அடித்தொண்டையிலிருந்து குறுகுறுக்கும் சத்தங்களாலும் கொக்கபரா பறவைகளின் கொக்கரிக்கும் ஒலிகளாலும் காடதிர திடுக்குற்று எழுந்தேன். 


சுற்றிவர அதே கங்காருக் கூட்டம். தங்கள் மடியை குடைவதும் தலையைத் தரையில் போட்டுப் புரட்டுவதுமாக, எனக்காகக் காத்திருந்தவேளையில் தங்களை ஆயத்தப்படுத்தியவண்ணமிருந்தன. கழுத்தில் ஆழமான வெட்டுக்காயமொன்றுடன், என்னை முதன் முதலாகப் பார்த்த அதே கங்காருவும் வன-ராணியும் என் முன்னால் உற்சாகமாய் குந்தியிருந்தன. அவற்றின் கண்களில் என்னை அழைத்துச் செல்வதற்கான ஒளி தெரிந்தது. 


முந்தைய நாளை நினைத்தேன். பெரும் அதிசயமாயிருந்தது. நான் பேசி எத்தனை மணிநேரமாகிவிட்டது. நான் பாதுகாப்பாக இருந்தேன். பயமின்றிப் பயணித்தேன். பசியின்றி நிறைவடைந்தேன். இவ்வளவுக்கும் கடந்த அத்தனை மணி நேரத்திலும் எனக்கு மொழி தேவைப்படவேயில்லை. எனக்கே ஆச்சரியமாயிருந்தது.


கங்காருகளின் அருகாமை எனக்குள் ஒரு வழமையான உணர்வைத் தந்தது. 


வன-ராணியைப் பார்த்து – 


“என்ன…போவமா” – என்றேன்.


அவள் ஏனைய கங்காருகளைப் பார்த்துவிட்டு, திரும்பவும் என்னைப் பார்த்தாள். பல்லாயிரம் ஆண்டுகள் இத்தேசத்தில் வாழ்ந்தாலும், அவைதான் அந்தக் கங்காருகள் கேட்ட முதல் தமிழ் வார்த்தைகளாக இருக்கலாம். 


வன-ராணி என்னைப் பார்த்தாள். நான் புன்னகைத்தேன்.


நான் எழுந்து சில அடிகள் நடக்கத் தொடங்கியதும் கங்காருகள் பயணத்தை ஆரம்பித்தன. இரவின் கனம் வடிந்துவிட்டிருந்தது. காட்டுத்தீயின் வெக்கையும் அடங்கிவிட்டது. பறவைகளின் சத்தம் காடு முழுவதும் மீண்டும் குதூகலமாகக் கேட்டது. புதிய விலங்கொன்றின் நடமாட்டத்தை ஒலிபரப்புவதில் அத்தனை பறவைகளும் பரவசமாயிருந்தன. பல பறவைக் கூட்டங்கள் என்னைத் தேடி வந்து தலைக்குமேல் பறந்துவிட்டுப்போயின. 


இரண்டு மணி நேர நடைக்குப் பிறகு, காட்டை ஊடறத்த பெரு வெளிச்சம் விழுந்தது. அதன்வழி, வேகமாகத் துள்ளத் தொடங்கிய வன-ராணியுடன் ஓடத்தொடங்கினேன். கங்காருகளுக்கு அது உற்சாகமாயிருந்தது. 


கனமரங்கள் அண்டிய பெருவெளியோடு நீண்ட தார்ப்பாதை தெரிந்தது. அது நான் இதுவரையில் கண்டிராத புதிய வளைவோடு இருவழிப் பாதையாக இருந்தது. பெருவீதியைப் பார்த்தவாறு வெளியை வேகமாகக் கடந்தேன். தெருவோரத்தை அடைந்ததும், எனது பயணம் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன். உடலெங்கும் ஒட்டியிருந்த சருகுகளையும் தூசியையும் தட்டினேன். 


இந்தத் தார்ப்பாதை வழியாக நடந்தால், நிச்சயம் எவரையாவது சந்திக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. வன-ராணியுடன் நூற்றுக்கணக்கான கங்காருகள் தெருவின் இருமருங்கிலும் காத்திருந்தன. என்னை வழியனுப்பும் நேரம் வந்துவிட்டதை அவையும் உணர்ந்திருக்கவேண்டும். 


வெயில் சுடர்விடத்தொடங்கியது. அவ்வெளியில் மீண்டும் வெக்கை சூழ்ந்தது. எனக்குத் தாகமெடுத்தது. தெருவோர மரநிழலில் குந்தினேன். கங்காருகள் பக்கத்துக்குக் காட்டுப் புற்களில் சரிந்திருந்து என்னையே பார்த்தவண்ணமிருந்தன. வன-ராணி என்னருகில் குந்தியிருந்தாள். அவளது கண்களில் முன்னர் கண்ட காயத்தின் துயரம் மீண்டும் படர்ந்தது.


மதியம் தாண்டிய பிறகு, தொலைவில் ஒரு சிவப்பு நிற வாகனம் வருவது தெரிந்தது. ஓடிச்சென்று தெரு மத்தியில் நின்றுகொண்டேன். காங்காருகள் அனைத்தும் வீதியின் ஒரத்துக்கு வந்தன. என்னையும் வாகனத்தையும் மாறி மாறிப் பார்த்தன. வாகனத்தை நிறுத்தும்படி, இரண்டு கைகளையும் விரிந்து, மேலும் கீழுமாக அசைத்தேன். வன-ராணி அசைந்து வந்து என்னருகிலேயே நின்றுகொண்டாள். வாகனம் ஓரம் வந்தது. அதிலிருந்து வயதான தடித்த வயோதிபர் ஒருவர் இறங்கினார். நடந்ததைச் சொல்லி, அவரோடு வாகனத்தில் ஏறினேன். வாகனம் என்னைச் சுமந்தபடி புறப்பட்டது. 


வன-ராணி எங்கள் வாகனத்திற்கு அருகில் ஓடிவந்தாள். கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தேன். 


உடல் கடுக்கும் வலியோடு அவள் ஓடிவந்த வேகத்தை, அவளை மடியில் தாங்கிய என் கைகள் முழுவதுமாய் உணர்ந்தன. பிரிவின் ஏக்கம் இதயத்தில் பெரும்பாரமாய் இறங்கியது. வாகனம் வேகமெடுத்தது. கண்ணீரோடு பிரிந்த வன-ராணியின் உருவம், தூரத்தில் புள்ளியாய் தெரிந்து மறைந்தது. 


(2)



பெருவனத்தீ அனர்த்தம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னரான ஒரு காலை வேளை, ரயிலில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அன்றைய பத்திரிகையைப் புரட்டியபோது ஐந்தாவது பக்கச் செய்தி இப்படியிருந்தது. 


“விக்டோரிய – நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையில் கங்காருகளின் தொல்லை அதிகரித்திருப்பதாலும் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த கங்காருகளின் பெருக்கம் எதிர்பார்த்ததை விட கூடியிருப்பதாலும் நேற்றிரவு இலவாரா காட்டுப் பகுதியில் இருபதாயிரம் கங்காருகள் கொலை செய்யப்பட்டன”


என் விரல்கள் விறைத்தன. பத்திரிகையை மூடினேன். அப்பெருங்காட்டை நோக்கி இப்பொழுதே ரயிலில் இருந்து இறங்கி ஓடவேண்டும்போலிருந்தது. விழிகள் கண்ணீரில் பாரமாயின.


வன-ராணி என் முன்னால் வந்து தலை சரித்துப் பார்த்தாள். இரு கைகளாலும் முகத்தை மூடினேன். எனக்கு முன்னாலிருந்த சீனப்பெண்மணி “ஆர் யூ ஓகே” – என்றாள்.


“நோ…” – என்றேன்.


நான் நானாக இல்லை என்பதை அவளுக்கு மாத்திரமல்ல. இந்த உலகில் எவருக்குமே எப்படியுரைப்பது என்று புரியாமல் நடுங்கினேன். பத்திரிகையை அவளிடம் நீட்டினேன். ஐந்தாம் பக்கச் செய்தியை எனது நடுங்கும் விரல்களால் சுட்டிக்காட்டினேன். என் குரலில் ஓசையில்லை.


அவளருகிலிருந்த ஆஸ்திரேலியப் பெண்மணி, பத்திரிகையை எட்டிப்பார்த்தாள். உடைந்தழுத என் முகத்தைப் பாராமலேயே எனக்கு முன்னாலிருந்தவளிடம் - 


“ஆஸ்திரேலியாவில் கங்காருகளின் எண்ணிக்கை வகைதொகையின்றிப் பெருகி, பொதுமக்களுக்கு பேரிடரைத் தருகிறது. அதனால், அரசாங்கம் ஆண்டுதோறும் முப்பது லட்சம் கங்காருகளைக் களையெடுக்கிறது. இதுவொன்றும் புதிய விடயமல்ல” 


மிகச்சாதாரணமாகச் சொல்லிமுடித்தவளின் பதிலால் என் முன்னாலிருந்த சீனப்பெண் குழும்பிப்போனாள். 


“முப்பது லட்சம்…..” 


ஆச்சரியத்தில் அவள் கன்னத்திலிருந்த கண்ணாடி ஏறி இறங்கியது.


“ஆம்…சில ஆண்டுகளில் அதற்குக் கூடுதலாகவும்…..”


“ஆனால், கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கில்லையா? தேசிய விலங்கை அரசாங்கமே கொலை செய்வது அநியாயம் இல்லையா….”


சீனப்பெண்ணின் ஆச்சரியம் தீரவில்லை. பெரும் அநீதியொன்றை நம்பமுடியாதவளாகக் கேள்விகளைத் தொடர்ந்தாள்.

சீனப்பெண்ணின் அறியாமையை எண்ணித் தான் கவலைகொள்வதுபோல ஒரு களைத்த புன்னகையை உதிர்த்தாள் அந்த ஆஸ்திரேலியப்பெண்.


“சகோதரி, நாகரிம் வளராத ஆதிகாலத்தில் ஆஸ்திரேலியாவில் பல கோடி கங்காருகளிருந்தன. அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டமெங்கும் பல மடங்குகளாயின. ஆனால், இப்போது இரண்டரைக்கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் ஐம்பதுகோடி கங்காருகள் வசிக்கின்றன. நம்பமுடியுதா உன்னால்? இந்தக் கட்டாக்காலி கங்காருகள் உன் பண்ணைகளிலும் வாழிடங்களிலும் வந்து தொந்தரவு செய்தால், அவற்றை எப்படிக் கலைப்பாய்….”


சீனப்பெண் குறுக்கிட்டாள். 


“புரிகிறது….ஆனால், தேசிய விலங்கு என்று இந்த நாடு ஒரு விலங்கினை மதிப்பளித்துக்கொண்டு, மறுபக்கத்தில் லட்சக்கணக்கில் அதனைக் கொலை செய்வது, புரிந்துகொள்ளவேமுடியாத துயரான புதிராயுள்ளதே…..இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நாட்டில் கப்டன் குக் வந்து இறங்கியபோது, அவரைக் கங்காருகள்தான் முதலில் சென்று வரவேற்றதாக வரலாற்றில் கங்காருவுக்கு எவ்வளவு பெருமைகளையெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்….இது என்ன பித்தலாட்டம்”


அவள் சலித்தாள்.


“அரசாங்கம் வெளிநாட்டு விலங்குகளைக் கொல்லவில்லையே, உள்நாட்டு விலங்குகளைத்தானே கொலை செய்கிறது…..”


அழுத்தமான குரலில் கூறிவிட்டு, தானிறங்கவேண்டிய தரிப்பு வந்துவிட்டது என்றபடி, அந்த ஆஸ்திரேலியப் பெண் எழுந்து சென்றாள்.


ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த சீனப்பெண்ணிடம் பத்திரிகையை வாங்கினேன். ஐந்தாம் பக்கத்தைப் பிரித்தேன். 


சுட்டுக்கொல்லப்பட்ட கங்காருகளை நீண்ட கறுத்த லொறியின் பின்னால், கம்பியொன்றில் வரிசையாகக் கொழுவியிருந்த வனத்துறையினர், அவற்றிற்குப் பக்கத்தில் நின்று எடுத்துக்கொண்ட படமும் பெரிதாகப் பிரசுரமாயிருந்தது. கழுத்தில் இழுத்துக்கொழுவிய கம்பிகளில் அத்தனை கங்காருகளினதும் விழிபிதுங்கிய சடலங்கள், சூட்டுக்காயங்களுடன் கறுத்துப்போயிருந்தன. அந்த வரிசையில் வன-ராணியை என் விழிகள் தேடின.


முற்றும்

2 Comments


santhamurthyrights
Mar 22, 2024

பிரிய மனமில்லா கங்காருகள். எரியும் தணல் தடிகளை கொண்டுவந்து எரியாத காட்டின் பகுதியில் எறியும் பருந்துகள்.தொல்லை கொடுக்கும் தேசிய விலங்குகளை குற்ற உணர்வின்றி லட்சக் கணக்கில் கொன்றழிக்கும் மனிதர்கள்.  மனதைப் பிசையும் கதை. நன்றி,தெய்வீகன்!

...... சாந்தமூர்த்தி

Like

santhy.e
Mar 20, 2024

நேர் நின்று பார்த்த ஓர் உணர்வை தந்தது....:மொழி தேவைப்படவில்லை".....வனராணி மனதில் குடி கொண்டு விட்டாள்.


அதே வேளை தீ இல்லாவிட்டால் இந்த காடு எப்படி ரம்மியமாக இருந்திருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

Like
  • Youtube
  • social
  • Instagram
  • Facebook
  • Twitter

பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

Thanks for subscribing!

© 2023 - 2050 எழுத்தாளர் தெய்வீகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
bottom of page